Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 321)

நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்

சிஷ்யனென்பது ஸாத்யாந்தர நிவ்ருத்தியும் பலஸாதந சுச்ருஷையும், ஆர்த்தியும் ஆதரமும் அநஸூயையும் உடையவனை.

– ஆக, (தான் ஹிதோபதேசம் பண்ணும்போது) என்று தொடங்கி, (ஆசார்யத்வ பூர்த்தியில்லை) என்னுமளவும் ஆசார்ய ஸ்வரூப சோதநம் பண்ணி அநந்தரம், அதின்மேல் வந்த ப்ராஸங்கிக சங்கைகளையும் பரிஹரித்தார் கீழ்; மேல் சிஷ்ய ஸ்வரூப சோதநம் பண்ணுகிறார் (சிஷ்யமென்பது) என்று தொடங்கி.

– “தான் ஹிதோபதேசம் பண்ணும்போது” என்றுள்ள சூர்ணை 308 தொடங்கி, “ஆசார்ய பூர்த்தியில்லை” என்றுள்ள சூர்ணை 316 முடிய உள்ள சூர்ணைகளில் ஆசார்ய ஸ்வரூபம் குறித்து ஆராய்ந்து அருளிச்செய்தார். அதனைத் தொடர்ந்துள்ள நான்கு சூர்ணைகளில் அதனைக் குறித்து எழுந்த சந்தேகங்களை விளக்கி அவற்றை நீக்கினார். இனி சிஷ்யனுடைய ஸ்வரூபம் குறித்து அருளிச்செய்கிறார்.

– (சிஷ்யனென்பது) என்றது, உபதேச ச்ரவண மாத்ரங்கொண்டு மேலெழுந்தவாரியாகச் சொல்லுகையன்றிக்கே, சிஷ்யனென்று முக்க்யமாகச் சொல்லுவதென்றபடி. (ஸாத்யாந்தர நிவ்ருத்தியாவது), ஸ்வரூப விரோதியான ஐச்வர்ய கைவல்யங்களாகிற ப்ராப்யாந்தரத்தில் மறந்து மந்வயமற்றிக்கை. அன்றிக்கே, இவ்வாசார்யன்றன்னையொழிய வேறொரு ப்ராப்யவஸ்து வறியேனென்றிருக்கை யாகவுமாம். (பலஸாதந சுச்ரூஷையாவது), “குரு சுக்ரூஷயா வித்யா” என்கிறபடியே ஆசார்யனைத் தான் பண்ணுகிற சுக்ரூஷையாலே ஸந்தோஷிப்பித்து ஜ்ஞாநோபஜீவநம் பண்ணுகை ப்ராப்தமாகையாலே, ஆசார்யன் தனக்குபகரிக்கிற தத்த்வஜ்ஞாநமாகிற பலத்தினுடைய ஸித்திக்கு ஸாதநமாயிருந்துள்ள ஆசார்யபரிசர்யை. அன்றிக்கே, ஸ்வரூபாநுரூபமான பலத்திலும் ஸாதநத்திலு முண்டான ச்ரோதுமிச்சை யாகவுமாம். அதவா, ஆசார்யமுகோல்லாஸமாகிற பலத்துக்கு ஸாதநமான தத்பரிசர்யை யென்னவுமாம். (ஆர்த்தியாவது), “இருள் தருமாஞாலம்” என்கிறபடியே பிறந்த ஜ்ஞாநத்துக்கு விரோதியான இவ்விபூதியினின்றும் கடுகப் போகப் பெறாமையாலேயுள்ள க்லேசம். அன்றிக்கே, ஆசார்ய விக்ரஹாநுபவாலாபத்தில் க்லேசமாகவுமாம். (ஆதரமாவது), உத்தரோத்தர மநுபுபூஷை விளையும்படி ஆசார்யனருளிச் செய்கிற பகவத்கணாநுபவத்தில் மென்மேலு முண்டாகா நிற்கிற விருப்பம். அன்றிக்கே, ஆசார்யனைக் கண்டால் பசியன் சோற்றைக் கண்டாப்போலே ததநுபவ கைங்கர்யங்களிலே மண்டி விழும்படியான விருப்பமாகவுமாம். (அநஸூயையாவது), ஆசார்யன் பகவத் பாகவத வைபவங்களை பரக்க உபபாதியா நின்றால், “ப்ரவக்ஷ்யாம்யநஸூயவே” என்னும்படி அதிலஸூயையற்றிருக்கை. அன்றிக்கே, ஆசார்யனுடைய உத்கர்ஷத்தையும் ஸப்ரஹ்மசாரிகளுடைய உத்கர்ஷத்தையுங் கண்டால் அதிலஸூயை யற்றிருக்கை யென்னவுமாம். “அஸூயாப்ரஸவபூ:” என்கிறவிதுக்கு, “ஹிதம் சொன்னவனுடைய உத்கர்ஷமேயாய்த்துப் பொறாதது” என்றிறே பூர்வர்களருளிச் செய்தது. பகவத் விஷயத்திலுட்பட அஸூயை பண்ணாநின்றால் ததீயவிஷயத்தில் சொல்லவேணுமோ, “இதந்து தே குஹ்யதமம் ப்ரவக்ஷ்யாம் யநஸூயவே” என்றானிறே. ஆக இப்படியிருந்துள்ள ஸத்குண ஸம்பந்நனையாய்த்து நேரே சிஷ்யனென்பது.

