Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 278)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
இஷ்டாநிஷ்டங்கள் வர்ணாச்ரமங்களையு மாத்ம ஸ்வரூபத்தையும் மவலம்பித்திருக்கும்.
இவைதானிரண்டு மெத்தை யவலம்பித்திருக்குமென்ன வருளிச்செய்கிறார் மேல் (இஷ்டாநிஷ்டங்கள்) என்று தொடங்கி.
இவை இரண்டும் எதனைப் பற்றி உள்ளன என்பதை விளக்குகிறார்.
– அதாவது, கீழ்ச்சொன்ன கைங்கர்ய ப்ரதிஸம்பந்திக ளிருவருடையவு மிஷ்டா நிஷ்டங்கள் இவ்வதிகாரியுடைய வர்ணாச்ரமங்களையும் ஆத்மஸ்வரூபத்தையும் பற்றியிருக்குமென்கை, (இஷ்டாநிஷ்டங்கள் வர்ணாச்ரமங்களைப் பற்றியிருக்கையாவது), ஸ்வவர்ண ஸ்வாச்ரமோசிதமான தர்மங்களை பரார்த்தபுத்த்யாவநுஷ்டிக்கை இஷ்டமாய், ஸ்வார்த்தபுத்த்யாவநுஷ்டிக்கை அநிஷ்டமாயிருக்கை. பரார்த்தபுத்த்யா வநுஷ்டிக் கையாவது, லோகஸங்க்ரஹதயாவாகவும் சிஷ்யபுத்ரர்களுடைய வுஜ்ஜீவநார்த்தமாகவும் ஆந்ருசம்ஸ்யத்தாலேயநுஷ்டிக்கை. இவ்வர்த்தத்தை, “இனி இவற்றில் நம்மாசார்யர்க ளநுஷ்டிக்கிறவை சிஷ்யபுத்ரர்களுடைய வுஜ்ஜீவநார்த்தமாக ஆந்ருசம்ஸ்யத்தாலே யநுஷ்டிக்கிறார்களித்தனை; இப்படி யநுஷ்டியாதபோது பகவத்விபூதிபூதரான சேதநர்க்கு நாசஹேதுவாகையாலே ஈச்வரனுக் கநபிமதபூதனாவன்; ஆகையால், யாதோரளவாலே லோகஸங்க்ரஹம் பிறக்கும், யாதோரளவாலே சிஷ்யபுத்ரர்களுக் குஜ்ஜீவநமுண்டாம், அவ்வளவு மநுஷ்டேயமென்றதாய்த்து; ப்ரவ்ருதி தர்மந்தானே அபிஸந்தி பேதத்தாலே நிவ்ருத்தி தர்மமானவோபாதி, இந்த நிவ்ருத்தி தர்மமும் ப்ராப்யமாகக் கடவது; இவ்விடத்தில் அகரணேப்ரத்யவாயம், எம்பெருமானுடைய வநபிமதத்வமும் தன்னுடைய புருஷார்த்தஹாநியுமாகக் கடவது” என்று தனிச்லோகத்திலே இவர்தாமே யருளிச் செய்தாரிறே. இனி ஸ்வார்த்த புத்த்யா அநுஷ்டிக்கையாவது, ஸ்வவர்ண ஸ்வாச்ரமோசிதமாக விஹிதமாகையாலே நமக்கிவையநுஷ்டியா தொழியில் க்ருத்யாகரணரூப பாபம் வருமென்று நினைத்தநுஷ்டிக்கை. (இஷ்டாநிஷ்டங்கள் ஆத்மஸ்வரூபத்தைப் பற்றியிருக்கையாவது) “இச்சை ஸ்வரூபம்” என்கிறபடியே, விநியோக தசையில் சேஷியுடைய இச்சாநுகுணமாக ஸ்வரூபத்தை விநியோகப்படுத்துகை யிஷ்டமாய், தட்டுமாறி விநியோகங் கொள்ளுமளவில் தன்னுடைய சேஷத்வத்தையிட்டிறாய்த்தல் பாரதந்த்ர்யத்தையிட் டெதிர்விழி கொடா தொழிதல் செய்கை அநிஷ்டமாயிருக்கை. அங்ஙனன்றிக்கே, (இஷ்டாநிஷ்டங்கள்) இத்யாதிக்கு, ஸ்வவர்ண ச்வாச்ரமோசிதங்களைச் செய்கையிஷ்டம், தத்விருத்தங்களைச் செய்கை அநிஷ்டமென்றும், ஆத்மஸ்வரூபத்துக்கு உசிதமானவற்றைச் செய்கையிஷ்டம், தத்விருத்தங்களைச் செய்கை