Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 298)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
அவனுடைய ஜ்ஞாநத்துக்கிலக்கு இவனுடைய குணம்; அஜ்ஞாநத்துக்கிலக்கு இவனுடைய தோஷம். சக்திக்கிலக்கு இவனுடைய ரக்ஷணம்; அசக்திக்கிலக்கு பரித்யாகம்.
– இப்படி இருந்துள்ள இருவருடைய குணங்களுக்கு விஷயங்களெவை யென்ன, அவற்றை விபஜித்தருளிச் செய்கிறார் (அவனுடைய) என்று தொடங்கி.
இப்படியாக உள்ள ஜீவாத்மா மற்றும் ஸர்வேச்வரன் ஆகிய இருவருடைய குணங்களுக்கும் இலக்கு என்ன என்பதைத் தனித்தனியாக அருளிச்செய்கிறார்.
– கீழெடுத்தவடைவி லன்றிக்கே ஈச்வர குணவிஷயங்களை முந்துறவருளிச் செய்தது, சேதநகுண விஷயங்கள் சொல்லி முடித்தால் அதின்மேலே ப்ராஸங்கிகமாக நிஷித்த சாதுர்வித்யத்தை விஸ்தரேண அருளிச்செய்கைக்காக. (அவனுடைய ஜ்ஞாநத்துக்கிலக்கு இவனுடைய குணம்) என்றது, “யஸ்ஸர்வஜ்ஞ:” என்றும், “ஸஹஸ்ராம்சு:” என்றும் சொல்லுகிறபடியே ஸர்வஜ்ஞானான அவனுடைய திவ்ய ஜ்ஞாநத்துக்கு விஷயம், அத்வேஷாபிமுக்க்யந் தொடங்கி யிச்சேதனன் பக்கலுண்டான ஆத்மகுண மென்கை. (அஜ்ஞாநத்துக்கிலக்கு இவனுடைய தோஷம்) என்றது, “அவிஜ்ஞாதா ஸஹஸ்ராம்சு:” என்றும், “அவிஜ்ஞாதாஹி பக்தாநாமாகஸ்ஸு கமலேக்ஷண:, ஸதா ஜகத் ஸமஸ்தஞ்ச பச்யந்நபி ஹ்ருதிஸ்தித:” என்றும் சொல்லுகிறபடியே, ஸர்வஜ்ஞனா யிருக்கச்செய்தே அவிஜ்ஞாதாவாயிருக்கு மவனுடைய வஜ்ஞாநத்துக்கு விஷயம், ப்ரக்ருதிவச்யனான விவன் பண்ணும் அக்ருத்யகரணாதி தோஷமென்கை. (சக்திக்கிலக்கு இவனுடைய ரக்ஷணம்) என்றது, “பராஸ்ய சக்திர் விவிதைவ ச்ரூயதே” என்கிறபடியே ஸர்வசக்தியான அவனுடைய அகடிதகடநா ஸாமர்த்யமாகிற சக்திக்கு விஷயம், இவனுடைய ஸகலாநிஷ்டங்களையும் போக்கி ஸ்வரூபாநுகுணமான ஸகலேஷ்டங்களையும் கொடுக்கையாகிற ரக்ஷணமென்கை. (அசக்திக்கிலக்கு பரித்யாகம்) என்றது, அப்படி ஸர்வசக்தியான அவனுடைய வசக்திக்கு விஷயம், துஸ்ஸஹமாக விவன் செய்யும் தோஷங்களாலே சீறிக் கைவிடுகை யென்கை.
கடந்த சூர்ணைகளில் உரைத்தபடி ஜீவனின் குணங்கள் குறித்து முதலில் கூறாமல், ஸர்வேச்வரனுடைய குணங்களுக்கு உள விஷயங்களை முதலில் உரைத்தது ஏன் என்றால் – சேதனர்களின் குணங்களை உரைத்து முடித்தால், அதனை நிறைவு செய்யும்விதமாக சூர்ணை 300 தொடங்கி, தள்ளத்தக்க வேண்டிய குணங்கள் குறித்து விரிவாக உரைப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்பதால் ஆகும். (அவனுடைய ஜ்ஞாநத்துக்கிலக்கு இவனுடைய குணம்) – மாண்டூக்ய உபநிஷத் (1-10) – யஸ்ஸர்வஜ்ஞ: – யார் ஒருவன் அனைத்தையும் அறிந்தவனோ – என்றும், ஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ரநாமம் – ஸஹஸ்ராம்சு: – அடியார்களின் குணங்களை ஆயிரம் மடங்காக ஏற்பவன் – என்றும் கூறுவதற்கு ஏற்ப அனைத்தும் அறிந்தவனாகிய ஸர்வேச்வரனின் திவ்யமான ஞானத்திற்கு இலக்கு எது என்றால் – ஸர்வேச்வரனை வெறுக்காமல் இருத்தல், ஸர்வேச்வரனிடம் அன்புடன் இருத்தல் தொடக்கமாக உள்ள ஆத்ம குணங்களே ஆகும். (அஜ்ஞாநத்துக்கிலக்கு இவனுடைய தோஷம்) – ஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ரநாமம் – அவிஜ்ஞாதா – அடியார்களின் குற்றங்களை அறியாதவன், அவர்களின் குணங்களை ஆயிரமாகக் கொள்பவன் – என்றும், அவிஜ்ஞாதா – தாமரை மலர் போன்ற கண்கள் கொண்ட ஸர்வேச்வரன் எப்போதும் ஜீவனின் மனதில் இருந்தபடி, அனைத்தையும் அறிந்தாலும், அவனுடைய தோஷங்களை அறியாதவன் போன்றே உள்ளான் என்றும் கூறுவதற்கு ஏற்ப, ஸர்வேச்வரன் அனைத்தும் அறிந்தவன் என்றபோதிலும் அறியாதவனாக உள்ளது போன்று காணப்படும் அவனுடைய அறியாமைக்கு இலக்கு – சரீரத்தில் சிக்கியுள்ள ஜீவன் செய்யக்கூடாத பாவங்களே ஆகும். (சக்திக்கிலக்கு இவனுடைய ரக்ஷணம்) – ச்வேதாஸ்வதர உபனிஷத் – பராஸ்ய சக்திர் விவிதைவ ச்ரூயதே – ஸர்வேச்வரனின் சக்தியானது மேலானதும் உயர்த்ததும் ஆகும் என்றே கூறப்படுகிறது – என்பதற்கு ஏற்ப அனைத்து சக்திகளும் கொண்ட அவனுடைய “யாராலும் செய்ய இயலாதவற்றைச் செய்து முடிக்கும் சாமர்த்யம் கொண்டவன்” என்பதன் இலக்கு – ஜீவாத்மாவுக்கு விருப்பம் அல்லாத அனைத்தையும் நீக்கி, அவன் கைங்கர்யம் செய்வதற்கு ஏற்றதான ஸ்வரூபத்தை அளித்தல் என்ற ரக்ஷணம் ஆகும். (அசக்திக்கிலக்கு பரித்யாகம்) – இப்படியாக அனைத்து சக்தியும் கொண்ட அவனுடைய சக்தியின்மைக்கு விஷயம் – பொறுக்க இயலாத அளவிற்கு இவன் பாவம் செய்வதைக் கண்டு, மிகுந்த கோபம் கொண்டு, கைவிடுதலே ஆகும்.