Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 280)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

இவன் புண்யத்தைப் பாபமென்றிருக்கும்; அவன் பாபத்தைப் புண்யமென்றிருக்கும். அவனுக்கது கிடையாது; இவன் செய்யான்.

இவன் புண்யத்துக்கஞ்சும்படியும், வத்ஸலனான வீச்வரனுக்கும் இடமறும்படி பாபப்ரவ்ருத்தியி லந்வயமற்றிருக்கும் படியையும் தர்சிப்பிக்கிறார் மேல் (இவன் புண்யத்தை) இத்யாதி வாக்யத்ரயத்தாலே.

இப்படிப்பட்ட அதிகாரி ஒருவன் மோக்ஷத்திற்குத் தடை ஏற்படுத்திவிடும் என்ற காரணத்தினால் புண்ணியம் செய்வதற்கு அச்சம் கொள்கிறான் என்றும், மிகுந்த வாத்ஸல்யம் கொண்ட ஸர்வேச்வரனால் கூட இவனைக் காப்பாற்ற இயலாமல் போவதற்கு ஏற்றதான பாவங்களைச் செய்வதற்கும் அஞ்சுபவன் என்றும் இந்தச் சூர்ணையில் காட்டுகிறார்.

– அதாவது “ததா வித்வாந் புண்யபாபே விதூய நிரஞ்ஜந: பரமம் ஸாம்யமுபைதி” என்கையாலே புண்யபாபங்களிரண்டும் மோக்ஷ விரோதி என்றிருக்கு மிவ்வதிகாரி, நாட்டார் ஸுகஹேதுவென்று விரும்பியிருக்கும் புண்யத்தை பகவத் ப்ராப்தி ப்ரதிபந்தகதயா அநிஷ்டாவஹமாகையாலே, துக்கஹேதுவான பாபமென்று நினைத்து வெருவியிருக்கும்; ஆச்ரிதர் செய்த குற்றம் நற்றமாகவே கொள்ளுமதி மாத்ரவத்ஸலனான வீச்வரன் இவ்வதிகாரி யேதேனுமொரு பாபத்தைப் பண்ணினாலும் அத்தைக் குற்றமாக நினையாதே நற்றமாக நினைத்துகந்திருக்கும்; அவனப்படி யிருந்தானேயாகிலும், இவ்வதிகாரி பாபப்ரவ்ருத்தியி லந்வயமற்று நியதனாய் வர்த்திக்கையாலே, பாபத்தை புண்யமாகக் கொள்ளும் வத்ஸலனானவனுக்கு, அதாசைப்பட்டுப் போமித்தனை யொழியக் கிடையாதென்கை. ஆக, கீழ் கர்த்தவ்யமாகச் சொன்ன கைங்கர்யமறிவது இன்னத்தாலே என்றும், கைங்கர்யந்தான் த்விவிதமென்றும், அதுதா னின்னதென்றும் ததுபாயமு மின்னத்தை யவலம்பித்திருக்குமென்றுஞ் சொல்லி, அதில் ப்ராஸங்கிக சங்கா பரிஹாரமும் பண்ணப்பட்டது.

– முண்டக உபநிஷத்(3-1) - ததா வித்வாந் புண்யபாபே விதூய நிரஞ்ஜந: பரமம் ஸாம்யமுபைதி – பரமபுருஷனைக் காணும் அந்த நேரத்தில் தனது புண்ணியம் மற்றும் பாவம் ஆகிய இரண்டையும் உதறியவனாக, உலகத்தொடர்பு அற்றவனாக பரம புருஷனை ஒத்த நிலையை அடைகிறான் - என்று கூறுவது காண்க. அதாவது புண்ணியம் மற்றும் பாவம் ஆகிய இரண்டுமே மோக்ஷத்திற்கு விரோதிகள் என்று இந்த அதிகாரி அறிகிறான். இந்த உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் “இன்பம் அளிக்கவல்ல காரணம்” என்று புண்ணியத்தை விரும்பியுள்ளனர்; அதனால் இத்தகைய புண்ணியம் என்பது ஸர்வேச்வரனை அடையத் தடையாக உள்ளது என்பதை உணர்ந்து, அது விருப்பம் இல்லாதவற்றை அளிப்பதாக உணர்ந்து, அதனைத் துக்கத்திற்குக் காரணமான பாவம் என்றே எண்ணி பயம் கொள்கிறான். (அவன் பாபத்தைப் புண்யமென்றிருக்கும்) – தனது அடியார்கள் ஏதேனும் பாவம் செய்தபோதிலும், அதனைக் குற்றம் என்று கொள்ளாமல், மிகுந்த வாத்ஸல்யம் காரணமாக ஸர்வேச்வரன் அவற்றைக் குணம் என்றே கருதுகிறான். (அவனுக்கது கிடையாது; இவன் செய்யான்) – ஸர்வேச்வரன் இப்படி உள்ளவனாக இருந்தபோதிலும், இந்த அதிகாரி பாவச் செயல்களில் தொடர்பு அற்றவனாக எப்போதும் உள்ளதால், பாவங்களையும் புண்ணியமாகவே கொள்ளுகின்ற வாத்ஸல்யம் கொண்ட ஸர்வேச்வரனுக்கு, இத்தகைய எண்ணம் என்பது வெறும் ஆசையாக மட்டுமே இருக்கும் அல்லாது, நிறைவேறாத எண்ணமே ஆகும். இப்படியாக சூர்ணை-275 தொடங்கி, சூர்ணை-278 வரை கூறப்பட்டதான கைங்கர்யத்தை அறிவது எதன் மூலம் என்பதும், கைங்கர்யம் என்பது இரண்டுவிதமாகும் என்பதும், அந்த வகைகள் இவையே என்பதும், அந்த இரண்டும்விதங்களும் எதனைப் பற்றி இருக்கும் என்பதும் கூறப்பட்டது; மேலே இவற்றைக் கூறும்போது எழுகின்ற சந்தேகங்களும், அவற்றுக்கான சமாதானங்களும் உரைக்கப்பட்டன.