யநிஷ்டமென்றும் யோஜிக்கவுமாம். அங்ஙனுமன்றிக்கே, ஔபாதிகமுமாய் அநித்யமுமான வர்ணாச்ரமங்களிலே ஊற்றிருக்கை யநிஷ்டம், நிருபாதிக நித்யசேஷமான வாத்மஸ்வரூபத்திலே ஊற்றிருக்கை யிஷ்டமென்றும் யோஜிக்கவுமாம். இங்ஙனூற்றத்தை யிட்டுச் சொல்லுகையன்றிக்கே, அநிஷ்டம் வர்ணாச்ரமத்தை யவலம்பித்திருக்கும், இஷ்டம் ஆத்மஸ்வரூபத்தை யவலம்பித்திருக்கும் என்றிங்ஙனே விபஜித்தும் வர்ணாச்ரமாசாரத்தை யநிஷ்டகோடியாகச் சொல்லப் பார்க்கில், “ச்ருதிஸ் ஸ்ம்ருதிர் மமைவாஜ்ஞா யஸ்தா முல்லங்க்ய வர்த்ததே, ஆஜ்ஞாச்சேதீ மமத்ரோஹீ மத்பக்தோபி நவைஷ்ணவ:” என்றும், “அவிப்லவாய தர்மாணாம் பாலநாய குலஸ்யச, ஸங்க்ரஹாயச லோகஸ்ய மர்யாதா ஸ்தாபநாயச, ப்ரியாய மம விஷ்ணோச்ச தேவதேவஸ்ய சார்ங்கிண:, மநீஷீவைதிகாசாரம் மநஸாபி நலங்கயேத”, “யதாஹி வல்லபோ ராஜ்ஞோ நதீம் ராஜ்ஞா ப்ரவர்த்திதாம், லோகோப யோகிநீம் ரம்யாம் பஹுஸஸ்ய விவர்த்திநீம், லங்கயந் சூலமாரோஹே தநபேக்ஷோபி தாம்ப்ரதி, ஏவம் விலங்கயந் மர்த்யோ மர்யாதாம் வேத நிர்மிதாம், ப்ரியோபி நப்ரியோஸௌ மே மதாஜ்ஞாவ்யதிவர்த்தநாத், உபாயத்வ க்ரஹம் தத்ர வர்ஜயேந் மநஸா ஸுதீ:” என்றும் ஸர்வேச்வரனும் பிராட்டியுமருளிச் செய்த வசநங்களோடும் பூர்வாசார்யர்களுடைய வசநாநுஷ்டாநங்களோடும் விரோதிக்குமிறே; ஆனபின்பு, கீழ்ச்சொன்னபடியே இவ்வாக்யத்துக்குப் பொருளாகக் கடவது.
மேலே கூறப்பட்டதான கைங்கர்யங்களை ஏற்றுக்கொள்பவர்கள் ஆசார்யனும் ஸர்வேச்வரனும் ஆவர்; இவர்கள் விரும்புவதும், விரும்பாமல் உள்ளதும் அந்தச் சேதனனின் வர்ணாச்ரமம் மற்றும் ஆத்மஸ்வரூபம் ஆகிய இரண்டையும் ஒட்டியே இருக்கும் என்று கருத்து. “இஷ்டா நிஷ்டங்கள் வர்ணாச்ரமத்தைப் பற்றியிருப்பது” என்றால் என்ன? தன்னுடைய வர்ணம் (ஜாதி) மற்றும் ஆச்ரமம் (ப்ரம்மச்சர்யம் போன்ற நான்கு நிலைகள்) ஆகியவை பற்றிய தர்மங்களை மற்றவர்களுக்காகச் செய்யும்போது விருப்பமும், தனக்காகச் செய்யும்போது விருப்பம் அற்ற நிலையும் கூடி இருத்தல் என்று கருத்து. மற்றவர்களுக்காக என்று கூறப்படுவதன் பொருள் - உலகினரின் நன்மைக்காகவும், சிஷ்யர்கள் மற்றும் புத்திரர்கள் ஆகியோரின் உஜ்ஜீவனத்திற்காகவும் அவர்களிடம் ஏற்பட்ட இரக்கம் காரணமாகச் செய்தல் – என்று பொருள். இந்த அர்த்தத்தை ஸ்வாமி பிள்ளைலோகாசார்யார் தனது தனிச்லோகம் என்னும் க்ரந்தத்தில் பின்வருமாறு அருளிச்செய்துள்ளார் - நம்முடைய ஆசார்யர்கள் அநுஷ்டிக்கும் அனைத்தும் சிஷ்யர்களும் புத்திரர்களும் உய்யவேண்டும் என்ற