Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 306)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

அஸஹ்யாபசாரமாவது நிர்நிபந்தநமாக பகவத் பாகவத விஷயமென்றால் அஸஹமாநனாயிருக்கையும் ஆசார்யாபசாரமும் தத்பக்தாபசாரமும்.

அநந்தரம் அஸஹ்யாபசாரத்தை விவரிக்கிறார் (அஸஹ்யாபசாரம்) என்று தொடங்கி.

அடுத்து ஸர்வேச்வரனாலும் பொறுக்க முடியாத குற்றம் என்று கூறப்படும் அஸஹ்ய அபசாரத்தை விளக்குகிறார்.

அல்லாத அபசாரங்களிலுங் காட்டில் ஈச்வரனுக்கிது அத்யந்தாஸஹ்யமாயிருக்கையாலே (அஸஹ்யாபசாரம்) என்கிறது. “பவதஸஹநீய ஆகஸி ரத:” என்றிறே பட்டரருளிச் செய்த்து. (நிர்நிபந்தநமாக பகவத் பாகவத விஷயமென்றால் அஸஹமாநனா யிருக்கையாவது), கீழ்ச்சொன்னபடியே அர்த்தகாமாதி நிபந்தநமாக வன்றிக்கே, ஹிரண்யனைப் போலே பகவத் விஷயம் பாகவத விஷயம் என்றால் காணக் கேட்கப் பொறாதபடியிருக்கை. (ஆசார்யாபசாரமாவது), அவனருளிச்செய்த வர்த்தத்தின்படி யநுஷ்டியாமையும், அவனுபதேசித்த மந்த்ர ததர்த்தங்களை அல்பப்ரயோஜநங்களை நச்சி அநதிகாரிகளுக்கு உபதேசிக்கையுந் தொடக்கமானவை. (தத்பக்தாபசாரமாவது) - ஆசார்ய பக்தரான ஸப்ரஹ்மசாரிகளுடன் ஐகரஸ்யமுண்டாய் வர்த்திக்க வேண்டியிருக்க, அது செய்யாதே, அவர்கள் திறத்தில் பண்ணுமஸூயையும் அவஜ்ஞையுந் தொடங்கமானவை.

மற்ற அபசாரங்களைக் காட்டிலும் ஸர்வேச்வரனால் இது பொறுத்துக் கொள்ள இயலாத காரணத்தினால் அஸஹ்ய அபசாரம் எனப்பட்டது. ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் (2-91) – பவதஸஹநீய ஆகஸி ரத: – மிகுந்த பொறுமை கொண்ட உன்னாலும் பொறுக்க முடியாத பாவங்கள் செய்வதில் நான் ஈடுபாடு கொண்டவன் – என்று ஸ்வாமி பராசரபட்டர் அருளிச்செய்தமை காண்க. (நிர்நிபந்தநமாக பகவத் பாகவத விஷயமென்றால் அஸஹமாநனா யிருக்கையாவது) – கடந்த சூர்ணையில் கூறப்பட்டபடி பொருள் மற்றும் ஆசை ஆகியவை காரணமாக இல்லாமல், இரண்யகசிபு போன்று பகவத் விஷயம் மற்றும் பாகவத விஷயம் என்பனவற்றைக் காண நேர்ந்தாலும், கேட்க நேர்ந்தாலும் பொறுத்துக்கொள்ள முடியாதபடி இருத்தல் ஆகும். (ஆசார்யாபசாரமாவது) – ஆசார்யன் அருளிச்செய்த உபதேசங்களின்படி நடக்காமல் இருத்தல், அவன் நமக்கு அருளிச்செய்த உபதேசங்களை தாழ்ந்த பலன்களுக்கு ஆசைப்பட்டு தகுதி அற்றவர்களுக்கு உபதேசம் செய்தல் போன்றவை தொடக்கமான அபசாரங்கள் ஆகும். (தத்பக்தாபசாரமாவது) – ஆசார்யனின் பக்தர்களாக உள்ளவர்களும், தன்னுடன் அந்த ஆசார்யனிடம் படித்தவர்களும் ஆகியவர்களுடன் ஒற்றுமையுடன் வாழவேண்டும்; அதனைச் செய்யாமல், அவர்கள் குறித்து பொறாமை மற்றும் அவர்களை அவமதித்தல் போன்றவை ஆகும்.