(சிஷ்யன் என்பது) – ஆசார்யன் கூறுகின்ற உபதேசம் கேட்பது என்று அளவுடன் கூடிய நிலை என்பது மட்டும் அல்லாமல், சிஷ்யன் என்று முக்கியமாக உரைக்கிறார். (ஸாத்யாந்தர நிவ்ருத்தியாவது) – தனது ஆத்ம ஸ்வரூபத்திற்கு விரோதியாக உள்ள ஐச்வர்யம், கைவல்யம் போன்றதான மற்ற தாழ்ந்த பலன்களில் தன்னை மறந்தும் விருப்பம் இல்லாமல் இருத்தல் ஆகும். அல்லது, “இந்த ஆசார்யனைத் தவிர அடையத் தகுந்த வஸ்துவாக வேறு எதனையும் அறியேன்”, என்றுள்ள நிலையாகும். (பலஸாதந சுச்ரூஷையாவது) – கச்யபஸம்ஹிதயில் – குரு சுக்ரூஷயா வித்யா – கல்வி என்பது ஆசார்யனுக்குச் செய்யும் கைங்கர்யம் மூலமே – என்று கூறப்பட்டபடி தான் செய்கின்ற கைங்கர்யம் காரணமாக ஆசார்யனை மகிழும்படிச் செய்து, அவனிடமிருந்து உபதேசம் செய்யப்பெறுவது ஏற்றதாக உள்ளதால், ஆசார்யன் தனக்கு உபகாரம் செய்யும் விதத்தில் அளிக்கின்ற தத்வஞானம் என்பதான பலனை அளிப்பதற்கு கருவியாக உள்ள ஆசார்யனுக்குச் செய்யப்படும் தொண்டு. அல்லது சிஷ்யனாக உள்ள தனது ஸ்வரூபத்திற்குத் தகுந்த பலனிலும், அதனை அளிக்கவல்ல சாதனத்திலும் உண்டான “கேட்கவேண்டும்” என்ற ஆசையாகும். அல்லது, ஆசார்யனின் திருமுகமலர்த்தி என்ற பலனை அளிக்கவல்ல சாதனமாக உள்ள அவனுக்குச் செய்யும் கைங்கர்யம் என்றும் கூறலாம். (ஆர்த்தியாவது) – திருவாய்மொழி (10-6-1) – இருள்தருமா ஞாலம் – என்பதற்கு ஏற்ப, நமக்கு உண்டான உண்மையான ஞானத்திற்குத் தடையாக உள்ள இந்த உலகத்திலிருந்து விரைவாக நீங்காத காரணத்தால் ஏற்பட்டும் துன்பம். அல்லது ஆசார்யனின் திருமேனி அனுபவம் கிட்டாத காரணத்தால் உண்டாகும் துக்கம் என்றும் கொள்ளலாம். (ஆதரமாவது) – மேன்மேலும் அனுபவிக்கவேண்டும் என்ற ஆசை ஏற்படும்படியாக ஆசார்யன் அருளிச்செய்த ஸர்வேச்வரனுடைய குணங்களை அனுபவிப்பதில் ஏற்படும் மேன்மேலும் ஆசை என்று கூறலாம். அல்லது, மிகுந்த பசி கொண்ட ஒருவன் உணவைக் கண்டால் அதன் மேலே விழுவது போன்று, ஆசார்யனைக் கண்டால் அவனுடைய கைங்கர்யங்களில் மண்டி விழுவது போன்ற ஆசை என்றும் கூறலாம். (அநஸூயையாவது) – ஸர்வேச்வரன் மற்றும் பாகவதர்கள் ஆகியோரின் வைபவங்கள் குறித்து ஆசார்யன் விரிவாக உபதேசம் செய்யும்போது, ஸ்ரீமத் பகவத்கீதை (9-1) – ப்ரவக்ஷ்யாம்யநஸூயவே – பொறாமை இல்லாத உனக்கு – என்பதற்கு ஏற்ப எந்தவிதமான பொறாமையும் இல்லாமல் இருக்கவேண்டும். அல்லது, ஆசார்யனுக்கு உள்ள பெருமை மற்றும் தன்னுடன் சேர்ந்து படிக்கும் சிஷ்யர்களின் பெருமை ஆகியவற்றைக் கண்டால், அது குறித்து பொறாமை கொள்ளாமல் இருத்தல் என்றும் கூறலாம். ஸ்தோத்ரரத்னம் (62) – அஸூயாப்ரஸவபூ: – பொறாமைக்கு பிறப்பிடமாக உள்ளவன் – என்று ஆளவந்தார் அருளிச்செய்த வரிக்கு, நமது பூர்வாசார்யர்கள் ஹிதம் சொன்னவனுடைய உத்கர்ஷமேயாய்த்துப் பொறாதது – நமக்கு நன்மையை அளிக்கவல்ல உபதேசத்தைச் செய்தவனின் பெருமையைக் கூட பொறுத்துக் கொள்ள இயலாதவன் – என்று விளக்கம் உரைத்தது காண்க. ஸர்வேச்வரன் விஷயத்தில் பொறாமை கொள்ளும் ஒருவன், அவனுடைய அடியார்களின் விஷயத்திலும் பொறாமை கொள்வானோ என்று கூறவும் வேண்டுமோ? ஸ்ரீமத் பகவத்கீதையில் (9-1) – இதந்து தே குஹ்யதமம் ப்ரவக்ஷ்யாம் யநஸூயவே – இரகசியமாக பாதுகாத்துவைக்க வேண்டிய இந்த ஞானத்தை பொறாமை இல்லாத உனக்கு உபதேசிக்கிறேன் – என்றது காண்க. இப்படியாகப் பல நற்குணங்கள் உள்ளவனை சிஷ்யன் என்றார்.