Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 290)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

அதாவது ஜ்ஞாநதசையும் வரணதசையும் ப்ராப்திதசையும் ப்ராப்யாநுபவதசையும்.

அந்த நாலுதசையுந்தா னேதென்னு மபேக்ஷையிலே யருளிச்செய்கிறார் (அதாவது) என்று தொடங்கி.

– அந்த நான்கு நிலைகள் எவை என்ற கேள்விக்கு இப்போது விடை அருளிச் செய்கிறார்.

– (ஜ்ஞாநதசையாவது) - ஆசார்யோபதேசத்தாலே தனக்கு ஜ்ஞாநம் பிறந்து செல்லுகிற தசை. (வரணதசையாவது), ஸித்தோபாயபூதனான ஸர்வேச்வரனைத் தனக்கு உபாயமாக வரிக்கிற தசை. (ப்ராப்திதசையாவது), ஸம்ஸாரிக ஸகல துரித நிவ்ருத்தி பூர்வகமாக அவன் திருவடிகளை ப்ராபிக்கிற தசை. (ப்ராப்யாநுபவ தசையாவது), ப்ராப்யபூதனான வவனைக்கிட்டி யநுபவிக்கிற தசை. இவ்வநுபவ ஜநித ப்ரீதி காரித கைங்கர்யமிறே பரமபுருஷார்த்தம். ப்ரதமாபேக்ஷிதமான தத்த்வ ஜ்ஞாநமும், ஜ்ஞாந பலமான வுபாயவரணமும், வரணபலமான ப்ராப்தியும், ப்ராப்திபலமான வநுபவமும், அநுபவஜநித ப்ரீதிகாரித கைங்கர்யமுமாயிறே க்ரமமிருப்பது; ஆகையாலே, கைங்கர்ய தசை சரமதசையாய், பூர்வதசைகள் நாலு மிதிலே வந்தேறுகைக் கிட்டபடியொழுங்கா யிருக்கும்.

(ஜ்ஞாநதசையாவது) - ஆசார்யனின் உபதேசம் காரணமாக ஞானம் ஏற்பட்டு, அந்த ஞானம் தொடர்கின்ற நிலை. (வரண தசை) - தனக்கு எப்போதும் உதவி செய்யச் சித்தமாக உள்ளவனும், ஸித்தோபாயமாக உள்ளவனும் ஆகிய ஸர்வேச்வரனைத் தனக்கு உபாயமாகக் கொள்ளும் நிலை. (ப்ராப்தி தசை) - இந்த ஸம்ஸாரத்தில் உள்ள அனைத்து பாவங்களும் நீங்கப் பெற்று ஸர்வேச்வரனின் திருவடியை அடைகின்ற நிலை. (ப்ராப்ய அனுபவ தசை) - அடையப்படும் இலக்காக உள்ள ஸர்வேச்வரனை அடைந்து அனுபவிக்கும் நிலை. இப்படிப்பட்ட அனுபவத்தின் விளைவாக ஏற்பட்ட ப்ரீதி காரணமாகவே கைங்கர்யம் ஏற்படுகிறது; இதுவே உயர்ந்த பலனாகும். முதலில் இருக்க வேண்டியதான உண்மையான ஞானமும், அந்த ஞானம் காரணமாக ஏற்படும் “உபாயத்தைக் கைக்கொள்ளுதல்” என்பதும், இவ்விதம் கைக்கொண்டதால் ஏற்படும் பகவத் ப்ராப்தியும், இவ்விதம் பகவானை அடைந்தவுடன் உண்டாகும் அனுபவமும், இந்த அனுபவம் காரணமாக ஏற்படும் மகிழ்ச்சியால் செய்யப்படும் கைங்கர்யமும் என்று வரிசையாக உள்ளது. ஆகவே கைங்கர்ய நிலை என்பது இறுதியாக உள்ள நிலையாகவும், இதற்கு முன்பு காணப்படும் நான்கு நிலைகளும் இந்தக் கைங்கர்ய நிலையை வந்தடைய உதவும் மார்க்கமாகவும் உள்ளன என்று கருத்து.