Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 291)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
ஜ்ஞாந தசையில் அஜ்ஞாநத்தை முன்னிடும்; வரண தசையில் அபூர்த்தியை முன்னிடும்; ப்ராப்தி தசையில் ஆர்த்தியை முன்னிடும்; ப்ராப்யாநுபவ தசையில் அபிநிவேசத்தை முன்னிடும்.
இவ்வோ தசைகளில் ஸ்வரூபத்தை யுஜ்ஜ்வலமாக்கும்படியை தர்சிப்பிக்கிறார் மேலே (ஜ்ஞாந தசையில்) என்று தொடங்கி.
இந்த நான்கு நிலைகளில் ஜீவாத்மா தனது ஸ்வரூபத்தை ப்ரகாசிக்கும்படிச் செய்வது எப்படி என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
(ஜ்ஞாந தசையில் அஜ்ஞாநத்தை முன்னிடுகையாவது) - ஆசார்யன் மேன் மேல் தனக் கஜ்ஞாத ஜ்ஞாபநம் பண்ணும்படி தத்வஹித புருஷார்த்தங்களில் தன்னுடைய அஜ்ஞாநத்தைப் பலகாலும் விஜ்ஞாபிக்கை. (வரண தசையில் அபூர்த்தியை முன்னிடுகையாவது) “நோற்ற நோன்பிலேன்”, “நதர்ம நிஷ்டோஸ்மி”, “ஸத்கர்ம நைவகில கிஞ்சந ஸஞ்சிநோமி” இத்யாதியிற்படியே, பேற்றுக்கு ஹேதுவாகக் கொள்ளலாவதொரு ஸுக்ருதாதிகளொன்றும் தனக்கில்லாமையாகிற ஆகிஞ்சந்யத்தைப் புரஸ்கரிக்கை (ப்ராப்தி தசையி லார்த்தியை முன்னிடுகையாவது), பெற்றபோது பெறுகிறோம் என்றிராதே, “வானுலகந் தெளிந்தே யென்றெய்துவது”, “தரியேனினி”, “கூவிக் கொள்ளுங்கால மின்னங் குறுகாதோ” இத்யாதிப்படியே, விளம்பா ஸஹத்வ நிபந்தநமான தன்னுடைய க்லேசாதிசயத்தை தர்சிப்பிக்கை. (ப்ராப்யாநுபவ தசையிலபி நிவேசத்தை முன்னிடுகையாவது), பெருவிடாயனுக்குக் குடித்த தண்ணீர் ஆராதாப்போலே அநுபூதாம்சத்தால் த்ருப்தி பிறவாதே மேன்மேலும் தனக்கு விளைந்து செல்லுகிற வநுபவாபி நிவேசத்தை ப்ராகாசிப்பிக்கை. ஆக, ஜ்ஞாநதசை முதலான நாலுதசையிலும் (ஸ்வரூபத்தை யுஜ்ஜவலமாக்குகையாவது) இவ்வோவாகாரங்களை முன்னிடுகையென்று கருத்து.
(ஜ்ஞாந தசையில் அஜ்ஞாநத்தை முன்னிடுகையாவது) - தனக்கு தத்வம், ஹிதம், புருஷார்த்தம் (உண்மை, நன்மை, பயன்) ஆகிய மூன்றைக் குறித்து ஏதும் தெரியாது என்று தனது அறியாமையை ஆசார்யனுக்கு உணர்த்தி, அவர் இவற்றைக் குறித்து நமக்கு மேன்மேலும் நாம் அறியாத விஷயங்கள் குறித்து உபதேசம் செய்யும்படியாக, பலமுறை விண்ணப்பம் செய்தல் ஆகும். (வரண தசையில் அபூர்த்தியை முன்னிடுகையாவது) - கீழே உள்ள பல வரிகளில் காணப்படுவது போன்று ஸர்வேச்வரனைப் பற்றுவதற்குக் காரணமாக உள்ள புண்ணியம் போன்ற எதுவும் தன்னிடம் இல்லை என்பதை வெளிப்படுத்தும் ஆகிஞ்சந்யத்தை (வேறு உபாயம் இல்லை என்பதை வெளிப்படுத்தல் ஆகும்: திருவாய்மொழி (5-7-1) – நோற்ற நோன்பிலேன் ஸ்தோத்ரரத்னம் (22) – ந தர்ம நிஷ்டோஸ்மி – கர்மயோகத்தில் நிற்கத் தகுதி உடையவன் அல்லன் ஸ்ரீவைகுண்டஸ்தவம் (88) - ஸத்கர்ம நைவகில கிஞ்சந ஸஞ்சிநோமி – சிறந்த கர்மங்களைச் சிறிதும் கடைபிடிக்கவில்லை (ப்ராப்தி தசையி லார்த்தியை முன்னிடுகையாவது) – ஸர்வேச்வரன் தனக்குக் கிட்டும்போது கிட்டட்டும் என்று காத்திராமல், கீழே உள்ள வரிகளில் கூறுவது போன்று, தாமதத்தைப் பொறுத்துக் கொள்ள இயலாமல் உள்ளதற்குக் காரணமான தனது துன்பத்தைக் கூறுவதாகும்: பெரிய திருவாய்மொழி (6-3-8) - வானுலகந் தெளிந்தே யென்றெய்துவது திருவாய்மொழி (5-8-7) - தரியேன் இனி திருவாய்மொழி (6-9-9) – கூவிக்கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ (ப்ராப்யாநுபவ தசையிலபி நிவேசத்தை முன்னிடுகையாவது) - மிகுந்த தாகம் எடுத்த ஒருவனுக்கு எத்தனை தண்ணீர் பருகினாலும் தாகம் சட்டென்று அடங்காதது போன்று, ஸர்வேச்வரனை அனுபவித்த காரணத்தினால் த்ருப்தி ஏற்படாமல், மேன்மேலும் அவனை அனுபவித்தபடி இருக்கவேண்டும் என்று தனது ஆசையை வெளிப்படுத்துவது ஆகும். ஆகவே ஞானதசை போன்ற நான்கிலும் ஆத்மாவை ப்ரகாசமாக்குவது என்றால், இந்தத் தன்மைகளை முன்னிடுதல் என்று பொருள்.