Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 313)
நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்
ஆசார்யனுக்கு சிஷ்யன் பக்கல் க்ருபையும் ஸ்வாசார்யன் பக்கல் பாரதந்த்ர்யமும் வேணும்.
– ஆசார்யனுக் கிரண்டு குண மவச்யம் வேணுமென்கிறார் (ஆசார்யனுக்கு) என்று தொடங்கி.
ஆசார்யனுக்கு இரண்டு குணங்களும் அவசியம் என்று இந்தச் சூர்ணையில் அருளிச்செய்கிறார்.
அதாவது உபதேஷ்டவான வாசார்யனுக்கு, உஜ்ஜிஜீவிஷுவாய் வந்து உபஸந்நனான சிஷ்யன்பக்கல், ஐயோ! என்றிரங்கி அவனுஜ்ஜீவிக்கைக் குறுப்பான உபதேசாதிகளைப் பண்ணுகைக்கீடான க்ருபையும், தன்னைக் கர்த்தாவாக நினையாதே அத்தலைக்குக் கரணபூதனான வநுஸந்திக்கைக் கீடான ஸ்வாசார்ய விஷயத்தில் பாரதந்த்ர்யமும் அவச்யமுண்டாக வேண்டுமென்கை.
உபதேசம் செய்கின்ற ஆசார்யனுக்கு, உய்வதற்கான எண்ணம் கொண்டு தன்னை வந்தடைந்த சிஷ்யனிடம் – ஐயோ – என்ற இரக்கம் எழவேண்டும்; அவன் உய்வதற்கு ஏற்றதான உபதேசம் போன்றவற்றைச் செய்வதற்கு அவசியமான கருணை வேண்டும். தன்னை உபதேசம் செய்பவனாக எண்ணாமல், தனது ஆசார்யனுக்குத் தான் ஒரு கருவியாக மட்டுமே உள்ளோம் என்று எண்ணுவதற்கு அடிப்படையாக உள்ள தனது ஆசார்யனிடம் வசப்பட்டிருத்தல் என்பதும் வேண்டும்.