Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 302)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

அக்ருத்யகரணமாவது பரஹிம்ஸை பரஸ்தோத்ரம் பரதார பரிக்ரஹம் பரத்ரவ்யாபஹாரம் அஸத்யகதநம் அபக்ஷ்ய பக்ஷணம் தொடக்கமானவை.

இவற்றினுடைய வேஷந்தா னேதென்னு மாகாங்க்ஷையிலே யிவற்றை அடைவே விவரிக்கிறார் (அக்ருத்யகரணமாவது) என்று தொடங்கி.

– அந்த நான்கு குணங்களும் எத்தன்மை கொண்டவை என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

(பரஹிம்ஸையாவது), “ந ஹிம்ஸ்யாத் ஸர்வபூதாநி” என்கிற விதியை யதிக்ரமித்துப் பண்ணும் ப்ராணிபீடை. (பரஸ்தோத்ரமாவது) ப்ராப்த விஷய ஸ்தோத்ரார்ஹமான வாக்கைக் கொண்டு அப்ராப்த விஷயங்களை ஸ்துதிக்கை. (பரதார பரிக்ரஹமாவது) பிறர்க் கந்ந்யார்ஹமான ஸ்த்ரீ விஷயங்களை மோஹாதிகளாலே ஸ்வீகரிக்கை. (பரத்ரவ்யாபஹாரமாவது) பிறருடைமையாவனற்றை, அவர்களிசை வின்றிக்கேயிருக்க, ப்ரகாசமாகவாதல் அப்ரகாசமாகவாதல் க்ரஹிக்கை. (அஸத்யகதந மாவது) யதாத்ருஷ்டார்த்த விஷயமும் பூதஹிதமு மன்றிக்கேயிருக்கும் வசநத்தைச் சொல்லுகை. (அபக்ஷ்ய பக்ஷணமாவது), ஜாத்யாச்ர யநிமித்த துஷ்டங்களாய்க் கொண்டு தனக்கு பக்ஷ்யமன்றிக்கே யிருக்குமவற்றை பக்ஷிக்கை. (தொடக்கமானவை) என்றது “பரத்ரவ்யேஷ்வபி த்யாநம் மநஸாநிஷ்ட சிந்தநம், விததாபிநிவேசச்ச த்ரிவிதம் கர்ம மாநஸம், பாருஷ்ய மந்ருதஞ்சைவ பைசுநஞ்சைவ ஸர்வச: அநிபத்த ப்ரலாபச்ச வாங்மயம்ஸ்யாச் சதுர்விதம், அதத்தாநா முபாநாநம் ஹிம்ஸாசைவாவிதாநத:, பரதாரோப ஸேவாச சாரீரம் த்ரிவிதம் ஸ்ம்ருதம்” இத்யாதிகளாலே மந்வாதி ஸ்ம்ருதிகளிற் சொல்லப்படுகிறவை யநேக மாகையாலே.

(பரஹிம்ஸையாவது) – ந ஹிம்ஸ்யாத் ஸர்வபூதாநி – எந்த ஓர் உயிரையும் துன்புறுத்துதல் கூடாது – என்றுள்ள வேத விதியை மீறி மற்ற உயிரை வதைப்பது ஆகும். (பரஸ்தோத்ரம்) – பகவானையும் பாகவதர்களையும் துதிப்பதற்காக உள்ள வாக்கு கொண்டு மற்ற விஷயங்களை துதித்தபடி இருத்தல். (பரதார பரிக்ரஹமாவது) – மற்றவர்களுக்கு மனைவியாக இருக்கும் பெண்களை மயக்கி அவர்களை தன்வசப்படுத்திக் கொள்ளுதல். (பரத்ரவ்யாபஹாரமாவது) – மற்றவர்களுக்குச் சொந்தமான பொருள்களை, அவர்களுடைய சம்மதம் இல்லாமல் அறிந்தோ அல்லது அறியாமலோ எடுத்துக் கொள்ளுதல். (அஸத்யகதந மாவது) – உள்ளது உள்ளபடி உரைக்காமலும், மற்ற உயிர்களுக்கு நன்மையை ஏற்படுத்தும்படி உரைக்காமலும் இருத்தல்; அதாவது இது போன்ற சொற்களை உரைக்காமல் இருத்தல். (அபக்ஷ்ய பக்ஷணமாவது) – ஜாதியாலும், இடத்தாலும், காரணத்தாலும் தோஷம் உள்ளதால், தான் உண்பதற்கு ஏற்றவை அல்ல என்று அறிந்தபோதிலும் அப்படிப்பட்ட உணவை ஏற்பதாகும். (தொடக்கமானவை) – இந்தப் பதம் மூலம் கீழே உள்ள வரிகளில் கூறப்பட்டவற்றை உணர்த்துகிறார்: மநுஸ்ம்ருதி (12) – பரத்ரவ்யேஷ்வபி த்யாநம் மநஸாநிஷ்ட சிந்தநம், விததாபிநிவேசச்ச த்ரிவிதம் கர்ம மாநஸம் – மற்றவர்களின் பொருள்களைக் கவர விரும்புதல், மற்றவர்களுக்குத் தீங்கு எண்ணுதல், பேராசை ஆகிய மூன்றும் மனதால் செய்யப்படும் பாவங்கள். மநுஸ்ம்ருதி – பாருஷ்ய மந்ருதஞ்சைவ பைசுநஞ்சைவ ஸர்வச: அநிபத்த ப்ரலாபச்ச வாங்மயம்ஸ்யாச் சதுர்விதம் – கடுமையான சொற்களை உரைப்பது, நன்மை அளிக்காத பொய் உரைப்பது, கோள் மூட்டுவது, சாஸ்த்ரங்கள் உரைத்த வரைமுறை மீறி உரைப்பது போன்ற நான்கும் வாக்கினால் செய்யப்படும் பாவங்கள். மநுஸ்ம்ருதி – அதத்தாநா முபாநாநம் ஹிம்ஸாசைவாவிதாநத:, பரதாரோப ஸேவாச சாரீரம் த்ரிவிதம் ஸ்ம்ருதம் – ஒருவன் விருப்பத்துடன் அளிக்காத பொருளை எடுத்துக் கொள்ளுதல், சாஸ்த்ரங்க்ளால் விதிக்கப்படாத ஹிம்ஸைகளைச் செய்தல், மற்றவர்களின் மனைவியால் செய்யப்படும் பணிவிடைகளை ஏற்பது ஆகிய மூன்றும் சரீரத்தால் செய்யப்படும் பாவங்கள்.