Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 323)
நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்
“மாதா பிதா யுவதய:” என்கிற ச்லோகத்திலே இவ்வர்த்தத்தைப் பரமாசார்யரு மருளிச்செய்கிறார்.
இப்படி தாமருளிச் செய்த இவ்வர்த்தத்தி லாப்திக்குடலாக இது பரமாசார்ய வசந ஸித்தமுமென் றருளிச்செய்கிறார் (மாதா) என்று தொடங்கி.
– இப்படியாகத் தான் அருளிச்செய்த விளக்கம் நம்புவதற்கு ஏற்றதே என்று உணர்த்தும்விதமாக, இது பரமாசார்யராக உள்ள ஸ்வாமி ஆளவந்தார் வாக்கியத்திலும் உள்ளது என்று காண்பிக்கிறார்.
அதாவது “மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:” என்று, ஐஹிக போகங்களையும், “ஸர்வம்” என்று, அநுக்த ஸகலகதநத்தாலே மந்த்ர தேவதா பலாதிகளையு மெடுத்து, இத்தனையும் ஆழ்வார் திருவடிகளே யென்றருளிச் செய்கையாலே, அந்த ச்லோகத்திலே யிவ்வர்த்தத்தைப் பரமாசார்யரான ஆளவந்தாரு மருளிச் செய்தாரென்கை.
அதாவது, ஸ்தோத்ரரத்னம்(3) – மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி: – தாயும் தந்தையும், மக்களும், செல்வமும் – என்று இந்த உலகத்தில் உள்ள இன்பங்களையும், “ஸர்வம்” என்ற பதம் மூலம் இவற்றில் கூறப்படாத மற்ற அனைத்து பலன்களையும் கூறிய பின்னர் – இவை அனைத்தும் நம்மாழ்வாரின் திருவடிகளே ஆகும் – என்று அருளிச்செய்தார். இதனால் இந்த ச்லோகத்தில் இங்கு உரைக்கப்பட்ட பொருளையே ஆளவந்தாரும் முன்பு அருளிச்செய்தார் என்று கருத்து.