Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 283)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
கைங்கர்யந்தன்னைப் பலஸாதநமாக்காதே பலமாக்க வேணும்.
ஆக, கீழிரண்டு வாக்யத்தாலும் – கைங்கர்யாவச்ய கர்த்தவ்யத்வமும், கைங்கர்யாபாவத்தில்வரு மநர்த்த விசேஷங்களுங் காட்டப்பட்டது; ஏவம்வித கைங்கர்யத்தில் ஸாதந புத்தியைத் தவிர்க்கிறார் மேல் (கைங்கர்யந்தன்னை) என்று தொடங்கி.
– கடந்த இரண்டு சூர்ணைகள் மூலம் கைங்கர்யம் என்பது அவசியம் செய்யப்படவேண்டும் என்பதும், கைங்கர்யம் செய்யாமல் விட்டால் உண்டாகும் தீமைகளும் கூறப்பட்டன. இப்படியாக உள்ள கைங்கர்யம் என்பது ஒரு பலனைப் பெற உதவுகின்ற கருவி (ஸாதனம்) என்ற எண்ணத்துடன் கைங்கர்யத்தைச் செய்தல் கூடாது என்று இந்தச் சூர்ணையில் அருளிச்செய்கிறார்.
– அதாவது, இப்படி யவச்ய கரணீயமாகக் கீழ்ச்சொன்ன கைங்கர்யந் தன்னைப் பண்ணுமளவில் த்ருஷ்டாத்ருஷ்ட பலங்களி லேதேனுமொன்றுக்கு ஸாதநமாக ப்ரதிபத்தி பண்ணாதே ஸ்வயம் ப்ரயோஜநமாக ப்ரதிபத்தி பண்ணவேணுமென்கை.
இப்படியாக அவசியம் செய்ய வேண்டும் என்பதாக உள்ள கைங்கர்யத்தை இயற்றும்போது, “இந்தக் கைங்கர்யம் என்பது இந்த உலகிலோ, அந்த உலகிலோ பயன் தரும்”, என்று பலனுக்குச் சாதனமாகக் கைங்கர்யத்தை எண்ணக்கூடாது; கைங்கர்யம் மேன்மேலும் கைகூடுதல் என்பதே இதன் பலன் என்று எண்ணவேண்டும்.