இரக்கத்தாலேயே ஆகும். இவ்விதம் அநுஷ்டிக்கவில்லை என்றால், ஸர்வேச்வரனின் செல்வமாக உள்ள சேதனர்கள் இவர்களைப் பின்பற்றி, அநுஷ்டிக்காமல் இருந்து விடக்கூடும். இதனால் அவர்கள் அழியக்கூடும் என்பதால், இவன் ஸர்வேச்வரனுக்கு விருப்பம் அற்றவனாகி விடுவான். ஆகவே இவன் அநுஷ்டிப்பதால் உலகிற்கு நன்மை எந்த அளவு ஏற்படுமோ, சிஷ்யர்களும் புத்திரர்களும் எந்த அளவு உய்வார்களோ அந்த அளவு அநுஷ்டிக்கவேண்டும். ஒரு பயனை மனதில் கொண்டு செய்யப்படும் செயல் என்பது, எண்ணத்தில் ஏற்படும் மாறுபாடு காரணமாக, ஒரு பயனைக் கருதாமல் செய்யப்படும் செயலாக மாறிவிடலாம்; இதே போன்று இங்கு பலனைக் கருதாமல் செய்யப்படும் செயல்கள் அநுஷ்டிக்கத் தக்கதாக உள்ளது. இங்கு இவற்றைச் செய்யாவிட்டால் குற்றம் என்பது எப்படி என்றால் – ஸர்வேச்வரன் தன்னை விரும்பாமல் போவதும், தனது புருஷார்த்தத்தை இழப்பதும் - என்பதாகும். அடுத்து தனக்காகச் செய்தல் என்பது என்ன? வர்ணம் மற்றும் ஆச்ரமத்துக்கு விதிக்கப்பட்ட கர்மங்களை இயற்றவில்லை என்றால், செய்யக்கூடாத செயல்களைச் செய்தால் உண்டாகும் பாவம் வந்து சேரும் என்று எண்ணி அவற்றை இயற்றுதலே ஆகும். “இஷ்டா நிஷ்டங்கள் ஆத்மஸ்வரூபத்தை பற்றியிருக்கை” என்பது ஏன்? ஸ்வாமி நம்பிள்ளை - இச்சை ஸ்வரூபம் – ஸர்வேச்வரனின் விருப்பத்தின்படி நடத்தலே ஜீவாத்மாவின் லக்ஷணம் – என்று கூறுவதற்கு ஏற்ப சேதனன் ஒருவனை ஸர்வேச்வரன் பயன்படுத்திக் கொள்ளும்போது தனது விருப்பத்தின்படியே பயன்படுத்துகிறான். இவ்விதம் உள்ளபோது அவன் சேதனனை சேஷத்வத்துக்கு மாறாகப் பயன்படுத்தும் போது, சேதனன் அதற்கு எந்தவிதமான மறுப்பும் உரைத்தல் கூடாது. தனது நிலையைக் கண்டு ஸர்வேச்வரனின் விருப்பத்திற்கு இணங்காமல் இருத்தலும் கூடாது. இதே சூர்ணைக்கு அடுத்து வேறுவிதமாகவும் பொருள் உரைக்கலாம். சேதனன் தன்னுடைய வர்ணம் மற்றும் ஆச்ரமம் ஆகியவற்றுக்கு உரிய செயல்களைச் செய்வதை ஸர்வேச்வரன் விரும்புகிறான்; அதற்கு மாறாகச் செய்வதை அவன் விரும்புவதில்லை என்றும் உரைக்கலாம். இதே போன்று ஆத்மஸ்வரூபத்திற்குத் தகுதியானவற்றைச் செய்தலை ஸர்வேச்வரன் விரும்புகிறான்; அதற்கு முரணாக உள்ளதை அவன் விரும்புவதில்லை என்றும் உரைக்கலாம். அல்லது கர்மம் காரணமாக வந்ததும், நிலையற்றதும் ஆகிய வர்ணாச்ரம தர்மங்களில் ஆழ்ந்து இருந்தல் என்பதை ஸர்வேச்வரன் விரும்புவதில்லை; எந்தவிதமான காரணமும் இன்றி இயற்கையாகவே அவனுக்கு அடிமையாக உள்ள ஆத்மஸ்வரூபத்தில் ஆழ்ந்து இருத்தலையே