Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 307)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
இவை யொன்றுக்கொன்று க்ரூரங்களுமாய் உபாய விரோதிகளுமாய் உபேய விரோதிகளுமாயிருக்கும்.
இப்படி அக்ருத்யகரணாதி சதுஷ்டயத்தையு மடைவே விவரித்தருளி, இவற்றினுடைய க்ரௌர்ய விசேஷங்களையும் இவைதானின்னதுக்கு விரோதியாயிருக்கு மென்னுமத்தையு மருளிச்செய்கிறர் மேல் (இவை) என்று தொடங்கி.
இப்படியாகச் சூர்ணை 301ல் கூறப்பட்டதான அக்ருத்யகரணம் (செய்யக்கூடாதவற்றைச் செய்தல்) போன்ற நான்கையும் வரிசையாக விளக்கினார்; இவற்றின் கொடுமைகள் என்ன, இவை எதற்கு விரோதிகள் போன்றவற்றை இந்தச் சூர்ணையில் அருளிச்செய்கிறார்.
(ஒன்றுக்கொன்று க்ரூரங்களாகையாவது), அக்ருத்யகரணத்தில் பகவதபசாரம் க்ரூரமாய், அதிலும் பாகவதாபசாரம் க்ருரமாய், அது தன்னிலும் அஸஹ்யாபசாரம் க்ரூரமாயிருக்கை. இதுக்கடி, பூர்வங்களிற காட்டி லுத்தரோத்தரங்களில் பகவந் நிக்ரஹ மதிசயித்திருக்கை. அக்ருத்யகரணத்தில், ஸ்வாஜ்ஞாதிலங்கநமடியான சீற்றமிறே; அவ்வளவன்றிறே இவ்வாத்மாவுக்கு ஆத்மாவாய் அதின் ஸத்தையே பிடித்து நோக்கிக் கொண்டு போரும் தன் திறத்திலபசாரத்தால் வரும் சீற்றம்; அவ்வளவுமன்றிறே “ஜ்ஞாநீத்வாத்மைவ” என்கிறபடியே தனக்குயிராக நினைத்திருக்கும் பாகவத விஷயங்களில் அஹங்காராதிக ளடியாகப் பண்ணுமபசாரத்தால் வரும் சீற்றம்; அது தன்னளவுமன்றிறே நிர்நிபந்தநமாகத் தன்பக்கலிலும் தன்னுடையார் பக்கலிலுமாதல் உபயவைபவ ஜ்ஞாபகனாய் உபயாபிமதனான வாசார்யன் பக்கலிலேயாதல் மூவர்க்கு மபிமதரான தத்பக்தர் பக்கலிலேயாதல் செய்யுமபசாரத்தால் வரும் சீற்றம் ஆகையா லொன்றுக்கொன்று க்ரூரமாயிருக்கும். அக்ருத்யகரணத்தில் பகவதபசாராதிகளு மந்தர்ப்பவிக்குமாயிருக்க தனித்தனி யிப்படி பிரித்துச் சொல்லுகிறது, இவற்றினுடைய க்ரௌர்ய விசேஷங்களைப் பற்றவிறே. (உபாய விரோதிகளுமாய் உபேய விரோதிகளுமா யிருக்கையாவது) - இவ்வாத்மாவினுடைய வுஜ்ஜீவநத்தி லொருப்பட்டு மேன்மேலும் க்ருஷி பண்ணுகைக்குறுப்பான வெம்பெருமானுடைய க்ருபைக்கும், எப்போது மிவனுக்கு ப்ராப்ய மாயிருந்துள்ள வவனுடைய முகோல்லாஸத்துக்கும் விலக்காயிருக்கை. “இரக்க முபாயம், இனிமையுபேயம்” என்னக்கடவதிறே. ஆகையால் இவ்வக்ருத்யகரணாதிகள் நீரிலே நெருப்பெழுமாப்போலே அவன் திருவுள்ளத்திலே நிக்ரஹத்தை கிளப்பி அவனுடைய க்ருபையு முகப்பு