Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 325)
நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்
உபகார ஸ்ம்ருதிக்கு முதலடி ஆசார்யன்பக்கல் க்ருதஜ்ஞதை; முடிந்த நிலம் ஈச்வரன் பக்கல் க்ருதஜ்ஞதை.
– இவ்வுபகார ஸ்ம்ருதி ப்ரஸங்கத்திலே அதினுடைய ப்ரதம சரமாவதிகளை தர்சிப்பிக்கிறார் (உபகார ஸ்ம்ருதிக்கு) என்று தொடங்கி.
– இப்படியாகச் செய்ந்நன்றி அறிதல் என்பதைக் கூறுவதான இந்த இடத்தில், செய்ந்நன்றி அறிதல் காரணமாக ஏற்படும் முதல் நிலை மற்றும் இறுதி நிலை ஆகியவற்றை அருளிச்செய்கிறார்.
இச்சேதநன் முந்துற அநுஸந்திப்பது, அஜ்ஞாத ஜ்ஞாபநமுகத்தாலே தனக்கு அகிலத்தையு மறிவித்து பகவத்விஷயத்தைக் கைப்படுத்தின வாசார்யன் பண்ணின உபகாரத்தையாகையாலே, (உபகார ஸ்ம்ருதிக்கு முதலடி ஆசார்யன் பக்கல் க்ருதஜ்ஞதை) என்கிறது. க்ருதஜ்ஞதையுமுபகார ஸ்ம்ருதியும் பர்யாயம். ஆசார்ய கௌரவம் நெஞ்சில் படப்பட அவ்விஷயத்திலே தன்னைக் கொண்டு வந்து சேர்த்த வீச்வரன் பண்ணின க்ருஷி பரம்பரையைப் பின்னையநுஸந்திக்கையாலே (முடிந்தநில மீச்வரன் பக்கல் க்ருதஜ்ஞதை) என்கிறது. இதுவு மீச்வரன் பக்கலுபகார ஸ்ம்ருதி யென்றபடி. இத்தால் பகவத்விஷயத்தை யுபகரித்த வாசார்யன் பண்ணின உபகாரத்தை யநுஸந்திக்க விழிந்தால், அவனுடைய வைபவம் நெஞ்சிலே ஊற்றிருந்தவாறே, இப்படி யிருக்கிற விஷயத்தை நாம் பெற்றது எம்பெருமானாலேயன்றோ வென்று தத்க்ருதோபகாராநுஸந்தாநத்திலே சென்று தலைக்கட்டு மென்றதாய்த்து.
சேதனன் முதலில் எண்ணவேண்டியது என்னவென்றால் - தனது அறிவில்லாத நிலை என்பதைப் போக்கும்விதமாக தான் அறியவேண்டிய அனைத்தையும் தனக்கு உணர்த்தி, பகவத்விஷயத்தில் தன்னை அகப்படுத்திய ஆசார்யன் செய்த உபகாரத்தையே ஆகும்; ஆகவே “உபகார ஸ்ம்ருதிக்கு முதலடி ஆசார்யன் பக்கல் க்ருதஜ்ஞதை” என்பதன் மூலம் – செய்ந்நன்றி அறிதலின் முதல் நிலை ஆசார்யன் செய்த உபகாரத்தை பாராட்டுதல் என்றாகிறது. க்ருதஜ்ஞதை (நன்றி உரைத்தல்), உபகாரஸ்ம்ருதி (செய்ந்நன்றி அறிதல்) ஆகிய இரண்டும் ஒரே பொருள் அளிப்பவை ஆகும். ஆசார்யனின் பெருமை என்பது நமது நெஞ்சில் அதிகரிக்க அதிகரிக்க, அந்த ஆசார்யன் விஷயத்தில் தன்னைக் கொண்டு வந்து சேர்த்த ஈச்வரனின் செயல்களை எண்ணுதல் என்பதை “முடிந்தநில மீச்வரன் பக்கல் க்ருதஜ்ஞதை” என்கிறார். அதாவது இதுவும் ஸர்வேச்வரனிடம் நாம் காண்பிக்கவேண்டிய செய்ந்நன்றி அறிதல் ஆகிறது. ஆகவே பகவத்விஷயத்தை நமக்கு உபதேசம் செய்து உபகாரம் செய்த ஆசார்யனின் உபகாரத்தை எண்ணும்போது, அந்த ஆசார்யனின் வைபவம் நமது உள்ளத்தில் ஊன்றியிருக்கும் நிலை ஏற்படுகிறது; இதனால் “இப்படிப்பட்ட ஆசார்ய விஷயத்தை நாம் அடைந்தது அந்த ஸர்வேச்வரனால் அல்லவோ?” என்று ஸர்வேச்வரன் செய்த உபகாரத்தை எண்ணுவதில் சென்று நிற்கும் என்று கருத்து.