அவன் விரும்புகிறான் என்றும் கூறலாம். இப்படியாக ஆழ்ந்து இருந்தல் என்பதை உரைக்காமல், “வர்ணம் மற்றும் ஆச்ரம தர்மங்களைப் பற்றி இருப்பதே அவன் விரும்பாதது, ஆத்மஸ்வரூபத்தைப் பற்றி நிற்பது மட்டுமே அவன் விரும்புவது”, என்று வர்ணாச்ரம தர்மங்களை அவன் விரும்புவதில்லை என்று வைத்துக்கொள்வோம். இவ்விதம் கொண்டால் கீழே உள்ள பிராட்டி மற்றும் ஸர்வேச்வரன், பூர்வாசார்யர்களின் அநுஷ்டானங்கள் ஆகிய பலவற்றுடன் முரண்பாடு ஏற்படும். பாஞ்சராத்ரம் – ச்ருதிஸ் ஸ்ம்ருதிர் மமைவாஜ்ஞா யஸ்தா முல்லங்க்ய வர்த்ததே, ஆஜ்ஞாச்சேதீ மமத்ரோஹீ மத்பக்தோபி நவைஷ்ணவ: - வேதவாக்கியங்கள் மற்றும் ஸ்ம்ருதி வாக்கியங்கள் எனது ஆணையாகும். அவற்றை மீறி நடப்பவன் எனது பக்தனாகவே இருந்தாலும், அவன் எனது ஆனையை மீறி நடப்பதால் வைஷ்ணவன் ஆகமாட்டான். லக்ஷ்மீதந்த்ரம் – அவிப்லவாய தர்மாணாம் பாலநாய குலஸ்யச, ஸங்க்ரஹாயச லோகஸ்ய மர்யாதா ஸ்தாபநாயச, ப்ரியாய மம விஷ்ணோச்ச தேவதேவஸ்ய சார்ங்கிண:, மநீஷீவைதிகாசாரம் மநஸாபி நலங்கயேத - வர்ணாச்ரம தர்மங்கள் அழிந்து போகாமல் இருப்பதற்கும், குலதர்மங்களைக் காப்பதற்கும், உலகின் நன்மையின் பொருட்டும், சாஸ்த்ரங்களின் மரியாதைகளை நிலை நாட்டுவதற்காகவும், தேவர்களின் தேவனாகிய சார்ங்கம் என்னும் வில்லை ஏந்திய ஸர்வேச்வரன் மற்றும் அவன் பத்தினியாகிய எனக்கும் மகிழ்வு ஏற்படும் பொருட்டு மனிதனை அடக்கவல்ல ஒருவன் வேதங்களில் உரைக்கப்பட்டவற்றை மனதாலும் மீறக்கூடாது. பாஞ்சராத்ரம் – யதாஹி வல்லபோ ராஜ்ஞோ நதீம் ராஜ்ஞா ப்ரவர்த்திதாம், லோகோப யோகிநீம் ரம்யாம் பஹுஸஸ்ய விவர்த்திநீம், லங்கயந் சூலமாரோஹே தநபேக்ஷோபி தாம்ப்ரதி, ஏவம் விலங்கயந் மர்த்யோ மர்யாதாம் வேத நிர்மிதாம், ப்ரியோபி நப்ரியோஸௌ மே மதாஜ்ஞாவ்யதிவர்த்தநாத், உபாயத்வ க்ரஹம் தத்ர வர்ஜயேந் மநஸா ஸுதீ: – அரசனுக்கு ஒருவன் வேண்டப்பட்டவனாக உள்ளபோதிலும் அரசனால் ஏற்படுத்தப்பட்டதும், உலகிற்கு உபயோகமாக இருக்கக்கூடியதும், குற்றம் இல்லாததும், நெற்பயிர்கள் வளர்வதற்குக் காரணமாக உள்ளதும் ஆகிய ஒரு நதியை அசுத்தம் செய்தால் அவன் அரசானால் கழுவேற்றப்படுவது உறுதியே ஆகும். இது போன்றே வேதங்களில் கூறப்பட்டவற்றை மீறுபவன், எனக்கு வேண்டியவன் என்ற போதிலும், எனது ஆணைகளை மீறுவதால் எனக்கு வேண்டியவன் அல்லன் என்றாகிறான்; ஆகவே அறிவுள்ளவர்கள் வர்ணாச்ரம தர்மங்களை இயற்றும்போது அவற்றை உபாயம் என்று மனதாலும் எண்ணக்கூடாது ஆகவே மேலே கூறப்பட்டபடியே இந்த வரிகளுக்குப் பொருள் கொள்ளவேண்டும்.