Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 288)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
கைங்கர்ய தசைபோலே முன்புள்ள தசைகளிலும் ஸ்வரூபத்தை யுஜ்ஜ்வலமாக்க வேணும்.
இப்படி அநந்யப்ரயோஜநனாய்க் கொண்டு கைங்கர்யஞ்செய்தாலே ஸ்வரூபமுஜ்ஜ்வலமாவ தென்று சொன்னவிதிலே முக்தாவஸ்தையில் கைங்கர்ய தசையில் ஸ்வரூபௌஜ்ஜவல்யமும் அர்த்தாதுக்தமென்று நினைத்து, இப்படி கைங்கர்ய தசையில் ஸ்வரூபத்தை யுஜ்ஜ்வலமாக்குமோபாதி ஏதத்பூர்வ தசாவிசேஷங்களிலும் ஸ்வரூபத்தை யுஜ்ஜ்வலமாக்கவேணுமென் றருளிச்செய்கிறார் மேல் (கைங்கர்ய தசைபோலே) என்று தொடங்கி.
இவ்விதமாக மற்ற எந்தப் பயனையும் எண்ணாமல் கைங்கர்யம் செய்தால் மட்டுமே ஜீவாத்மாவின் ஸ்வரூபம் ப்ரகாசம் அடையும் என்று கூறினார். இதே போன்று முக்தி பெற்ற நிலையிலும் கைங்கர்யம் செய்யும்போது ஆத்மா இவ்விதம் ப்ரகாசத்துடன் விளக்கும் என்பதும் இங்கு மறைமுகமாகக் கிட்டும் அர்த்தம் என்று உரைக்க எண்ணினார். ஆகவே இவ்விதமாகக் கைங்கர்யம் செய்யும்போது ஸ்வரூபம் எவ்விதம் ப்ரகாசம் அடைகிறதோ அதே போன்று, அதற்கு முந்தைய நிலைகளிலும் ஆத்மாவை ப்ரகாசம் அடையச் செய்யவேண்டும் என்று உரைக்கிறார்.
– (முன்புள்ள தசைகளிலும்) என்றது – கைங்கர்யத்துக்குப் பூர்வதசைகளிலு மென்றபடி.
– “முன்புள்ள தசைகளிலும்” என்பதன் மூலம் கைங்கர்யம் செய்யத் தொடங்கும் நிலைக்கு முன்பிருந்த காலங்களில் அல்லது நிலைகளில் என்று கூறினார்.