Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 303)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

பகவதபசாரமாவது தேவதாந்தரங்களோடொக்க ஈச்வரனை நினைக்கையும் ராம க்ருஷ்ணாத்யவதாரங்களில் மநுஷ்ய ஸஜாதீயதா புத்தியும் வர்ணாச்ரம விபரீதமான வுபசாரமும், அர்ச்சாவதாரத்தி லுபாதாந நிரூபணமும் ஆத்மாபஹாரமும் பகவத் த்ரவ்யாபஹாரமும் தொடங்கமானவை.

அநந்தரம் பகவதபசாரத்தை விவரிக்கிறார் (பகவதபசாரமாவது) என்று தொடங்கி.

அடுத்து ஸர்வேச்வரன் விஷயத்தில் செய்யப்படும் அபசாரங்கள் குறித்து உரைக்கிறார்.

(தேவதாந்தரங்களோடொக்க ஈச்வரனை நினைக்கையாவது), “யேது ஸாமாந்ய, பாவேந மந்யந்தே புருஷோத்தமம், தேவை பாஷண்டிநோஜ்ஞேயாஸ் ஸர்வகர்ம பஹிஷ்க்ருதா:; யஸ்து நாராயணம் தேவம் ஸாமாந்யேநாபிமந்யதே, ஸயாதி நரகம் கோரம் யாவச் சந்த்ர திவாகரம்” என்று, தேவதாந்தரங்களோடு ஈச்வரனை ஸமபுத்தி பண்ணலாகாதென்று சாஸ்த்ரஞ் சொல்லாநிற்க, “அந்த: ப்ரவிஷ்டச் சாஸ்தாஜநாநாம் ஸர்வாத்மா”, “தமீச்வராணாம் பரமம் மஹேச்வரம்”, “ந தத்ஸமச் சாப்யதிகச்ச த்ருச்யதே” என்கிறபடியே, ஸ்வேதரஸகல நியாமகனாய் ஸமாநாதிக ரஹிதனான வீச்வரனை, “அங்காந்யந்யா தேவதா:” என்று, தச்சரீரதயாபிஹிதரான ப்ரஹ்மாதி தேவதைகளோடு ஸமபுத்தி பண்ணுகை. (ராமக்ருஷ்ணாத் யவதாரங்களில் மநுஷ்ய ஸஜாதீயதா புத்தியாவது), “அஜோபிஸந் நவ்யயாத்மா பூதாநா மீச்வரோபிஸந், ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம் யாத்ம மாயயா” என்கிறபடியே, அஜஹத் ஸ்வபாவனாய் அப்ராக்ருத திவ்ய ஸம்ஸ்தாநத்தை யிதர ஸஜாதீயமாக்கிக் கொண்டு “துயரில் மலியும்” மனிசர் பிறவியிற்றோன்றி நிற்கிற நிலையறியாதே, அவதாரத்தில் மெய்ப்பாட்டுக்காக அவன் செய்து காட்டின கர்ப்பவாஸ ஜநந சோக மோஹாதிகளையிட்டு கர்மவச்யரான மநுஷ்யரோடு ஸஜாதீயனாக நினைக்கை. (வர்ணச்ரம விபரீதமான வுபசாரமாவது), ததாராதந தசையில் த்ரைவர்ணிகார்ஹமான வைதிக மந்த்ரங்களாலே சதுர்த்த வர்ணரானவர்களாராதித்தல், உத்தமாச்ரமிகள் முதலானார் க்ருஹஸ்தவத் தாம்பூல நிவேதநாதிகளைப் பண்ணுதல் தொடக்கமானவை. (அர்ச்சாவதாரத்தி லுபாதாந நிரூபணமாவது), “தமருகந்த தெவ்வுருவமவ்வுருவம்” இத்யாதிப்படியே, ஆச்ரிதர்க்கபிமத மான தேதேனுமொரு த்ரவ்யத்தைத் திருமேனியாக வங்கீகரீத்து அதிலே அப்ராக்ருத விக்ரஹத்தில் பண்ணு மாதரத்தைப் பண்ணி எழுந்தருளியிருக்கிற ஏற்றத்தை யறியாதே மாத்ருயோநி பரீக்ஷிகரைப்போலே இது இன்ன த்ரவ்யமன்றோ வென்று விக்ரஹோபாதாநத்தை நிரூபிக்கை. (ஆத்மாபஹாரமாவது) “யோந்யதா ஸந்தமாத்மாந மந்யதா ப்ரதிபத்யதே, கிந்தேந நக்ருதம் பாபம் சோரேணாத்மாபஹாரிணா” என்று ஸகல பாப மூலமாகச் சொல்லப்படுகிற பகவதேக சேஷபூதமான வாத்ம வஸ்துவில் ஸ்வதந்தர புத்தி. (பகவத் த்ரவ்யாபஹாரமாவது), அமுதுபடி சாத்துப்படிக் கர்ஹமானவற்றை ப்ரகாசமாகவதால் அப்ரகாசமாகவாதல் தனக்காக்குகை. (தொடக்கமானவை) என்றது, இன்னமிப்படி க்ரூரமான சாஸ்த்ரங்களில் சொல்லுமவை பலவுமுண்டாகையாலே. த்வாத்ரிம்ச தபசாராதிகளு முண்டிறே.

