Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 326)
நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்
சிஷ்யனு மாசார்யனும் அந்யோந்யம் ப்ரிய ஹிதங்களை நடத்தக் கடவர்கள்.
– இனி, இந்த ஸதாசார்ய ஸச்சிஷ்யர்களுடைய பரிமாற்றமிருக்கும்படியை அருளிச்செய்கிறார் மேல் (சிஷ்யனுமாசார்யனும்) என்று தொடங்கி.
அடுத்து சிறந்த ஆசார்யன், சிறந்த சிஷ்யன் ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் எவ்விதம் நடந்து கொள்வார்கள் என்பதை அருளிச்செய்கிறார்.
(அந்யோந்யம் ப்ரியஹிதங்களை நடத்துகையாவது) சிஷ்ய னாசார்யனுக்கு ப்ரியஹிதங்களிரண்டையும் நடத்துகையும், ஆசார்யன் சிஷ்யனுக்கு ப்ரியஹிதங்களிரண்டையும் நடத்துகையும். (நடத்தக்கடவர்கள்) என்றது - இதினுடைய அவச்யகரணீயத்வம் தோற்றுகைக்காக.
– (அந்யோந்யம் ப்ரியஹிதங்களை நடத்துகையாவது) – சிஷ்யன் ஆசார்யனுக்கு பிடித்தமானவற்றையும், அவனுக்கு நன்மை அளிப்பதையும் செய்யவேண்டும். ஆசார்யன் சிஷ்யனுக்குப் பிடித்தவற்றையும், நன்மை அளிப்பதையும் செய்தல் வேண்டும். (நடத்தக் கடவர்கள்) – இந்த இரண்டையும் அவசியம் செய்யவேண்டும் என்பதால் “கடவர்கள்” என்று விதித்தார்.