Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 310)
நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்
நினையாதிருக்க இந்நாலு பலமும் ஸித்திக்கிறபடி யென்னென்னில்; சேஷபூதனான சிஷ்யன் நினைவாலே த்ருஷ்டபலம் ஸித்திக்கும்; ஈச்வரன் நினைவாலே உஜ்ஜீவனம் ஸித்திக்கும், ஆசார்யன் நினைவாலே பகவத் கைங்கர்யம் ஸித்திக்கும், உபகார ஸ்ம்ருதியாலே ஸஹவாஸம் ஸித்திக்கும்.
இப்படி யிவன் நினையாதிருக்க இந்நாலு பலமும் ஸித்திக்கிறபடி தானென்? என்கிற தஜ்ஜிஜ்ஞாஸு ப்ரச்நத்தை யநுவதித்துக்கொண்டு, அவை ஸித்திக்கும் வழி யருளிச் செய்கிறார் (நினையாதிருக்க) என்று தொடங்கி.
– இப்படியாக நினைக்காமல் உள்ளபோதிலும், அந்த நான்கு பலன்களும் அவனுக்குக் கிட்டும் என்பது எப்படி என்று அறிந்து கொள்ள விரும்புகிறவனுடைய கேள்வியை மனதில் கொண்டு, அவை கிட்டும் வழியை உரைக்கிறார்.
(சேஷபூதனான சிஷ்யன் நினைவாலே த்ருஷ்டபலம் ஸித்திக்கும்) என்றது- சிஷ்யனானவன் தனக்கு சேஷத்வமே ஸ்வரூபம் என்றநுஸந்தித்துக் கொண்டிருக்கை யாலே, கிஞ்சித்கார மில்லாதபோது சேஷத்வம் கூடாதென்று தன் ஸ்வரூப லாபத்துக்காகத் தன்னாலான கிஞ்சித்காரம் பண்ணிக்கொண்டு போருகையாலே, அர்த்த சுச்ரூஷைகளாகிற த்ருஷ்ட பலம் ஸித்திக்குமென்றபடி. (ஈச்வரன் நினைவாலே உஜ்ஜீவநம் ஸித்திக்கும்) என்றது, “எதிர் சூழல் புக்குத் திரிந்து” தன் விசேஷ கடாக்ஷங்களாலே அத்வேஷாதிகளை யுண்டாக்கி ஆசார்ய ஸமாச்ரணத்திலே மூட்டி இவ்வாசார்யனுடைய உபதேசாந்வயத்தை யுண்டாக்கி அதடியாக விவனை ஸம்ஸாரத்தில் நின்று மக்கரைப்படுத்த வேணுமென்கிற, எம்பெருமானுடைய க்ருபாகார்யமான நினைவாலே சிஷ்யனானவனுடைய வுஜ்ஜீவநம் ஸித்திக்குமென்றபடி. (ஆசார்யன் நினைவாலே பகவத் கைங்கர்யம் ஸித்திக்கும்) என்றது, இவன் ஹிதோபதேசம் பண்ணி மங்களாசாஸநத்துக் காளாம்படி சேதநரைத் திருத்துகிறவிது எம்பெருமான் திருவுள்ளத்துக்கு மிகவு முகப்பாகையாலே, இது பகவத் கைங்கர்யமன்றோ! என்றது ஸித்தித்திருக்கும் தன்னுடைய வாசார்யன் நினைவாலே உபதேஷ்டாவான தனக்கு பகவத் கைங்கர்யம் ஸித்திக்குமென்றபடி. (உபகார ஸ்ம்ருதியாலே ஸஹவாஸம் ஸித்திக்கும்) என்றது, அநாதிகால மஹங்கார மமகாரங்களாலே நஷ்ட ப்ராயனாய்க் கிடந்தவென்னை அஹேதுகமாக அங்கீகரித்து அஜ்ஞாத ஜ்ஞாபநமுகத்தாலே யவற்றில் ருசியை மாற்றி மங்களாசாஸநத்துக்காளாம்படி பண்ணின மஹோபகாரகனன்றோ என்கிற உபகார ஸ்ம்ருதியாலே, சிஷ்யனானவன் க்ஷணகாலமும் பிரியக்ஷமனன்றிக்கே கூடி நடக்கையா லவனோடுண்டான ஸஹவாஸம் தன்னடையே ஸித்திக்குமென்றபடி.
