Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 316)

நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்

ஸம்ஸார வர்த்தகங்களுமாய் க்ஷுத்ரங்களுமான பகவந் மந்த்ரங்களை யுபதேசித்தவர்களுக்கு ஆசார்யத்வ பூர்த்தியில்லை.

பகவந் மந்த்ரங்களி லேதனுமொன்றை உபதேசித்தவர்களுக்கு மாசார்யத்வமில்லையோ வென்ன அருளிச்செய்கிறார் (ஸம்ஸார வர்த்தங்களுமாய்) என்று தொடங்கி.

– ஸர்வேச்வரனுடைய மந்த்ரங்களில் ஏதேனும் ஒன்றை உபதேசம் செய்தால் அவர்களுக்கு ஆசார்யனாகும் தன்மை இல்லையோ (திருமந்த்ரம் உபதேசித்தால் மட்டும் தான் ஆசார்யத் தன்மை உண்டாகுமோ) என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

– அதாவது, ஸம்ஸாரத்தை நிவர்த்திப்பியாத மாத்ரமன்றிக்கே வளர்க்குமவையாய், பெருமையின்றிக்கே க்ஷுத்ரங்களுமாயிருந்துள்ள ததிதர பகவந்மந்த்ரங்களை யுபதேசித்தவர்களுக்கு, உபதேஷ்ட்ருத்வ ப்ரயுக்தமான ஆசார்யத்வ ப்ரதீதிமாத்ர மொழிய தத்பூர்த்தியில்லையென்கை.

ஸம்ஸாரத்தை நீக்கித் தராமல், அதனை மேன்மேலும் வளர்ப்பதாகவும், பெருமை ஏதும் இல்லாமல் தாழ்ந்தவையாகவே உள்ள ஸர்வேச்வரனுடைய மற்ற மந்த்ரங்களை உபதேசம் செய்பவர்களுக்கு, உபதேசம் செய்யும் செயலைக் கொண்டு மட்டுமே ஆசார்யனாகிய தன்மை உண்டாகிறதே அல்லாமல், அவர்களுக்கு ஆசார்யன் ஆகும் தன்மை நிறைவாக இல்லை.