Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 311)

நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்

ஸாக்ஷாத்பலமும் ஆசார்யத்வம் ஸித்திக்கிறபடி யென்னென்னில்; தன் நினைவாலும் ஈச்வரன் நினைவாலும் ஸித்திக்கும்.

இப்படி யிவன் நினையாதிருக்க இப்பல சதுஷ்டயமும் சிஷ்யேச்வர ஸ்வாசார்யர்கள் நினைவாலே ஸித்திக்குமென்னுமிட மருளிச்செய்து, உபதேசத்துக்கு ஸாக்ஷாத் பலமாயுள்ளதும் உபதேஷ்டவான வாசார்ய பரதந்த்ரனுக் குபதேச பாத்ரமான விவனைக் குறித்துண்டா மாசார்யத்வமும் ஸித்திக்கும்படியை ப்ரச்நோத்தர ரூபேண வருளிச் செய்கிறார் (ஸாக்ஷாத்பலமும்) என்று தொடங்கி.

இப்படியாக இந்த சிஷ்யன் பலன்கள் குறித்து நினைக்காமல் உள்ளபோதிலும் இந்த நான்குவிதமான பலன்களும் சிஷ்யனுடையவும், ஈச்வரனுடையவும், ஆசார்யனின் ஆசார்யனுடையவும் நினைவு மூலம் உண்டாகிவிடும் என்பதை அருளிச்செய்கிறார்; மேலும் உபதேசத்திற்கு நேராக பலனாக உள்ளதும், உபதேசம் செய்பவனாகிய தனது ஆசார்யனுக்கு வசப்பட்டவனாகிய ஆசார்யனுக்கு உபதேசிக்கப்படும் சிஷ்யனைக் குறித்து உள்ள ஆசார்யனாகும் தன்மை எவ்விதம் ஏற்படுகிறது என்பதைக் கேள்வி பதில் வடிவில் அருளிச்செய்கிறார்.

(ஸாக்ஷாத்பலமாவது), உபதேசபாத்ரமான விவன் திருந்தி மங்களா சாஸநத்துகாளாகை; இது (தன் நினைவாலே ஸித்திக்கையாவது), உபதேஷ்டாவான தான் விப்ரதிபத்திக ளொன்றுமின்றி இதுவே பலமாக நினைத்து உபதேசிக்கவே அவனப்படி திருந்தி மங்களாசாஸநாதிகாரியாகை. (ஆசார்யத்வமாவது), தன்னை யாசார்ய பரதந்த்ரனாகவே யநுஸந்தித்திருக்கிற விவன் தன் பக்க லுபதேசங் கேட்கிறவனுக்கு ஆசார்யனாகை; இது (ஈச்வரன் நினைவாலே ஸித்திக்கையாவது), இப்படி தன்னையும் சிஷ்யனையும் பலத்தையும் விப்ரதிபத்தி பண்ணாதே உள்ளபடியநுஸந்தித்து உபதேசிக்கும் பரிபாகமுடையனானவிவன் இவனுக்காசார்யனென்று நினைப்பிட்டருளுகையாலே இவனுக்காசார்யத்வமுண்டாகை.

– (ஸாக்ஷாத்பலமாவது) - உபதேசிக்கப்படும் சிஷ்யன் திருந்தி ஸர்வேச்வரனுக்கு திருப்பல்லாண்டு பாடும்படியாக ஆவது. (தன் நினைவாலே ஸித்திக்கையாவது) – உபதேசம் செய்கின்ற ஆசார்யனாகிய தான், கருத்து மாறுபாடுகள் ஏதும் இன்றி உபதேசம் செய்தால் மட்டுமே பலன் என்று உபதேசிக்கும்போது, அவனும் அப்படியே திருந்தி ஸர்வேச்வரனுக்கு திருப்பல்லாண்டு பாடும்படியாக ஆதல். (ஆசார்யத்வமாவது) – தன்னைத் தனது ஆசார்யனுக்கு வசப்பட்டவனாகவே எண்ணியபடி உள்ள இந்த ஆசார்யன், தன்னிடம் உபதேசம் பெற வந்த சிஷ்யனுக்கு ஆசார்யனாக ஆதல். (ஈச்வரன் நினைவாலே ஸித்திக்கையாவது) – இப்படியாகத் தன்னையும், சிஷ்யனையும், பலத்தையும் மாறுபட்டு எண்ணாமல், உள்ளது உள்ளபடி உபதேசம் செய்கின்ற தன்மை கொண்ட இந்த ஆசார்யன், தனது ஆசார்யனே தனது சிஷ்யனுக்கும் ஆசார்யன் என்று எண்ணுவதால் இவனுக்கு ஆசார்யனாகும் தன்மை ஏற்படுகிறது என்று கருத்து.