Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 292)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
அஜ்ஞாநம் போவது ஆசார்ய ஜ்ஞாநத்தாலே; அபூர்த்தி போவது ஈச்வர பூர்த்தியாலே; ஆர்த்தி போவது அருளாலே; அபிநிவேசம் போவது அநுபவத்தாலே.
இப்படி இவனிவற்றை முன்னிட்டா லிவனுக்கிவை சமிப்ப தெத்தாலே யென்ன வருளிச்செய்கிறார் மேல் (அஜ்ஞாநம் போவது) என்று தொடங்கி.
இப்படியாக இவன் இவற்றை முன்னிறுத்துவதன் மூலம், இவனுக்கு இவை எவ்விதமாக நீங்குகிறது என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
அதாவது தத்வஹிதாதிகளி லிவனுக்குள்ள அஜ்ஞாநம் ஸவாஸநமாக நிவ்ருத்தமாவது, அவற்றை யலகலகாக தர்சிப்பது அஜ்ஞாத ஜ்ஞாபநம் பண்ணுகைக் கீடான வாசார்யனுடைய ஜ்ஞாநத்தாலே; பேற்றுக்கு ஹேதுவாயிருந்துள்ள ஸத் கர்மாதிகளொன்றும் தனக்கில்லாமையாகிற வபூர்த்தி சமிப்பது, இத்தலையிலுள்ள தொன்றையு மபேக்ஷியாமல் கார்யஞ்செய்யு முபாய பூதனான வீச்வரனுடைய ஸஹகாரி நைரபேக்ஷ்யமாகிற பூர்த்தியாலே; அவிளம்பேந திருவடிகளை ப்ராபிக்கப் பெறாமையா லுண்டான வார்த்தி தீருவது, ஆர்த்திகண்டா லாற்றமாட்டாதே அப்போதே கார்யஞ்செய்து தலைக்கட்டுகைக் குறுப்பான பரது:காஸஹிஷ்ணுத்வமாகிற வவனுடைய க்ருபையாலே; அநுபவதசையி லநுக்ஷணம் பிறக்கு மபிநிவேச மடங்குவது. அவ்விஷயத்தை மேன்மேலு மநுபவிக்கையாலே யென்கை.
தத்வம் மற்றும் நன்மை (ஹிதம்) ஆகியவற்றில் இவனுக்கு உள்ள அறியாமை என்பது அடியுடன் நீங்குவது எப்படி என்றால், அவற்றை ஒவ்வொன்றாகக் காண்பித்து, இதன் காரணமாக இவற்றை இவன் அறிந்து கொள்வதற்குக் காரணமாக உள்ள ஆசார்யனின் ஞானத்தால் ஆகும். பேறு அடைவதற்குத் தகுதியாக உள்ளதான எந்தவிதமான புண்ணிய செயல்களும் தன்னிடம் இல்லை என்ற குறை நீங்குவது எப்படி என்றால் – ஜீவாத்மாவிடம் எதனையும் எதிர்பாராமல் அவனுக்குக் காரியம் செய்கின்ற உபாயமாக உள்ள ஸர்வேச்வரனுடைய “வேறு எந்தத் துணையும் எதிர்பாராமல் இருத்தல்” என்ற நிறைவு காரணமாகவே ஆகும். சற்றும் தாமதம் இல்லாமல், ஸர்வேச்வரனுடைய திருவடிகளை அடைய இயலாமல் ஏற்படும் துக்கம் நீங்குவது எப்படி என்றால் - ஜீவாத்மாவின் துன்பத்தைக் கண்டு பொறுத்துக் கொள்ள இயலாமல், அவனுடைய காரியங்களை உடனே செய்து முடிக்கக் காரணமாக உள்ளதான “ஸர்வேச்வரனுடைய மற்றவர்களின் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ள இயலாத கருணை என்பதால் ஆகும்”. ஸர்வேச்வரனை அனுபவிக்கும்போது ஒவ்வொரு நொடியிலும் ஏற்படுகின்ற ப்ரீதி அடங்குவது எப்படி என்றால் – அவனை மேன்மேலும் அனுபவித்தல் மூலம் ஆகும்.