Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 293)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

அஜ்ஞானத்துக்கடி அபராதம், அபூர்த்திக்கடி ஜ்ஞாநபூர்த்தி, ஆர்த்திக்கடி அலாபம், அபிநிவேசத்துக்கடி அழகு.

– இவ்வஜ்ஞாதி சதுஷ்டயத்துக்கும் ஹேதுவேதென்னு மாகாங்க்ஷையிலே யருளிச் செய்கிறார் (அஜ்ஞாநத்துக்கு) என்று தொடங்கி.

மேலே கூறப்பட்ட அஜ்ஞானம் என்பதான நான்கிற்கும் என்ன காரணம்? என்ற சந்தேகத்திற்கு விடை அருளிச் செய்கிறார்.

– அதாவது ஜ்ஞாநதசையில் முன்னிடுகிற அஜ்ஞாநத்துக்கு மூலம், அநாதி காலக்ருத அக்ருத்யகரண க்ருத்யாகரணாதி ரூபமான அபராதம்; வரணதசையில் முன்னிடுகிற அபூர்த்திக்கு நிதாநம், பேற்றுக்கு ஹேதுவாக நினைக்க லாவதொன்றும் தனக்கில்லாமையை தர்சிப்பிக்கைக் குடலான ஜ்ஞாநபூர்த்தி; ப்ராப்தி தசையில் முன்னிடுகிறவார்த்திக்கு ஹேது, ப்ராப்ய வஸ்துவை சீக்ரமாகக் கிட்டப்பெறாமையாகிற அலாபம்; ப்ராப்யாநுபவ தசையில் முன்னிடுகிற அபிநிவேசத்துக்குக் காரணம், அநுபவித்தவளவால் த்ருப்தி பிறவாதே மேன்மேலு மாசைப்படப்பண்ணு மவன் வடிவழவென்கை.

ஞான நிலையில் ஏற்படுகின்ற அறியாமைக்குக் காரணம் எல்லையற்ற காலமாக இவனிடம் இருப்பதான “செய்யக் கூடாதவற்றைச் செய்தல், செய்ய வேண்டிவற்றைச் செய்யாமல் இருத்தல்” என்ற இரண்டு தோஷங்கள் ஆகும். வரணநிலையில் ஏற்படும் அபூர்த்திக்குக் காரணம், அதாவது ஸர்வேச்வரனைப் பற்றும் போது முன்னிடுகிற குறைவுக்கும் காரணம் – தான் அடையப்போகும் பேற்றுக்குக் காரணமாக இருக்க வேண்டிய எதுவும் தன்னிடம் இல்லை என்பதை உணர்த்துவதான ஞானத்தின் பரிபூர்ண நிலையே ஆகும். ஸர்வேச்வரனை அடையும்போது ஏற்படுகின்ற துக்கத்துக்குக் காரணம் – அடையவேண்டிய கைங்கர்யத்தை விரைந்து அடைய இயலாமல் உள்ளதால் ஏற்படும் இழப்பு என்பதாகும். ஸர்வேச்வரனுடைய அநுபவத்தை அடைந்த பின்னர் உண்டாகின்ற பெறும் காதலுக்குக் காரணம் – அநுபவித்த காரணத்தால் மனநிறைவு ஏற்படாமல் மேன்மேலும் ஆசைப்படும்படியாக உள்ள அவனுடைய வடிவழகு ஆகும்.