– (சேஷபூதனான சிஷ்யன் நினைவாலே த்ருஷ்டபலம் ஸித்திக்கும்) - சிஷ்யனாக உள்ளவன் தன்னுடைய ஸ்வரூபம் என்பது ஆசார்யனுக்கு அடிமைப்பட்டு இருப்பதே என்று எப்போதும் எண்ணியபடி உள்ளதால், “கைங்கர்யம் செய்யாதபோது அடிமைத்தனம் கிட்டாது” என்றுள்ள நிலை காரணமாக, தனது ஸ்வரூபம் கிட்டும் பொருட்டு தன்னால் இயன்ற கைங்கர்யம் செய்தபடி உள்ளதால், பொருள் மற்றும் கைங்கர்யம் ஆகிய இரண்டு பலன்களும் ஆசார்யனுக்குக் கிட்டும் என்று கருத்து. (ஈச்வரன் நினைவாலே உஜ்ஜீவநம் ஸித்திக்கும்) – திருவாய்மொழி (2-7-6 - எதிர்சூழல் புக்கு – என்பதற்கு ஏற்ப ஸர்வேச்வரன் தனது விசேஷமான கடாக்ஷங்கள் மூலம் சிஷ்யனுக்கு அத்வேஷம் (வெறுப்பு இல்லாமை) போன்ற தன்மைகளை ஏற்படுத்தி, ஆசார்யனைப் பற்றும்படியாகச் செய்து, ஆசார்யனின் உபதேசம் கிட்டும்படிச் செய்து, அதன் காரணமாக சிஷ்யனை ஸம்சாரம் என்ற பெருங்கடலில் இருந்து அக்கரை ஏறும்படிச் செய்யவேண்டும் என்ற ஸர்வேச்வரனின் கடாக்ஷம் மூலம் ஏஎற்படும் நினைவால், சிஷ்யன் கரையேறுதல் என்ற பலன் ஏற்படும். (ஆசார்யன் நினைவாலே பகவத் கைங்கர்யம் ஸித்திக்கும்) – ஆசார்யன் சிஷ்யனுக்கு நன்மைகள் பலவற்றையும் உபதேசம் செய்து, ஸர்வேச்வரனைக் குறித்த மங்களாசாஸநத்திற்கு ஆளாகும்படித் திருத்தும் செய்கை என்பது ஸர்வேச்வரனுடைய திருவுள்ளத்திற்கு மிகவும் மகிழ்சியை ஏற்படுத்தும் என்பதால், “இது பகவத் கைங்கர்யம் அல்லவோ” என்று எண்ணியுள்ள தனது ஆசார்யனுடைய கடாக்ஷம் காரணமாக, தனக்கு ஸர்வேச்வர கைங்கர்யம் கிட்டும் என்று கருத்து. (உபகார ஸ்ம்ருதியாலே ஸஹவாஸம் ஸித்திக்கும்) – எல்லையற்ற காலமாக “நான், எனது” என்ற எண்ணங்கள் காரணமாக ஆத்ம ஸ்வரூபத்தை இழந்து கிடந்த என்னை, எந்த ஒரு காரணமும் இல்லாமல், அறியாமையைப் போக்கும் வழிகள் மூலமாக அவற்றில் உள்ள ஆசைகளை மாற்றி, மங்களாசாஸநத்திற்கு நான் ஆளாகும்படிச் செய்த மிகப்பெரும் உபகாரம் செய்தவன் இந்த ஆசார்யன் என்ற செய்ந்நன்றி உணர்வு காரணமாக, சிஷ்யன் ஒரு நொடிக்கூட பிரிவதற்குப் பொறுமை இன்றி எப்போதும் கூடி இருப்பதனால் உண்டான சேர்த்தி என்பது தானாகவே உண்டாகிறது.