Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 308)

நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்

தான் ஹிதோபதேசம் பண்ணும்போது தன்னையும் சிஷ்யனையும் பலத்தையும் மாறாடி நினைக்கை க்ரூர நிஷித்தம்.

– அநந்தரம், (தான் ஹிதோபதேசம் பண்ணும்போது) என்று தொடங்கி, (உகப்பு முபகார ஸ்ம்ருதியும் நடக்கவேணும்) என்னுமளவாக, இவ்வதிகாரிக்குக் கீழ்ச் சொன்ன அர்த்த விசேஷங்களுக்கெல்லா முபதேஷ்டாவான ஆசார்ய விஷயத்திலுண்டாக வேண்டும் ப்ரதிபத்த்யநுவர்த்தந ப்ரகாரங்களை தர்சிப்பிக்கைக்காக, ஸதாசார்ய லக்ஷணம், ஸச்சிஷ்ய லக்ஷணம், ததுபயருடைய பரிமாற்றம் இவையிருக்கும்படியை ப்ரஸக்தாநு ப்ரஸக்தமாக வருளிச்செய்கிறர். இவ்வதிகாரிக்கு அசக்தி விஷயமான நிஷித்தங்கள் சொன்ன ப்ரஸங்கத்திலே, அவையெல்லாவற்றிலும் க்ரூரநிஷித்தம் பரோபதேச ஸமயத்தில் விப்ரதிபத்தியென் றருளிச்செய்கிறார் (தான் ஹிதோபதேசம்பண்ணும்போது) இத்யாதி வாக்யாத்தாலே.

– “தான் ஹிதோபதேசம் பண்ணும்போது” என்ற சூர்ணை 308 தொடங்கி, “உகப்பும் உபகார ஸ்ம்ருதியும் நடக்க வேணும்” என்றுள்ள சூர்ணை 365 முடிய உள்ள சூர்ணைகளில், அதிகாரி ஒருவனுக்கு மேலே கூறிய பலவற்றையும் உபதேசிக்கின்ற ஆசார்யனிடம் அந்த அதிகாரிக்கு இருக்க வேண்டிய மதிப்பு, அவரிடம் நடந்துகொள்ள வேண்டிய முறை ஆகியவற்றை உணர்த்தி திருவுள்ளம் பற்றினார். ஆகவே நல்ல ஆசார்யனின் இலக்கணம், நல்ல சிஷ்யனின் இலக்கணம், இவர்கள் ஒருவருடன் ஒருவர் பழகும் முறை போன்றவை குறித்து இப்போது நினைவில் உண்டாக, அவற்றை அருளிச்செய்கிறார். அதிகாரிக்கு அசக்தி ஏற்படக் காரணமாக உள்ள குற்றங்கள் குறித்து உரைத்தார்; அப்போது அங்கு கூறப்படவேண்டியதான – அவை அனைத்துக் குற்றங்களைக் காட்டிலும் கொடிய குற்றம் என்னவென்றால் ஆசார்யன் உபதேசம் செய்யும்போது அவருடன் கருத்து வேறுபாடு கொள்வது என்பதை இப்போது அருளிச்செய்கிறார்.

– அதாவது, கீழ்ப்ரகரணத்தில் சொல்லப்பட்ட அதிகாரி லக்ஷணங்களெல்லாவற்றாலும் குறைவற்றிருந்துள்ள தான், உஜ்ஜிஜீவிஷுக்களாய் வந்து தன்னை உபஸத்தி பண்ணினவர்களுக்கு உஜ்ஜீவநஹேதுவான மந்த்ரரூபஹிதத்தை உபதேசிக்குங் காலத்தில், உபதேஷ்டாவான தன்னையும், உபதேசபாத்ரனான சிஷ்யனையும் உபதேச பலத்தையும் விபரீத ப்ரதிபத்தி பண்ணுகை, பூர்வோக்த நிஷித்தங்களிற்காட்டில் க்ரூர நிஷித்தமென்கை. அவ்வோ நிஷித்தங்கள் இவன்றனக்கு நாசகமித்தனையிறே; அவ்வளவன்றிக்கே, இவனுக்கும் உபதேசங் கேட்டவனுக்கும் கேடாகையாலே இத்தை அவற்றிலுங் காட்டில் க்ரூர நிஷித்தமென்கிறது. (இருவர்க்கும் ஸ்வரூப ஸித்தியில்லை) என்றிறே மேல் சொல்லத்தேடுகிறது.

– (தான் ஹிதோபதேசம் பண்ணும்போது) – கடந்த ப்ரகரணத்தில் கூறப்பட்டதான அதிகாரி லக்ஷணங்கள் அனைத்தாலும் குறைவில்லாதபடி இருக்கும் ஆசார்யனாகிய தான், இந்த ஸம்ஸாரத்திலிருந்து கரையேற வேண்டும் என்ற எண்ணத்துடன் தன்னை அடைந்தவர்களுக்கு, கரையேற்ற வைப்பதற்குக் காரணமாக உள்ள திருமந்த்ர வடிவத்தில் உள்ள நன்மையைக் குறித்து உபதேசம் செய்யும் காலத்தில். (தன்னையும்) – இப்படியாக அந்த மந்த்ரத்தைக் குறித்து உபதேசம் செய்யும் தன்னையும், அந்த உபதேசம் பெறுகின்ற சிஷ்யனையும், அந்த உபதேசத்தின் பலனையும் விபரீதமாக பொருள் கொள்ளுதல் என்பது முன்பு கூறப்பட்டதான பலவிதமான தோஷங்களைக் காட்டிலும் மிகவும் கொடியது என்று கருத்து. முன்பு கூறப்பட்ட பலவிதமான தோஷங்கள், அவற்றைக் கொண்ட அதிகாரிக்கு மட்டுமே தீமையை ஏற்படுத்தும். ஆனால் இப்போது உரைக்கப்பட்ட குற்றம் என்பது ஆசார்யனுக்கும், உபதேசம் கேட்ட சிஷ்யனுக்கும் சேர்த்துத் தீமையை ஏற்படுத்தும் என்பதால், இதனை அவற்றைக் காட்டிலும் கொடியது என்று கூறினார். “இருவர்க்கும் ஸ்வரூப ஸித்தியில்லை” என்று சூர்ணை 312ல் கூற உள்ளார்.