Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 281)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

கைங்கர்யந்தான் பக்திமூலமல்லாதபோது பீதிமூலமாய் வரவேணும்.

– ஈத்ருச கைங்கர்ய மிவனுக்கு ஏதேனுமொரு வழியாலேயாகிலு முண்டாகவேணுமென்னு மிதினுடைய அவச்யகரணீயத்வத்தை யருளிச்செய்கிறார் மேல் (கைங்கர்யந்தான்) என்று தொடங்கி.

– இப்படிப்பட்ட கைங்கர்யம் என்பது இந்த அதிகாரிக்கு ஏதேனும் ஒரு வழியில் ஏற்படவேண்டும் என்றும், இப்படியாக உள்ள கைங்கர்யம் அவசியம் செய்யத்தக்கது என்றும் இங்கு அருளிச்செய்கிறார்.

(பக்தி மூலமாய் வருகையாவது) – சேஷியுடைய முகமலர்த்திக் குறுப்பானவையே செய்துகொண்டு நிற்கவேண்டும்படியான தத்விஷய ப்ரேமமடியாக வருகை. (அல்லாதபோது பீதி மூலமாய் வருகையாவது) - அதின்றிக்கே யொழிந்தால், “அகிஞ்சித்கரஸ்ய சேஷத்வாநுபபத்தி:” என்கிறபடியே – சேஷ வ்ருத்தியில்லாதபோது சேஷத்வஹாநி பிறக்குமென்னும் பீதியடியாக வருகை. இதில் பக்தி மூலமானதுவே முக்க்யம், ததலாபத்தில் பீதிமூலந்தானாகிலும் வேணுமென்றபடி.

பக்தி மூலம் இத்தகைய கைங்கர்யம் உண்டாகிறது என்பது என்ன? ஸர்வேச்வரனின் திருமுக மலர்த்தி என்பதே குறிக்கோள் என்று கொண்டு, அதனையே கைங்கர்யத்தின் காரணமாகக் கொண்டு, அந்த முகமலர்த்திக்கு ஏற்றவற்றையே செய்தல் வேண்டும் என்று கொள்கிறான்; இத்தகைய நிலை அந்த ஸர்வேச்வரன் மீது கொள்ளும் ப்ரேமையால் உண்டாவதாகும். (அல்லாதபோது பீதி மூலமாய் வருகையாவது) – இவ்விதம் பக்தி காரணமாக ஒருவனுக்குக் கைங்கர்யம் செய்யவேண்டும் என்ற எண்ணம் ஏற்படவில்லை என்றால், பயம் காரணமாக ஏற்படும் என்கிறார். அகிஞ்சித்கரஸ்ய சேஷத்வாநுபபத்தி: – கைங்கர்யம் செய்யாதவனுக்கு அடிமைத்தனம் கிட்டாது - என்றுள்ள வாக்யத்தின்படி, கைங்கர்யம் செய்யாதபோது தனது அடிமைத்தனத்துக்கு அழிவு ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தால் கைங்கர்யம் செய்யவேண்டும் என்ற எண்ணம் உண்டாகிவிடும். ஆக பக்தியால் ஏற்படும் கைங்கர்யம் என்பதே மிகவும் முக்கியம் ஆகும்; இவ்விதம் ஏற்படவில்லையென்றால், பயம் காரணமாகவாவது உண்டாகவேண்டும் என்று கருத்து.