Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 320)

நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்

சேதநனுடைய ருசியாலே வருகையாலே.

அத்தை யுபபாதிக்கிறார் (சேதநனுடைய ருசியாலே வருகையாலே) என்று.

ஒரு குறிப்பிட்ட காரணத்தால் இந்தத் தன்மைகள் அந்த மந்த்ரங்களுக்கு வந்தது என்று கூறியதை மேலும் விவரிக்கிறார்.

– அதாவது, பகவந் மந்த்ரங்களாகையாலே மோக்ஷப்ரதத்வ சக்தியுண்டாயிருக்கச்செய்தே, இவற்றினுடைய க்ஷுத்ர பலப்ரதத்வம், ப்ரக்ருதி வச்யனான சேதநனுடைய க்ஷுத்ர பல ருசியாலே வருகையாலே யென்கை. ஐச்வர்ய காமர்க்கு கோபால மந்த்ராதிகளும் புத்ரகாமர்க்கு ராமமந்த்ராதிகளும், வித்யாகாமர்க்கு ஹயக்ரீவ மந்த்ராதிகளும், விஜயகாமர்க்கு ஸுதர்சந நாரஸிம்ஹ மந்த்ராதிகளுமாய், இப்படி நியமேந க்ஷுத்ர பலங்களையே கொடுத்துப் போருகிறவிது, சேதநருடைய ருச்யநுகுணமாக இவ்வோ மந்த்ரங்கள் இவ்வோ பலங்களைக் கொடுக்கக் கடவதென்று ஈச்வரன் நியமேந கல்பித்து வைக்கையிறே, அதுதான் சேதநருடைய ருச்யநுகுணமாகக் கல்பித்ததாகையாலே, அவற்றுக்கவை ஸ்வாபாவிகமன்று, ஔபதிகமென்னலாமிறே.

ஸர்வேச்வரனைக் குறித்த மந்த்ரங்கள் என்பதால் அவற்றுக்கு மோக்ஷத்தை அளிக்கக்கூடிய சக்தி உள்ளபோதிலும், தாழ்ந்த பலன்களை அளிக்கக்கூடிய தன்மை என்பது இந்த மந்த்ரங்களுக்கு எவ்விதம் ஏற்படுகிறது என்றால் – சரீரத்தில் அகப்பட்டுள்ள ஜீவாத்மாவின் தாழ்ந்த பலன்களில் உள்ள விருப்பம் காரணமாகவே ஏற்படுகிறது. ஐச்வர்யம் விரும்புகிறவர்களுக்கு கோபால மந்த்ரங்கள் போன்றவையும், புத்திரர்களை விரும்புகிறவர்களுக்கு ராம மந்த்ரங்கள் போன்றவையும், கல்வி மற்றும் வித்யை ஆகியவற்ற விரும்புகிறவர்களுக்கு ஹயக்ரீவ மந்த்ர்ரங்களும், வெற்றியை விரும்புகிறவர்களுக்கு சுதர்சனர் மற்றும் நரஸிம்ஹ மந்த்ரங்களும் என்று பலவாக உள்ள இந்த மந்த்ரங்களுக்கு தாழ்ந்த பலன்களை அளிக்கின்ற தன்மை என்பது, மனிதர்களின் விருப்பத்திற்கு ஏற்றபடி “இன்ன மந்த்ரம் இன்ன பலன் அளிக்கும்” என்று ஸர்வேச்வரன் நியமித்த காரணத்தினால் உண்டாகிறது. ஆக இந்த மந்த்ரங்கள் இது போன்று தாழ்ந்த பலன்கள் அளித்தல் என்பது மனிதர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஸர்வேச்வரன் ஸங்கல்பம் செய்த காரணத்தினால், அவற்றுக்கு அந்தத் தன்மை இயல்பானது அல்ல, ஏதோ ஒரு காரணத்தால் வந்ததே ஆகும் என்று கருத்து.