Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 327)

நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்

சிஷ்யன் தான் ப்ரியத்தை நடத்தக்கடவன்; ஈச்வரனைக் கொண்டு ஹிதத்தை நடத்தக்கடவன்; ஆசார்யன் மாறாடி நடத்தக்கடவன்.

இருவரு மிரண்டையும் அந்யோந்யம் நடத்தும் க்ரமமென்னென்ன அருளிச் செய்கிறார் (சிஷ்யன்) என்று தொடங்கி.

இந்த இருவரும் ஒருவரை ஒருவர் நடத்திக்கொள்ளும் முறை என்ன என்பதை அருளிச்செய்கிறார்.

அதாவது சிஷ்யனாசார்யனுக் கிரண்டையும் நடத்துமிடத்தில், தன் ஸ்வரூபாநுகுணமாக ஆசார்ய முகோல்லாஸமே புருஷார்த்தமென்று நினைத்து தன்னுடைய கிஞ்சித்காராதிகளாலே தானாசார்யனுக்கு ஸர்வகாலமும் ப்ரியத்தை நடத்திப் போரக்கடவன்; மங்களாசாஸநபரனாகையாலே இவ்விபூதி ஸ்வபாவத்தால் திருவுள்ளத்தி லொரு கலக்கம் வாராதொழியவேணுமென்றும், அப்படி யேதேனுமென்று வந்த காலத்தில் இத்தைப் போக்கித் தந்தருளவேணுமென்றும் ப்ரார்த்தித்து, ஈச்வரனைக் கொண்டு ஹிதத்தை நடத்தக் கடவனென்கை. (ஆசார்யன் மாறாடி நடத்துகையாவது) – ஹிதைக பரனாகையாலே இவனுக்கு ஸ்வரூபஹாநி வாராதபடி ஹேயோபாதேயங்களினுடைய ஹாநோபாதாநங்களில் ஸ்காலித்யம் பிறவாமல் நியமித்து, ஸர்வகாலமும் நல்வழி நடத்திக்கொண்டு போருகையாகிற ஹிதத்தைத் தான் நடத்தி, த்ருஷ்டத்தில் ஸங்கோசத்தால் இவன் மிகவும் நலங்குமளவில் இருந்த நாளைக்கு இவன் நலங்காமல் இவையுமவனுக்குண்டாம்படி திருவுள்ளம் பற்றி யருளவேணுமென்றர்த்தித்து, ஈச்வரனைக் கொண்டு ப்ரியத்தை நடத்தக்கடவனென்கை.

சிஷ்யன் ஆசார்யனுக்கு இரண்டையும் நடத்தும்போது, தனது ஸ்வரூபத்துக்கு ஏற்றபடி, ஆசார்யனின் திருமுகம் மலர்தல் என்பதே மிகவும் உயர்ந்த பயன் என்று எண்ணி, தனது கைங்கர்யங்களால் தனது ஆசார்யனுக்கு அனைத்துக் காலகட்டங்களிலும் விருப்பமானவற்றையே செய்தபடி இருக்கக்கடவன். திருப்பல்லாண்டு பாடுவதில் நோக்கம் உள்ளவனாக, இந்த உலகத்தின் இயல்பு காராணமாக திருவுள்ளத்தில் எந்தவிதமான கலக்கங்களும் ஏற்படக்கூடது என்றும், அப்படியே ஏதேனும் சம்பவித்தால் அதனை நீக்கித் தரவேண்டும் என்று வேண்டிக்கொண்டும், ஸர்வேச்வரன் மூலமாக ஆசார்யனுக்கு நல்லவற்றைச் செய்யவேண்டும். (ஆசார்யன் மாறாடி நடத்துகையாவது) – சிஷ்யனின் நலத்தில் நோக்கம் உள்ளவராக இருப்பதால், தனது ஸ்வரூபத்திற்கு எந்தவிதமான கேடும் உண்டாகாமல், தாழ்ந்த விஷயங்களில் ஈடுபடாமல் நல்ல விஷயங்களில் கைக்கொண்டு, இதிலிருந்து மாறாமல் இருந்து, எல்லா காலகட்டத்திலும் நல்வழி நடத்திக் கொண்டு போதல் என்பதைச் செய்து வரவேண்டும்; மேலும் உலகில் உள்ள வறுமை காரணமாக இவன் கலங்கும்போது “தான் இவனோடு உள்ள காலம் முடிய இவன் சோர்ந்து போகாமல், நன்மை மட்டுமே ஏற்படவேண்டும் என்று திருவுள்ளம் பற்றவேண்டும்” என்று ஸர்வேச்வரன் மூலம் சிஷ்யனுக்கு நன்மை செய்யவேண்டும்.