Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 315)
நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்
நேரே ஆசார்யனென்பது ஸம்ஸார நிவர்த்தகமான பெரிய திருமந்த்ரத்தை யுபதேசித்தவனை.
இப்படி உபதேசாநுகுண நியமங்களை தர்சிப்பித்த வநந்தரம், உபதேசிக்குமளவில் இன்னமந்த்ரத்தை யுபதேசித்தவனையே ஸாக்ஷாதாசார்யன் என்பதென்கிறார் (நேரே) என்று தொடங்கி.
– இப்படியாக உபதேசத்திற்கு அவசியமான நியமங்கள் பலவற்றையும் அருளிச்செய்த பின்னர், உபதேசம் செய்யும்போது இன்ன மந்த்திரத்தை உபதேசித்தவனே நேரடியான ஆசார்யன் என்று இந்தச் சூர்ணையில் அருளிச்செய்கிறார்.
(நேரே ஆசார்யனென்பது) என்கிறது, ஆசார்யத்வம் குறைவறவின் றியிருக்கச் செய்தே ப்ரதீதிமாத்ரங்கொண்டு சொல்லுமளவன்றின்கே ஸாக்ஷாதாசார்ய னென்று சொல்லுவதென்றபடி. (ஸம்ஸார நிவர்த்தகமான பெரிய திருமந்த்ரத்தை யுபதேசித்தவனை) என்றது, “ஐஹலௌகிக மைச்வர்யம்” இத்யாதிப்படியே அகில பலப்ரதமா யிருந்ததேயாகிலும் அந்யபலன்களில் தாத்பர்யமின்றிக்கே மோக்ஷபலத்திலே நோக்காயிருக்கையாலே, “ஸர்வ வேதாந்த ஸாரார்த்தஸ் ஸம்ஸாரார்ணாவதாரக: கதிரஷ்டாக்ஷரோ ந்ரூணாமபுநர்பவ காங்க்ஷிணாம்” என்கிறபடியே ஸம்ஸார நிவர்த்தகமாய், அத ஏவ “மந்த்ராணாம் பரமோ மந்த்ரோ குஹ்யாநாம் குஹ்யமுத்தமம், பவித்ரஞ்ச பவித்ராணாம் மூலமந்த்ரஸ் ஸநாதந:” என்கிறபடியே ஸர்வமந்தராந்தரோத்க்ருஷ்டமான பெருமையையுடையத்தான திருமந்த்ரத்தை, ஸம்ஸார நிவர்த்தகத்வ ப்ரதிபத்தியோடே யுபதேசித்தவனை யென்கை. த்வயம் பூர்வோத்தர வாக்யங்களாலே இதில் மத்யம சரமபத விவரணாமாய், சரமச்லோகம் பூர்வோத்தரார்த்தங்களாலே அதில் பூர்வோத்தர வாக்ய விவரணமா யிருக்கையாலே, மற்ற ரஹ்ஸ்யத்வயமும் ப்ரதம ரஹஸ்யமான வித்தோடே அநந்யமா யிருக்கையாலே, இத்தைச் சொல்லவே அவற்றினுடைய வுபதேசமும் தன்னடையே சொல்லிற்றாமென்று திருவுள்ளம் பற்றி (பெரியதிருமந்த்ரத்தை உபதேசித்தவனை) என்கிறார். ஆகையால் இது ரஹஸ்யத்ரயோபதேசத்துக்கு முபலக்ஷணம்.