மிவன் பக்கலறும்படி பண்ணுகையாலே, இவற்றை யுபாயோபேய விரோதிகளென்னத் தட்டில்லை. (தனக்குத்தான் தேடும் நன்மை) என்று தொடங்கி, நமச்சப்தார்த்தத்தை விஸ்தரேண ப்ரதிபாதிக்கையாலும், உகந்தருளின நிலங்களிலாதராதிசயமும்) என்று உகந்தருளின நில ப்ரஸங்கத்தாலும், மேலே (பகவத் கைங்கர்யம்) என்கிறவிடத்தில் பகவச்சப்தத்தாலும், கைங்கர்ய ப்ரதிஸம்பந்தி ப்ரதிபாதகமான ஸ்ரீமத்பத நாராயண பதார்த்தங்களை ஸூசிப்பிக்கையாலும்; மங்களாசாஸந ப்ரகரணத்தாலும், (கர்த்தவ்ய மாசார்ய கைங்கர்யமும் பகவத் கைங்கர்யமும்) என்று தொடங்கி (கிஞ்சிகரித்தால் ஸ்வரூபம் நிறம் பெறுவது) என்னுமளவாகவும், சதுர்த்த்யர்த்தத்தை யருளிச்செய்கையாலும்; நிஷித்த சாதுர்வித்ய ப்ரதிபாதநமுகேந ப்ராஸங்கிகமாக மீளவும் நமச்சப்தார்த்தத்தைப் பேசுகையாலும் இவ்வளவும் உத்தரகண்டார்த்தத்தை யருளிச்செய்தாராய்த்து. ஆக, இப் ப்ரகரணத்தால் கீழுக்தோபாயத்தைக் கொண்டு உபேயத்தைப் பெறும் சேதநனுக்கு உபாயோபேயாதிகார ப்ரதாநா பேக்ஷிதங்களையும், ப்ராபகாந்தர பரித்யாக ஹேதுவான ஸ்வரூப நாசகத்வாதியையும், ப்ரபத்தியின் ஸ்வரூபாநுகூலத் வாதியையும்,ஸ்வகத ஸ்வீகாராநுபாயத்வத்தையும், பரகர ஸ்வீகாரோபாயத்வதையும், தத்ப்ராபல்யத்தையும், அவனே ஸ்வீகரிக்குமிடத்திலும் புருஷகாரத்தை முன்னிடும்படியையும், உபயரும் முன்னிடு மதுக்கு ப்ரயோஜந விசேஷங்களையும், உபேய தசையிலும் ப்ராப்தி தசையிலு மிவன் சேஷத்வ பாரதந்த்ர்யங்களும் ஸ்வதோஷ நிவ்ருத்தியும் பராநுபவ விரோதியாம்படியையும், தன்னால் வரும் நன்மையில் அவனால் வரும் நன்மைக்குள்ள வாசியையும், ஈச்வரனே ரக்ஷகன், தான் தனக்கு நாசகனென்னு மத்தையும், தன்னைத்தான் நசிப்பிக்கும் ப்ரகாரத்தையும், அஹங்காரமும் விஷயங்களும் ஸ்வரூபேணவும் பாகவத விரோதத்தை விளைத்து மிவன் ஸ்வரூபத்தை நசிப்பிக்கும் படியையும், பாகவதாபசார க்ரௌர்யத்தையும், தத் ப்ரஸங்கத்திலே பாகவத மாஹாத்ம்யத்தையும், இவன் திநசர்யையும், திநசர்யோக்தங்களடைய ஸதாசார்ய ப்ரஸாதத்தாலே வர்த்திக்கும்போதைக்கு அபேக்ஷிதமான வஸ்தவ்யாதியையும், தச்சர மோக்த கர்த்தவ்ய ரூபகைங்கர்ய வேஷத்தையும், கைங்கர்ய தத் பூர்வ தசைகளில் ஸ்வரூபத்தை யுஜ்ஜ்வலமாக்கும்படியையும், இவனுக்குண்டான குணசதுஷ்டயத்தையும், தத்விஷய விபாகத்தையும், அதில் அசக்தி விஷய நிஷித்த சாதுர்வித்யத்தையும் சொல்லுகையாலே, அதிகாரி நிஷ்டாக்ரமம் சொல்லப்பட்டது.