(தேவதாந்தரங்களோடொக்க ஈச்வரனை நினைக்கையாவது) - யேது ஸாமாந்ய, பாவேந மந்யந்தே புருஷோத்தமம், தேவை பாஷண்டிநோஜ்ஞேயாஸ் ஸர்வகர்ம பஹிஷ்க்ருதா: – யார் புருஷோத்தமனை மற்ற தேவதைகளோடு சமமாக எண்ணுகிறார்களோ அவர்கள் பாஷாண்டிகள் என்றே கருதப்படுவர், அவர்கள் சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட எந்த ஒரு கர்மத்தையும் இயற்றும் தகுதி அற்றவர்கள்; யஸ்து நாராயணம் தேவம் ஸாமாந்யேநாபிமந்யதே, ஸயாதி நரகம் கோரம் யாவச் சந்த்ர திவாகரம் – யார் ஒருவன் தேவர்களின் தேவனாகிய நாராயணனை மற்ற தேவர்களுக்குச் சமம் என்று எண்ணுகிறானோ அவன் சந்த்ரனும், சூர்யனும் உள்ளவரை நரகம் அடைகிறான் – என்பது போன்ற வரிகளில் மற்ற தேவர்களுடன் நாராயணனை ஒப்பிட்டு, சமமாக எண்ணக்கூடது என்று கூறப்பட்டுள்ளது. ஆனாலும், யஜுர்வேதம் – அந்த: ப்ரவிஷ்டச் சாஸ்தாஜநாநாம் ஸர்வாத்மா - அனைத்தின் ஆத்மாவாகிய நாராயணன், அனைத்திற்குள்ளும் ப்ரவேசித்து அனைத்தையும் நியமிக்கிறான் – என்றும், ச்வேதாஸ்வதர உபனிஷத் – தமீச்வராணாம் பரமம் மஹேச்வரம் – அனைத்து ஈச்வரர்களுக்கும் மேலான மஹேச்வரனாகிய நாராயணன் –என்றும்; ச்வேதாஸ்வதர உபனிஷத் – ந தத்ஸமச் சாப்யதிகச்ச த்ருச்யதே – ஸர்வேச்வரனுக்கு ஒத்தவர்களும் மிக்கவர்களும் இல்லை – என்றும் கூறுவதற்கு ஏற்ப அனைத்தையும் நியமிப்பவனாகவும், தனக்கு ஒத்தவர்களும் மிக்கவர்களும் இல்லை என்றுள்ளவனும் ஆகிய ஸர்வேச்வரனை, தைத்திரீய உபனிஷத் – அங்காந்யந்யா தேவதா: – அனைத்து தேவதைகளுக்கும் இவனே ஆத்மா, அவர்கள் இவனது சரீரங்கள் – என்று ஸர்வேச்வரனுக்குச் சரீரமாக உரக்கப்பட்ட நான்முகன் போன்ற தேவதைகளுடன் சமமாக எண்ணுதல் ஆகும். (ராமக்ருஷ்ணாத் யவதாரங்களில் மநுஷ்ய ஸஜாதீயதா புத்தியாவது) – கீதையில் (4-6) – அஜோபிஸந் நவ்யயாத்மா பூதாநா மீச்வரோபிஸந், ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம் யாத்ம மாயயா – கர்மங்களால் ஏற்படக்கூடிய பிறப்பு அற்றவனாகவும், கர்மம் காரணமாக ஏற்படும் அழிவு இல்லாதவனாகவும், அனைத்திற்கும் ஈச்வரனாகவும் நான் இருந்துகொண்டு எனக்கு மட்டுமே உரிய அப்ராக்ருதமான திருமேனியுடன் கூடியபடியே எனது இச்சையால் நான் பலவாக அவதரிக்கிறேன் – என்று கூறுவதற்கு ஏற்ப தனது மேன்மையை எப்போதும் விடாமல், திவ்யமான தனது