Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 279)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
புண்யத்துக்கஞ்சுகிறவன் பாபத்தைப் பண்ணானிறே.
இம்மூன்று யோஜநைக்கும் மேலில் வாக்யத்தோடு ஸங்கதி யென்னென்னில்; ப்ரதம யோஜநையில் இப்படி வர்ணாச்ரமாநுஷ்டாநத்தில் ப்ரதிபத்தி விசேஷங்களிலும் ஆத்மஸ்வரூபத்தினுடைய விநியோக தசையி லாநுகூல்ய ப்ராதி கூல்யங்களிலுமாக இஷ்டாநிஷ்டங்களுக்கு விஷய விபாகம் பண்ணவேணுமோ, வர்ணாச்ரமாநுரூபமாயும் ஸ்வரூபாநுரூபமாயு முள்ளவற்றைச் செய்கை யிஷ்டம், தத் விருத்தங்களான அக்ருத்யாதிகளைச் செய்கை அநிஷ்டமென்றாலோவென்ன வருளிச் செய்கிறார் மேல். (புண்யத்துக்கு) என்று தொடங்கி. த்விதீய யோஜநையில், இப்படி வர்ணாச்ரம விருத்தங்களையும் ஸ்வரூப விருத்தங்களையுஞ் செய்கை அநிஷ்டமென் றிவனுக்குச் சொல்லித் தவிர்ப்பிக்கைதான் வேணுமோ, என்ன (புண்யத்துக்கஞ்சுகிறவன்) என்று தொடங்கி யருளிச்செய்கிறார். த்ருதீய யோஜநையில், இப்படி வர்ணாச்ரமங்களி லூற்றமறுத்தால் அக்ருத்யகரணங்கள் வந்து புகுராதோ வென்ன, (புண்யத்துக் கஞ்சுகிறவன்) இத்யாதியாலே யருளிச்செய்கிறார்.
கடந்த சூர்ணையில் கூறப்பட்ட மூன்றுவிதமான பொருள்கள் மற்றும் இந்தச் சூர்ணை ஆகிய இரண்டிற்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழலாம். முதல் பொருளில் – வர்ணாச்ரம தர்மங்களைப் பின்பற்றவேண்டும் என்றுள்ள எண்ணத்தில் கூட ஆத்மஸ்வரூபத்தைப் பயன்படுத்தும் நிலையில் அநுகூலமாக உள்ளது என்பது விரும்பத்தக்கது, அநுகூலமாக இல்லாமல் உள்ள நிலை விரும்பத்தகாதது என்று பிரிக்கப்பட்டது அல்லவோ? இதற்குப் பதிலாக வர்ணாச்ரம தர்மங்களுக்கு ஏற்றவையாயும், ஆத்மஸ்வரூபத்திற்கு ஏற்றவையாயும் உள்ளவற்றைச் செய்தல் விரும்பத்தக்கது என்றும், அவற்றைச் செய்யாமல் இருத்தல் விரும்பத்தகாதது என்றும் கூறலாம் அல்லவோ? இந்தக் கேள்விக்கு, இந்தச் சூர்ணையில் பதில் அருளிச்செய்கிறார். இரண்டாவது பொருளில் – வர்ணாச்ரம தர்மங்களுக்குச் சேராதவற்றையும், ஆத்மஸ்வரூபத்துக்குச் சேராதவற்றையும் செய்வது என்பது விரும்பத்தக்கது அல்ல என்று உரைத்து, அதனைத் தடுக்கவேண்டுமோ என்ற கேள்விக்கு இந்தச் சூர்ணையில் விடை அருளிச்செய்கிறார். மூன்றாவது பொருளில் – வர்ணாச்ரமங்களில் உள்ள ஆழ்ந்த ஈடுபாடு என்பதை விலக்கினால் செய்யக்கூடாதவற்றைச் செய்தல் என்ற நிலை வந்துவிடாதோ என்ற கேள்விக்கு இந்தச் சூர்ணையில் விடை அருளிச்செய்கிறார்.
(புண்யத்துக்கஞ்சுகிறவன் பாபத்தைப் பண்ணானிறே) என்றது, பகவதநுக்ரஹ ஹேதுவாக சாஸ்த்ர ஸித்தமாயிருக்கச் செய்தேயும் மோக்ஷ விரோதி யென்னுமத்தாலே புண்யம் செய்கைக்குட்பட அஞ்சுகிற இவ்வதிகாரி, பகவந்நிக்ரஹ ஹேதுவாக சாஸ்த்ர ஸித்தமாய் நரகாவஹமென்று ஸாமாந்யருமுட்படச் செய்யாத பாபத்தை யொருக்காலும் செய்யானிறே என்கை.
ஸர்வேஸ்வரனுடைய க்ருபையைப் பெறுவதற்குக் காரணமாக உள்ளவை என்று சாஸ்த்ரங்களில் புண்ணிய கர்மங்கள் உரைக்கப்படுகின்றன. ஆனாலும் இவை மோக்ஷத்திற்குத் தடை ஏற்படுத்திவிடும் என்பதால் புண்ணிய கர்மங்கள் குறித்து ஒருவன் அஞ்சக்கூடும். இப்படிபட்டவன் ஸர்வேச்வரனின் கோபத்திற்குக் காரணமாக இருக்கும் என்று சாஸ்த்ரங்களில் குறித்துக் கூறப்படுவதாலும், அவை நரகத்தை அளித்துவிடும் என்று உரைக்கப்படுவதாலும், சாதாரண மக்கள் கூட பாவம் என்று எண்ணுவதைச் செய்யமாட்டான்.