Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 312)
நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்
இப்படி யொழிய உபதேசிக்கில் இருவர்க்கும் ஸ்வரூப ஸித்தியில்லை.
இங்ஙனன்றி க்ரூரநிஷத்தமாக வடியில் சொன்ன விப்ரதிபத்தியோடே யுபதேசிக்கில் உபயஸ்வரூபமும் ஸித்தியாதென்கிறார் (இப்படியொழிய) என்று தொடங்கி.
இப்படியாக இல்லாமல், சூர்ணை 308ல் கூறப்பட்டதான, தள்ளப்பட வேண்டியவற்றில் மிகவும் கொடியதாக உள்ளதான மாறுபட்ட சிந்தனையுடன் உபதேசம் செய்தால் ஆசார்யனுக்கும் சிஷ்யனுக்கும் ஸ்வரூபம் ஏற்படாது என்று அருளிச்செய்கிறார்.
(இருவர்க்கும் ஸ்வரூபஸித்தியில்லை) என்கிறது - கீழ்ச்சொன்னபடியே யதா ப்ரதிபத்தியோடே யுபதேசிக்கிலொழிய ஈச்வரனிவனை யாசார்யனாக நினைப்பிடாமையாலே, உபதேஷ்டாவுக் காசார்யத்வமாகிற ஸ்வரூபஸித்தி யில்லை; இப்படி யதா ப்ரதிபத்தியோடே இவனுபதேசியாத வளவில் உபதேச சுத்தி யில்லாமையாலே, உபதேச பாத்ரமானவவனுக்கு சிஷ்யத்வமாகிற ஸ்வரூபஸித்தி யில்லை யென்கை.
மேலே கூறப்பட்டபடி, உள்ளது உள்ளபடி நேர்த்தியாக உபதேசம் செய்தால் அன்றி ஸர்வேச்வரன் இவனை ஆசார்யனாக ஏற்கமாட்டான் என்பதால், உபதேசம் செய்பவனுக்கு ஆசார்யன் என்ற ஸ்வரூபம் கிட்டாது. இவ்விதம் உள்ளது உள்ளபடி உபதேசம் செய்யாதபோது, செய்யப்பட்ட உபதேசம் என்பது கிட்டாமல் போவதால், உபதேசத்தைப் பெறுகின்ற சிஷ்யனுக்கு சிஷ்யத்தன்மை என்ற ஸ்வரூபம் கிட்டாது.