திருமேனியை மற்றவர்களின் சரீரம் போன்றே அமைத்தபடி, திருவாய்மொழி (3-10-6) – துயரில் மலியும் – என்பதற்கு ஏற்ப துன்பங்கள் நிறைந்த மனிதப் பிறவி எடுத்துள்ள நிலைமையை அறியாமல், அவதாரத்தின் உண்மையை உணர்த்தும்விதமாக அவன் செய்தருளிய கர்ப்பவாசம், பிறத்தல், துன்பப்படுதல், மயல்குதல் போன்ற செயல்களைக் கண்டு, அவன் கர்மம் காரணமாக இங்கு பிறந்த மற்ற மனிதர்கள் போன்றவனே ஆவான் என்று எண்ணுதல் ஆகும். (வர்ணச்ரம விபரீதமான வுபசாரமாவது) – ஸர்வேச்வரனை ஆராதிக்கும்போது முதல் மூன்று வர்ணத்தினர்களுக்கு மட்டுமே உள்ள வேத மந்திரங்கள் கொண்டு நான்காம் வர்ணத்தினர் ஆராதனை செய்தல் மற்றும் ஸந்ந்யாஸிகள் முதலானோர் இல்லறத்தில் உள்ளவர்கள் போன்றே வெற்றிலை போன்றவற்றை எடுத்தல் முதலானவற்றை ஆகும். (அர்ச்சாவதாரத்தி லுபாதாந நிரூபணமாவது) – முதல் திருவந்தாதி (44) – தமருகந்த தெவ்வுருவமவ்வுருவம் – என்பதற்கு ஏஎற்ப அடியார்களின் விருப்பத்திற்கு ஏற்றபடி அமைக்கப்பட்ட ஏதேனும் ஒரு பொருளைத் தனது திருமேனியாகக் கொண்டு, அதில் பரமபதத்தில் உள்ள திருமேனியின் மீது கொள்ளும் விருப்பத்தைச் செய்து ஸர்வேச்வரன் எழுந்தருளுகிறான்; இந்த மேன்மையை உணராமல் தாயின் பிறப்பு உறுப்பை ஆராய்வதற்கு ஒப்பான செயலாகிய ஸர்வேச்வரனின் இந்தத் திருமேனி இன்ன உலோகத்தால் ஆனதோ என்று ஆராய்ந்து பார்த்தல் ஆகும். (ஆத்மாபஹாரமாவது) - மஹாபாரதம் ஆதிபர்வம் (74-27) – யோந்யதா ஸந்தமாத்மாந மந்யதா ப்ரதிபத்யதே, கிந்தேந நக்ருதம் பாபம் சோரேணாத்மாபஹாரிணா – ஸர்வேச்வரனுக்கு அடிமையாக உள்ள ஜீவாத்மாவை யார் தனக்கு உரியதாக எண்ணுகிறானோ, ஆத்மாவைக் களவு செய்த அந்தத் திருடனால் எவ்விதமான பாவம்தான் செய்யப்படவில்லை – என்பதற்கு ஏற்ப அனைத்துவிதமான பாவங்களுக்கும் காரணமாக உரைக்கப்படுவதான ஸர்வேச்வரனுக்கு மட்டுமே அடிமையாக உள்ள ஆத்மாவைத் தனக்கு உரியதாக எண்ணுதல் ஆகும். (பகவத் த்ரவ்யாபஹாரமாவது) – ஸர்வேச்வரனுக்கு அளிக்கப்பட வேண்டியதான அரிசி போன்றவற்றையும், சந்தனம் முதலானவற்றையும் அனைவருக்கும் அறியும்படியோ அறியாதபடியோ தனக்கு உரிமை ஆக்கிக் கொள்ளுதல் ஆகும். (தொடக்கமானவை) – இது போன்று பலவிதமான கொடிய பாவங்கள் சாஸ்த்ரங்களிள் கூறப்படுவதால் இவ்விதம் உரைத்தார். இப்படியாக முப்பத்திரண்டு அபசாரங்கள் உள்ளன.