Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 309)
நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்
தன்னை மாறாடி நினைக்கையாவது தன்னை ஆசார்யனென்று நினைக்கை; சிஷ்யனை மாறாடி நினைக்கையாவது தனக்கு சிஷ்யனென்று நினைக்கை. பலத்தை மாறாடி நினைக்கையாவது த்ருஷ்ட ப்ரயோஜனத்தையும், சிஷ்யனுடைய உஜ்ஜீவனத்தையும் பகவத் கைங்கர்யத்தையும் ஸஹ சிஷ்யனுடைய உஜ்ஜீவனத்தையும் பகவத் கைங்கர்யத்தையும் ஸஹவாஸத்தையும் பலமாக நினைக்கை.
தன்னையும் சிஷ்யனையும் பலத்தையும் மாறாடி நினைக்கையாவதே தென்னு மாகாங்க்ஷையிலே, அவற்றை யுபபாதிக்கிறார் (தன்னை மாறாடி நினைக்கை யாவது) என்று தொடங்கி.
– ஆசார்யனாகிய தன்னையும், சிஷ்யனையும், உபதேச பலனையும் குறித்து முரணாக எண்ணுதல் என்பது எப்படி என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
– அதாவது, உபதேஷ்டாவான தன்னை யுள்ளபடி நினையாமல் (மாறாடி நினைக்கையாவது), உபதேச ஸமயத்தில் தன்னுடைய வாசார்யனையே யிவனுக் குபதேஷ்டாவாகவும் தான் அங்குத்தைக்குக் கரணபூதனாகவும் ப்ரதிபத்தி பண்ணிக் கொண்டு உபதேசிக்க வேண்டியிருக்க, அப்படிச் செய்யாதே, ஆசார்ய பரதந்த்ரனா யிருக்கிற தன்னை இவனுக்காசார்யனென்று நினைக்கை. உபதேச பாத்ரனான சிஷ்யனையுள்ளபடி நினையாமல் (மாறாடி நினைக்கையாவது), தன்னோபாதி இவனையும் தன்னுடைய வாசார்யனுக்கு சிஷ்யனாக ப்ரதிபத்தி பண்ணி உபதேசிக்க வேண்டியிருக்க, அது செய்யாதே, இவனைத் தனக்கு சிஷ்யனென்று நினைக்கை. உபதேச பலத்தை உள்ளபடி நினையாதே (மாறாடி நினைக்கையாவது), பரோபதேசம் பண்ணுமளவில் இவ்வாத்மா திருந்தி “ஆளுமாளார்” என்கிற விஷயத்துக்கு மங்களாசாஸநத்துக் காளாக வேண்டும் என்னுமிதுவே பலமாக உபதேசியாதே, இவனால் வரும் அர்த்த சுச்ரூஷாரூபமான த்ருஷ்ட ப்ரயோஜநத்தையாதல். சிஷ்யனானவிவன் ஸம்ஸாராத் உத்தீர்ணனாய் வாழுகையாகிற உஜ்ஜீவநத்தையாதல், திருநந்தவனாதிகளைச் செய்கிறதிலுங் காட்டிலோராத்மாவைத் திருத்தினால் எம்பெருமான் திருவுள்ள முகக்கையாலே இப்படியிருந்துள்ள பகவத் கைங்கர்யத்தையாதல், ஸம்ஸாரத்தி லிருக்கும் நாள் தன் தனிமை தீரக் கூடி வர்த்திக்கையாகிற ஸஹவாஸத்தையாதல் உபதேசத்துக்குப் பலமாக நினைக்கை யென்றபடி.
– உபதேசம் செய்பவனாகிய தன்னை உள்ளபடி எண்ணிக்கொள்ளாமல் (முரண்பாடாக நினைத்துக் கொள்ளுதல்) உள்ள நிலை என்னவென்றால் – உபதேசம் செய்கின்றபோது தனது ஆசார்யனே தன்னுடைய ரூபத்தில் இருந்து உபதேசம் செய்வதாகவும், தனது ஆசார்யனுக்குத் தான் ஒரு கருவியாக மட்டும் அங்கு உள்ளதாகவும் எண்ணியபடி உபதேசம் செய்யவேண்டியிருக்க, அவ்விதம் செய்யாமல், தனது ஆசார்யனுக்கு அடிமையாக உள்ள தன்னைத் தனது சிஷ்யனுக்குத் தானே ஆசார்யன் என்று எண்ணியிருப்பதாகும். தன்னிடம் உபதேசம் பெறுவதற்காக வந்த சிஷ்யனை உள்ளபடி எண்ணாமல் (முரண்பாடாக எண்ணுதல்) உள்ளது என்னவென்றால் – தன்னைப் போன்றே இந்த சிஷ்யனும் தனது ஆசார்யனுக்கு சிஷ்யன் என்று எண்ணாமல், அந்த சிஷ்யனைத் தனது சிஷ்யன் என்றே எண்ணுதல் ஆகும். உபதேசத்தால் வருகின்ற பலனை உள்ளபடி எண்ணாமல் (முரணாகச் சிந்தித்தல்) உள்ள நிலை என்னவென்றால் – உபதேசம் செய்யும்போது அந்த ஆத்மா திருந்தி, திருவாய்மொழி(8-3-3) – ஆளுமானார் – என்பதற்கு ஏற்ப உள்ள ஸர்வேச்வரனுக்கு மங்களாசாஸநம் செய்வதற்கு ஆளாகவேண்டும் என்பதே உபதேசத்தின் பலன் என்று எண்ணி உபதேசம் செய்யாமல், அந்த சிஷ்யனால் வரக்கூடிய பொருள் மற்றும் அவனால் தனக்குச் செய்யப்படும் கைங்கர்யம் என்பதான உலகவிஷயங்கள் குறித்த பயனை எண்ணுதல்; இந்த சிஷ்யன் ஸம்சாரத்தைக் கடந்து வாழ்ந்து கரையேறவேண்டும், ஸர்வேச்வரனுக்கு இவன் திருநந்தவனம் அமைத்தல் போன்ற கைங்கர்யம் செய்யவேண்டும் என்று எண்ணாமல், இந்த சிஷ்யனைத் திருத்தினால் ஸர்வேச்வரனின் உள்ளம் மகிழ்ந்து போகும் என்பதைப் பலனாகக் கொண்டு உபதேசித்தல்; இந்த உலகில் தான் ஜீவித்திருக்கும்வரை தனது தனிமையைப் போக்க தனது சிஷ்யனோடு கூடி வாழ்தல் என்பதே பலன் என்று எண்ணுதல் போன்றவையாகும்.