Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 282)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

அதுவுமில்லாதபோது அதிகாரத்திலும் உபாயோபேயங்களிலும் அந்வயமின்றிக்கே யொழியும்.

அதுதானு மில்லாவிடில் செய்வதென்னென்ன வருளிச்செய்கிறார் (அதுவுமில்லாதபோது) என்று தொடங்கி.

பயத்தாலும் கைங்கர்யம் ஏற்பட்டவில்லை என்றால் என்ன செய்வது என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

– அதாவது, அமுக்க்யமான பீதிமூல கைங்கர்யந்தானுமில்லாதபோது, கிஞ்சித்காராபாவத்தாலே சேஷத்வரூபமான வதிகாரத்திலும், அதிகாரி ஸாபேக்ஷமா யிருந்துள்ள சேஷியுடைய க்ருபாரூபமான வுபாயத்திலும், இவனுடைய வநுகூலவ்ருத்தி ஸாபேக்ஷமான வவனுடைய முகமலர்த்தியாகிற வுபேயத்திலு மந்வயமற்று விடுமென்கை.

பயம் காரணமாக உண்டாகின்ற கைங்கர்யம் உயர்ந்தது அல்ல என்றபோதிலும், அந்தக் கைங்கர்யம் கூடக் கிட்டவில்லை என்றால் என்ன செய்வது? கைங்கர்யம் இல்லாத காரணத்தினால் – அடிமைத்தன்மை என்ற தகுதி, அதிகாரியை விரும்பியபடி உள்ள ஸர்வேச்வரனின் க்ருபை என்ற உபாயம், அதிகாரியின் அநுகூலமான செயல்களை எதிர்பார்த்தபடி உள்ள ஸர்வேச்வரனின் திருமுக மலர்த்தி என்ற உபேயம் ஆகிய மூன்றும் இவனுடன் எந்தவிதமான தொடர்பு இல்லாமல் போய்விடும்.