Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 299)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
இவனுடைய ஜ்ஞாநத்துக்கிலக்கு ஆசார்யகுணம்; அஜ்ஞாநத்துக்குக்கிலக்கு ஆசார்யதோஷம்; சக்திக்கிலக்கு ஆசார்யகைங்கர்யம்; அசக்திக்கிலக்கு நிஷித்தானு ஷ்டாநம்.
– இப்படி ஈச்வர குண விஷயங்களை யருளிச்செய்து மேல் சேதந குண விஷயங்களை யருளிச்செய்கிறார் (இவனுடைய) என்று தொடங்கி.
இப்படியாக ஸர்வேச்வரனுடைய குணங்களுக்கு இலக்காக உள்ள விஷயங்கள் குறித்து அருளிச்செய்து, ஜீவனின் குணங்களுக்கு இலக்காக உள்ளவை குறித்து இந்தச் சூர்ணையில் அருளிச்செய்கிறார்.
(இவனுடைய ஜ்ஞாநத்துக்குகிலக்கு ஆசார்யகுணம்) என்றது, இச்சேதநனுடைய ஜ்ஞாநத்துக்கு விஷயம், மஹோபகாரகனான ஆசார்யனுடைய ஸத்குண ஸமூஹமென்கை. (அஜ்ஞாநத்துக்கிலக்கு ஆசார்ய தோஷம்) என்றது, இவனுடைய அஜ்ஞாநத்துக்கு விஷயம், ஆசார்யன் திருமேனி ஸ்வபாவஜமாய் ஆகந்துகமாயுள்ள தோஷமென்கை. (சக்திக்கிலக்கு ஆசார்ய கைங்கர்யம்) என்றது, இவன் ப்ரவ்ருத்தி சக்திக்கு விஷயம், ஸ்வாசார்யனுக்கு உகப்பாகச் செய்யும் கைங்கர்யமென்கை. (அசக்திக்கிலக்கு நிஷித்தாநுஷ்டாநம்) என்றது, இவனுடைய அசக்திக்கு விஷயம், ஸ்வரூபோபாய புருஷார்த்த விரோதிகளான சாஸ்த்ர நிஷித்தங்களினுடைய அநுஷ்டாந மென்கை.
(இவனுடைய ஜ்ஞாநத்துக்குகிலக்கு ஆசார்யகுணம்) – சேதனர்களின் ஞானத்துக்கு இலக்கு எது என்றால் மிகப் பெரிய உபகாரம் செய்த ஆசார்யனுடைய உயர்ந்த குணங்களின் கூட்டமே ஆகும். (அஜ்ஞாநத்துக்கிலக்கு ஆசார்ய தோஷம்) – சேதனனின் அறியாமைக்கு இலக்கு எதுவென்றால் ஆசார்யனுக்கு அவருடைய சரீர தொடர்பு காரணமாக ஏற்படக்கூடிய நோய் முதலான தோஷங்கள் ஆகும். (சக்திக்கிலக்கு ஆசார்ய கைங்கர்யம்) – இவன் செய்கின்ற செயல்களின் சக்திக்கு இலக்கு எதுவென்றால் தனது ஆசார்யனுக்கு மிகவும் மகிழ்வுடன் செய்கின்ற கைங்கர்யங்கள் ஆகும். (அசக்திக்கிலக்கு நிஷித்தாநுஷ்டாநம்) – இவனுடைய அசக்திக்கு இலக்கு எதுவென்றால் தனது ஸ்வரூபம், உபாயம், புருஷார்த்தம் போன்றவற்றுடன் முரண்பாடு கொண்டவையும் சாஸ்திரங்களால் தடுக்கப்பட்டவையும் ஆகிய செயல்களைச் செய்தல் என்பதாகும்.