Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 304)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
பகவத்த்ரவ்யத்தைத் தானபஹரிக்கையும் அபஹரிக்கிறவர்களுக்கு ஸஹகரிக்கையும் அவர்கள் பக்கலிலே யாசிதமாகவும் அயாசிதமாகவும் பரிக்ரஹிக்கையும் பகவானுக்கு அநிஷ்டமாயிருக்கும்.
கீழ்ச்சொன்னவற்றோபாதி பகவத் த்ரவ்யாபஹாரமும் பகவதநிஷ்டமா யிருக்குமோ வென்கிற சங்கையிலே, தானபஹரிக்கிற மாத்ரமன்றிக்கே அபஹரிப்பார்க்கு ஸஹகரிக்கை முதலானவையும் அவனுக் கநிஷ்டமாயிருக்கு மென்கிறார் (பகவத் த்ரவ்யத்தை) என்று தொடங்கி.
கடந்த சூர்ணையில் கூறப்பட்ட அபசாரங்கள் போன்று, ஸர்வேச்வரனுக்கு உரியதாக உள்ள பொருள்களை அபகரித்தல் என்பதும் அவனுக்கு விருப்பம் இல்லாத செயலாக இருக்குமோ என்ற சந்தேகம் எழலாம். இதற்கு விடையாக அபகரிப்பது மட்டும் அல்ல, அவ்விதம் அபகரிப்பவர்களுக்குத் துணையாக நிற்பதும் அவனுக்கு விருப்பம் இல்லாத செயலே என்கிறார்.
(தானபஹரிக்கையாவது) நேரே தானே யிதுக்கு கர்த்தாவாய்ச் செய்கை. (அபஹரிக்குமவர்களுக்கு ஸஹகரிக்கையாவது), நாமபஹரிக்கிறோ மில்லையிறே என்று நினைத்து, (அபஹர்த்தாக்களுக்கு) அநுமத்யாதிகளாலே ஸஹாயம் பண்ணுகை. (அவர்கள் பக்கலிலே யாசிதமாகப் பரிக்ரஹைக்கையாவது), நாமிவ்வபஹாரத்துக்குக் கூட்டன்றே யென்று நினைத்து தானவர்கள் பக்கலிலே சிலவற்றையபேக்ஷித்து வாங்கிக் கொள்ளுகை. (அயாசிதமாக பரிக்ரஹிக்கையாவது), நாமபேக்ஷித்திலோமே என்று நினைத்து அவர்கள் தாங்களே தருமவற்றை வாங்குகை. (பகவானுக் கநிஷ்டமாயிருக்கும்) என்றது, இவை யித்தனையும் இவனுடைய வுஜ்ஜீவநபரனாய் க்ருஷி பண்ணிப் போரும் ஸர்வேச்வரன் திருவுள்ளத்துக்கு அநபிமதமா யிருக்குமென்கை.
– (தானபஹரிக்கையாவது) - தானே இப்படியாக ஸர்வேச்வரனுடைய பொருளை அபகரித்தல். (அபஹரிக்குமவர்களுக்கு ஸஹகரிக்கையாவது) – “நாம் நேரடியாக அபகரிக்கவில்லையே” என்று எண்ணி, களவு செய்பவர்களுக்கு அனுமதி அளிப்பது போன்ற செயல்கள் மூலம் துணையாக நிற்பதாகும். (அவர்கள் பக்கலிலே யாசிதமாகப் பரிக்ரஹைக்கையாவது) – “நாம் இந்த அபசாரச் செயலுக்கு கூட்டு அல்லவே” என்று எண்ணியபடி, அபகரிப்பவர்களிடம் நமக்கு வேண்டியவற்றை விருப்பத்துடன் வாங்கிக்கொள்வதாகும். (அயாசிதமாக பரிக்ரஹிக்கையாவது) – “நாம் இவர்களிடம் எதனையும் விரும்பவில்லையே ” என்று எண்ணியபோதும், அவர்களாகவே அளிக்கின்ற பொருளை வாங்குவதாகும். (பகவானுக் கநிஷ்டமாயிருக்கும்) – இவை அனைத்தும் இந்த ஜீவாத்மாவைக் கரையேற்ற வேண்டும் என்பதில் பெருமுயற்சி எடுக்கின்ற ஸர்வேச்வரனின் திருவுள்ளத்திற்கு விருப்பம் அற்றவையே ஆகும்.