(நேரே ஆசார்யன் என்பது) – ஆசார்யனாக உள்ள தன்மை குறைவில்லாமல் உள்ளபோதிலும். மேலாகக் காணும்போது “இவன் ஆசார்யன்” என்று மனதில் தோன்றும் விதத்தில் மட்டும் அல்லாமல், நேரடியாகவே ஆசார்யனாக உள்ள தன்மை என்று கருத்து. (ஸம்ஸார நிவர்த்தகமான பெரிய திருமந்த்ரத்தை யுபதேசித்தவனை) – பாஞ்சராத்ரத்தில் – ஐஹலௌகிக மைச்வர்யம் – திருமந்த்ரம் அனைத்து ஐச்வர்யங்களையும் அளிக்கும் – என்று கூறுவதற்கு ஏற்ப, திருமந்த்ரமானது அனைத்து பலன்களையும் அளிக்கவல்லது என்றுள்ளபோதிலும், இது போன்று மற்ற பலன்களை அளிப்பது அதன் நோக்கம் அல்ல; மோக்ஷம் என்ற உயர்ந்த பலனை அளிப்பது மட்டுமே அதன் நோக்கம் ஆகும். ஆகவே பாஞ்சராத்ரத்தில் – ஸர்வ வேதாந்த ஸாரார்த்தஸ் ஸம்ஸாரார்ணாவதாரக: கதிரஷ்டாக்ஷரோ ந்ரூணாமபுநர்பவ காங்க்ஷிணாம் – அனைத்து வேதாந்தங்களின் ஆழ்கருத்தை தனது அர்த்தமாகக் கொண்டதும், ஸம்ஸாரம் என்ற பெரிய கடலைத் தாண்டுவிப்பதும் ஆகிய திருவெட்டெழுத்து என்பதான திருமந்த்ரம் மட்டுமே, மீண்டும் பிறவி என்பதை விரும்பாத மனிதர்களின் புகலிடமாக உள்ளது – என்பதற்கு ஏற்ப, ஸம்ஸாரத்திலிருந்து விடுவிப்பதாக திருமந்த்ரம் உள்ளது. ஆகவே பாஞ்சராத்ரம் – மந்த்ராணாம் பரமோ மந்த்ரோ குஹ்யாநாம் குஹ்யமுத்தமம், பவித்ரஞ்ச பவித்ராணாம் மூலமந்த்ரஸ் ஸநாதந: – எல்லையற்ற காலமாக இருந்து வரும் திருமந்த்ரம் என்பது மந்த்ரங்கள் அனைத்திலும் உயர்ந்த மந்த்ரம், இரகசியங்களில் உயர்ந்த இரகசியம், தூய்மையானவற்றில் மிகவும் தூய்மையானது – என்று கூறுவதற்கு ஏற்ப, அனைத்து மந்த்ரங்களைக் காட்டிலும் மிகுந்த பெருமை கொண்டதான திருமந்த்ரத்தை, ஸம்ஸாரம் என்ற பெருங்கடலைக் கடக்க வைக்கும் தன்மைகள் கொண்டது என்ற சிந்தனையுடன் உபதேசம் செய்தவனை - என்று கருத்து. த்வ்ய மந்த்ரத்தில் உள்ள இரண்டு வரிகளும் திருமந்த்ரத்தின் நடுப்பதமான “நம:” என்பதையும், இறுதிப்பதமான ”நாராயணாய” என்பதையும் விவரிப்பதாக உள்ளன. சரம ச்லோகத்தின் இரண்டு பாதிகளும் த்வயத்தின் இரண்டு வரிகளை விவரிப்பதாகவே உள்ளன. ஆகவே த்வ்யம், சரமச்லோகம் ஆகிய இரண்டும் முதல் இரகசியமாக உள்ள திருமந்த்ரத்தைக் காட்டிலும் வேறாக இல்லாத காரணத்தினால், திருமந்த்ரத்தை விவரித்து உபதேசம் செய்தால், மற்ற இரண்டும் தானே உபதேசிக்கப்பட்டவைகள் ஆகின்றன என்று கூற திருவுள்ளம் பற்றியவராக “பெரியதிருமந்த்ரத்தை உபதேசித்தவனை” என்றார். எனவே இது மூன்றையும் உபதேசம் செய்தமையையே காட்டுகிறது.