Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 328)
நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்
சிஷ்யன் உகப்பிலேயூன்றிப் போரும்; ஆசார்யன் உஜ்ஜீவனத்திலே யூன்றிப்போரும்.
இப்படி செய்து போருமிடத்தி லிருவர்க்குமிரண்டும் ஸமப்ரதாநமாயிருக்குமோ வென்கிற சங்கையிலே யருளிச்செய்கிறார் (சிஷ்யனுகப்பிலே) என்று தொடங்கி.
இப்படியாக இருவரும் செய்து வரும்போது, இருவரும் செய்யும் காரியங்கள் ஒத்திருக்கவேண்டுமா என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
– அதாவது, சிஷ்யன் சேஷபூதனாகையாலே சேஷியான ஆசார்யனுடைய ப்ரீதியிலே யூற்றமாய்ப்போரும்; ஆசார்யன் பரமக்ருபாவானாகையாலே தன்னுடைய சிஷ்யனானவிவன் ஸம்ஸார துத்தீர்ணனாய் உஜ்ஜீவிக்கையிலே யூற்றமாய்ப் போருமென்கை. ஆகையால், சிஷ்யனுக்கு ப்ரியகாரணமும் ஆசார்யனுக்கு ஹிதகரணமுமே ப்ரதாநமென்று கருத்து.
சிஷ்யன் ஆசார்யனுக்கு அடிமைப்பட்டவன் என்பதால் தனது எஜமானனாகிய ஆசார்யனின் மகிழ்வில் எப்போதும் குறியாக இருப்பான். ஆசார்யன் சிஷ்யனிடம் மிகுந்த கருணை கொண்டவன் என்பதால், தனது சிஷ்யனாகிய இவன் ஸம்சாரம் என்ற கடலைக் கடந்து கரையேறவேண்டும் என்பதில் குறியாக இருப்பான். எனவே சிஷ்யன் ஆசார்யனுக்கு இனிமையானவற்றைச் செய்யவேண்டும், ஆசார்யன் சிஷ்யனுக்கு நன்மையானவற்றைச் செய்யவேண்டும் என்பதே முக்கியம் என்று கருத்து.