(ஒன்றுக்கொன்று க்ரூரங்களாகையாவது) - செய்யக் கூடாத செயல்களைச் செய்தல் என்பதைக் காட்டிலும் பகவத் அபசாரம் கொடியது; பகவத் அபசாரத்தைக் காட்டிலும் பாகவத அபசாரம் கொடியது; பாகவத அபசாரத்தைக் காட்டிலும் அஸஹ்ய அபசாரம் கொடியது என்று பொருள். இப்படி உரைப்பதற்குக் காரணம் – முன்னே உரைக்கப்பட்டவற்றைக் காட்டிலும் பின்னே உரைக்கப்பட்டவை விஷயத்தில் ஸர்வேச்வரனுக்குச் சீற்றம் அதிகமாகும். செய்யத்தகாதவற்றைச் செய்தால், தனது ஆணையை மீறினான் என்ற கோபம் மட்டுமே இருக்கும்; ஆத்மாவுக்கு ஆத்மாவாக நின்று அதன் இருப்பு என்பதே தனது குறிக்கோளாகக் கொண்டிருக்கும்போது, தன்னைக் குறித்த அபசாரம் செய்தால் முன்னர் உரைத்த கோபத்தைக் காட்டிலும் அதிக கோபம் உண்டாகும். கீதையில் (7-18) – ஜ்ஞாநீத்வாத்மைவ – ஞானியாக உள்ளவன் எனது உயிர் – என்று கூறுவதற்கு ஏற்ப, தனது உயிராகவே எண்ணியுள்ள பாகவதர்கள் விஷயத்தில் அஹங்காரம் காரணமாகச் செய்யும் அபசாரங்கள் குறித்து மேலும் அதிகமாகக் கோபம் உண்டாகிறது. இதனைக் காட்டிலும் கோபம் உண்டாவது எப்போது என்றால் – எந்தவிதமான காரணமும் இல்லாமல் தன்னிடமோ, தனது அடியார்களிடமோ, தனது பெருமை மற்றும் தனது அடியார்களின் பெருமை ஆகியவற்றை உரைத்தபடி இவர்கள் இருவராலும் விரும்பப்படும் ஆசார்யனிடமோ அல்லது இந்த மூவருக்கும் விருப்பமாக உள்ள ஆசார்யனின் அடியார்களிடமோ செய்யும் அபசாரம் காரணமாக ஏற்படும் கோபம் ஆகும். ஆக இவை ஒன்றைக் காட்டிலும் மற்றது அதிகமான கோபம் ஏற்படுத்துவதாக இருக்கும். செய்யத் தகாதவற்றைச் செய்தல் என்பதை உரைக்கும்போதே, பகவத் அபசாரம் போன்றவை அதில் அடங்கிவிடும்; பின்னர் ஏன் தனித்தனியாக உரைக்கவேண்டும் என்றால், இவற்றின் கொடுமைகளில் காணப்படும் பேதம் குறித்து விவரிக்கவே ஆகும். (உபாய விரோதிகளுமாய் உபேய விரோதிகளுமா யிருக்கையாவது) - இந்த ஆத்மாவைக் கரையேற்றும் முயற்சியில் மேன்மேலும் முயற்சி செய்தபடி உள்ள ஸர்வேச்வரனுடைய கருணைக்கும், எப்போதும் நமக்கு அடையத்தக்கதாக உள்ள அவனுடைய திருமுக மலர்ச்சிக்கும் விரோதியாக உள்ளவை - இரக்கம் உபாயம், இனிமை உபாயம் – என்று கூறுவர். ஆகவே இத்தகைய “செய்யத்தகாத செயல்களைச் செய்தல்” போன்றதான செயல்கள் ஸர்வேச்வரனின் திருவுள்ளத்தில், நீரில் நெருப்பு எழுவது போன்று, மிகுந்த சீற்றத்தை உண்டாக்கிவிடும்; இதனால் அவனுடைய கருணை மற்றும் உகப்பு ஆகியவை இவன் விஷயத்தில் இல்லாதபடி ஆக்கிவிடும்; ஆகவே இவை உபாயம் மற்றும் உபேயம் ஆகிய இரண்டிற்கும் தடையாக உள்ளன என்று கூறுவதில் குற்றமில்லை. “தனக்குத் தான் தேடும் நன்மை” என்ற சூர்ணை 160 தொடக்கமாக, திருமந்த்ரத்தில் உள்ள “நம:” என்ற பதத்தின் பொருளை விரிவாக அருளிச்செய்ததாலும், “உகந்தருளின” என்ற சூர்ணை 243ல் ஸர்வேச்வரன் உகப்புடன் எழுந்தருளிய திவ்யதேசங்கள் குறித்து உரைப்பதாலும்; இனி கூறப்போகும் சூர்ணை 310ல் “பகவத் கைங்கர்யம்” என்ற வாக்கியத்தில் “பகவத்” என்ற