Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 285)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
கொடுத்துக் கொள்ளாதே கொண்டத்துக்குக் கைக்கூலி கொடுக்கவேணும்.
இவ்வளவும் போராது, தான் கொடுத்ததை அவன் கொண்டதுக்கு ப்ரத்யுபகாரம் பண்ணவும் வேணுமென்கிறார் மேல் (கொடுத்து) என்று தொடங்கி.
– ஸர்வேஸ்வரனிடம் தான் எதனையும் கேட்காமல், அவனை நம்மிடமிருந்து எதேனும் பெறவேண்டும் என்ற நிலைக்குத் தள்ளினால் மட்டுமே போதாது; தான் அளித்ததை அவன் ஏற்றுக் கொண்டதற்கு நன்றி செலுத்தும் செயல் ஏதேனும் செய்தல் வேண்டும் என்கிறார்.
– அதாவது, “தேஹிமே ததாமிதே” என்கிறபடியே, தானவனுக் கொன்றை ஸமர்ப்பித்து அவன் பக்கலிலேயொரு ப்ரயோஜநம் கொள்ளாதே, “இன்று வந்தித்தனையு மமுது செய்திடப்பெறில், நானென்று நூறாயிரமாக் கொடுத்துப் பின்னுமாளுஞ் செய்வன்” என்ற பெரியாழ்வார் திருமகளாரைப்போலே, தான் ஸமர்ப்பித்த த்ரவ்யத்தை யவனங்கீகரித்த வுபகாரத்துக்காக, அப்படியிருந்துள்ளவற்றைத் தன்னபிநிவேசாநு குணமாக நிறையக் கொண்டு வந்து ஸமர்ப்பியா நின்று கொண்டு பின்னையு மடிமை செய்கையாகிற கைக்கூலி கொடுக்க வேணுமென்கை.
தேஹிமே ததாமிதே - எனக்கு ஏதேனும் கொடுப்பாயாக, நான் உனக்குக் கொடுக்கிறேன் - என்று கூறுவது போன்று, தான் ஸர்வேச்வரனுக்கு ஏதேனும் ஒன்றை அளித்துவிட்டு, அதன் காரணமாக, தான் அவனிடமிருந்து எந்தப் பயனையும் எதிர்பாராமல் இருக்கவேண்டும். நாச்சியார் திருமொழி (9-7) – இன்று வந்தித்தனையு மமுது செய்திடப்பெறில், நானென்று நூறாயிரமாக் கொடுத்துப் பின்னுமாளுஞ் செய்வன் - என்று அருளிச்செய்த பெரியாழ்வாரின் திருமகள் போன்று, தான் அளித்த பொருள் ஒன்றை அவன் ஏற்றுக்கொண்டால், அதன் காரணமாகவே, தனது ஆசைக்கு ஏற்றபடி அந்தப் பொருளை மிகவும் அதிகமாகக் கொண்டு வந்து அவனுக்கு அளிக்கவேண்டும். அதற்கும் மேலே, அடிமை செய்தல் என்னும் கைக்கூலியையும் அளிக்கவேண்டும்.