Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 322)
நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்
மந்த்ரமும் தேவதையும் பலமும் பலாநுபந்திகளும் பலஸாதநமும் ஐஹிக போகமுமெல்லா மாசார்யனே யென்று நினைக்கக்கடவன்.
இப்படி உக்தலக்ஷணயுக்தனான சிஷ்யனுக்கு ஸ்வாசார்ய விஷயத்தி லுண்டாக வேண்டும் ப்ரதிபத்தி விசேஷத்தை விதிக்கிறார் மேல் (மந்த்ரமும்) என்று தொடங்கி.
– இவ்விதம் கூறப்பட்ட லக்ஷணம் கொண்டுள்ள ஒரு சிஷ்யன், தனது ஆசார்ய விஷயத்தில் எவ்விதம் சிந்திக்கவேண்டும் என்பதை அருளிச்செய்கிறார்.
– அதாவது “மந்தாரம் த்ராயத இதி மந்த்ர:” என்கிறபடியே அநுஸந்தாத்ரு ரக்ஷகமாயிருந்துள்ள திருமந்த்ரமும், தத்ப்ரதிபாத்ய பரதேவதையும், தத்ப்ரஸாத லப்யமான கைங்கர்யரூப மஹாபலமும், ததநுபந்திகளான அவித்யாதி நிவ்ருத்தி பூர்வகமான ஸ்வஸ்வரூபாவிர்ப்பாவமும் ஸாலோக்யதிகளுமாகிற விவையும், ததாவித பலப்ரதமான ஸாதநமும், புத்ர தார க்ருஹ க்ஷேத்ர பச்வந்நாத் யநுபவரூபமான இஹலோகத்தில் போக்யமாகிற இவையெல்லாம் நமக்கு நம்முடைய ஆசார்யனேயென்று ப்ரதிபத்தி பண்ணக்கடவ னென்கை. “குருரேவ பரம்ப்ரஹ்ம குருரேவ பராகதி: குருரேவ பராவித்யா குருரேவ பராயணம், குருரேவ பர:காமோ குருரேவ பரந்தநம் யஸ்மாத் ததுபதேஷ்டாஸௌ தஸ்மாத் குருதரோ குரு:” என்றும், “ஐஹிகாமுஷ்மிகம் ஸர்வம் ஸசாஷ்டாக்ஷரதோ குரு: இத்யேவம் யே ந மந்யந்தே த்யக்தவ்யாஸ்தே மநீஷிபி:” என்றும் இப்படி சாஸ்த்ரங்களிற் சொல்லுகையாலே, (நினைக்கக்கடவன்) என்று விதிரூபேண அருளிச்செய்கிறார்.
மந்தாரம் த்ராயத இதி மந்த்ர: - தன்னை உச்சரிப்பவனைக் காப்பதால் மந்த்ரம் எனப்படுகிறது – என்பதற்கு ஏற்ப த்யானம் செய்பவர்களைக் காப்பாற்றுவதான திருமந்த்ரம், அந்த மந்த்ரத்தால் கூறப்படும் பரதேவதையாகிற ஸர்வேச்வரன், அந்த ஸர்வேச்வரனின் க்ருபை மூலம் கிட்டவல்ல கைங்கர்யம் என்ற உயர்ந்த பலன், அதன் காரணமாக ஏற்படுகின்ற “அறியாமை விலகுதல்” என்பதால் உண்டாகவல்ல தனது ஸ்வரூபம் குறித்த ஞானம், ஸர்வேச்வரனுடன் இருத்தல் மற்றும் அவனை அனுபவித்தபடி இருத்தல் போன்ற நிலை, இவற்றை அளிக்கவல்ல சாதனங்கள், புத்ரன் மனைவி வீடு நிலம் பசு மற்றும் உணவு – இவை அனைத்தும் ஆசார்யனே என்று எண்ணவேண்டும். கீழே உள்ள வரிகளைக் காண்க: குருரேவ பரம்ப்ரஹ்ம குருரேவ பராகதி: குருரேவ பராவித்யா குருரேவ பராயணம், குருரேவ பர:காமோ குருரேவ பரந்தநம் யஸ்மாத் ததுபதேஷ்டாஸௌ தஸ்மாத் குருதரோ குரு: – குருவே பரப்ரஹ்மம், குருவே உயர்ந்த கதி, குருவே உயர்ந்த வித்யை, குருவே உயர்ந்த செல்வம், எந்தக் காரணத்தினால் இந்தக் குரு மந்த்ரத்தை உபதேசம் செய்தானோ, அந்தக் காரணத்தினால் அவன் அனைத்திலும் மேம்பட்டவன் ஆவான். ஐஹிகாமுஷ்மிகம் ஸர்வம் ஸசாஷ்டாக்ஷரதோ குரு: இத்யேவம் யே ந மந்யந்தே த்யக்தவ்யாஸ்தே மநீஷிபி: – இந்த உலகில் மட்டும் அல்லாமல், அந்த உலகிலும் பலன் அளிக்கவல்ல திருஅஷ்டாக்ஷர மந்த்ரத்தை உபதேசித்தவன் குரு ஆவான். இப்படியாக யார் நினைக்கவில்லையோ அவர்கள் நல்லவர்களால் கைவிடத்தக்கவர்கள். ஆக இப்படியாகப் பல சாஸ்த்ரங்கள் உரைப்பதால் “நினைக்கக்கடவன்” என்று விதித்தார்.