பதத்தாலும்; கைங்கர்யங்களை ஏற்றுக் கொள்பவர்களைக் கூறுகின்ற “ஸ்ரீமந்”, “நாராயண” என்ற பதங்களை உணர்த்துவதாலும்; மங்களாசாஸந ப்ரகரணம் மூலமும்; “கர்த்தவ்யம்” என்றுள்ள சூர்ணை 274 தொடங்கி, சூர்ணை 286ல் “கிஞ்சித்” என்பது முடிய உள்ள வாக்கியங்களில் திருமந்த்ரத்தில் உள்ள “நாராயண” என்ற பதத்தில் வெளிப்படும் நான்காம் வேற்றுமை குறித்து உரைப்பதாலும்; தள்ளப்படவேண்டிய விஷயங்கள் நான்கு வகை என்பதாலும்; மீண்டும் “நம:” என்பதன் பொருளைப் பற்றி உரைப்பதாலும் – இதுவரை த்வயத்தின் இரண்டாவது வாக்கியமான “ஸ்ரீமதே நாராயணாய நம:” என்பதன் பொருளை அருளிச்செய்தார் என்று கருத்து. ஆக இந்த மூன்றாவது ப்ரகரணம் மூலம் கீழே உள்ள விஷயங்கள் கூறப்பட்டன: முதல் இரண்டு ப்ரகரணங்களால் கூறப்பட்ட உபாயம் மூலமாக, உபேயத்தைப் பெறுவதற்கு ஏற்ற சேதனன் ஒருவனுக்கு உபாயம் மற்றும் உபேய விஷயங்களில் உள்ள அதிகாரம் கிட்ட வேண்டப்படுவது எவை. அவனைத் தவிர மற்ற உபாயங்களைக் கைவிடுவதற்குக் காரணமாக உள்ள ஸ்வரூப நாசம். ப்ரபத்தியின் ஸ்வரூபத்துடன் ஒத்திருப்பவை எவை. தான் ஸ்வயமாகப் பற்றும் பற்றுதல் என்பது உபாயமாகாது, ஸர்வேச்வரன் பற்றும் பற்றுதலே உபாயமாகும். அவன் பற்றும் பற்றுதலே வலிமையானது, அவ்விதம் பற்றும்போதும் பெரியபிராட்டியைப் புருஷகாரமாக முன்னிறுத்தியே பற்றுகிறான். சேதனனும் ஸர்வேச்வரனும் பெரியபிராட்டியைப் புருஷகாரமாக முன்னிறுத்துவதன் பயன் என்ன. கைங்கர்யம் கிட்டிய பின்னரும், ஸர்வேச்வரன் மற்றும் பெரியபிராட்டி ஆகிய இருவரை அடைந்த பின்னரும் இவனுடைய அடிமைத்தனம், பாரதந்த்ர்யம் மற்றும் தோஷங்கள் விலகுதல் போன்றவை ஸர்வேச்வரனை அனுபவிக்கும் அனுபவத்திற்குத் தடையாக உள்ளன. தன்னால் தனக்கு ஏற்படும் நன்மையைக் காட்டிலும் அவனால் நமக்கு உண்டாகும் நன்மையில் உள்ள வேறுபாடு. ஸர்வேச்வரனே நம்மைக் காப்பவன், தான் தன்னை அழித்துக் கொள்பவன். தானே தன்னை அழித்துக்கொள்ளும் வகை. அஹங்காரம் மற்றும் உலக விஷயங்கள் ஆகியவை தாமாகவும், பாகவத விரோதத்தை உண்டாக்கியும் இவன் ஸ்வரூபத்தை எவ்விதம் அழிக்கின்றன. பாகவத அபசாரத்தின் கொடுமை. பாகவத அபசாரம் குறித்து உரைக்கும்போது பாகவதர்களின் பெருமை என்ன. ப்ரபந்நனின் அன்றாட வாழ்கை முறை. ப்ரபந்நனின் அன்றாட வாழ்கை முறையில் செய்யப்படவேண்டிய அனைத்தும் சிறந்த ஆசார்யனின் திருவருளால் ஏற்படும்போது இருக்கவேண்டியதான வாழவேண்டிய இடம் போன்றவை. அதன் இறுதியாக உரைக்கப்பட்டதான கைங்கர்யம் என்ன. கைங்கர்யம் செய்யும்போதும், அதற்கு முன்பு உள்ள நிலைகளிலும் ஸ்வரூபத்தை விளங்கச் செய்யும் மார்க்கங்கள். ஜீவனுக்கு உள்ள நான்கு குணங்கள். அந்தக் குணங்களில் உள்ள வேறுபாடுகள். அவற்றில் அசக்திக்கு இலக்காக உள்ள நான்குவிதமான தோஷங்கள். மேலே உள்ள பலவிதமான விஷயங்கள் காணும்போது இங்கு அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்று உரைத்தது காணலாம்.