Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 275)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

கீழ்ச்சொன்ன பகவத் கைங்கர்யமறிவது சாஸ்த்ரமுகத்தாலே, ஆசார்ய கைங்கர்யமறிவது சாஸ்த்ரமுகத்தாலு மாசார்ய வசநத்தாலும்.

இப்படி கர்த்தவ்யமான கைங்கர்யங்களிரண்டு மறிவது எம்முகத்தாலே யென்னு மாகாங்க்ஷையிலே யருளிச்செய்கிறார் மேல் (கீழ்ச்சொன்ன) என்று தொடங்கி.

கடந்த சூர்ணையின் இறுதியில் கூறப்பட்டதான ஆசார்ய கைங்கர்யம் மற்றும் பகவத் கைங்கர்யம் ஆகிய இரண்டையும் எதன் மூலம் அறியலாம் என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

(கீழ்) என்றது வஸ்தவ்யாதிகளைச் சொன்ன இந்த கணநையிலென்றபடி. (பகவத் கைங்கர்யமறிவது சாஸ்த்ரமுகத்தாலே) என்றது, பகவா னிவனுக்கிப்போது வாய்திறந்தொன்றை யருளிச்செய்யாமையாலே, தத்ப்ரதிபாதகமான ச்ருதிஸ்ம்ருத்யாதி சாஸ்த்ரமுகத்தாலே யறியவேணு மென்கை. (ஆசார்ய கைங்கர்யமறிவது சாஸ்த்ர முகத்தாலுமாசார்ய வசநத்தாலும்) என்றது, ஆசார்ய விஷயத்தில் சுச்ரூஷா ப்ரகாரங்களை ப்ரதிபாதிக்கிற சாஸ்த்ரமுகத்தாலும், தனக்கிஷ்டா நிஷ்டங்க ளின்ன தென்னுமிடத்தை யவனருளிச் செய்த வசநத்தாலும் மென்கை.

“கீழ்” என்பது வசிக்கத்தக்க இடம் போன்றவற்றை உரைத்த அதே வரிசையிலே என்று பொருள் தரும். “பகவத் கைங்கர்யமறிவது சாஸ்த்ரமுகத்தாலே” என்பது ஸர்வேச்வரன் சேதனனுக்குத் தனது திருவாய் திறந்து எதனையும் இப்போது அருளிச்செய்யாத காரணத்தினால், அவனுக்கான கைங்கர்யங்கள் குறித்து அவனைப் பற்றி விளக்குகின்ற ச்ருதி மற்றும் ஸ்ருதி வாக்கியங்களாகிய சாஸ்த்ரங்கள் மூலம் அறிய வேண்டும் என்று கருத்து. (ஆசார்ய கைங்கர்யமறிவது சாஸ்த்ர முகத்தாலுமாசார்ய வசநத்தாலும்) - ஆசார்ய விஷயத்தில் எவ்விதம் கைங்கர்யம் செய்யவேண்டும் என்பதை உபதேசிக்கும் சாஸ்த்ரங்கள் மூலமும், தனக்கு விருப்பம் உள்ளது மற்றும் விருப்பம் அல்லாதது எது என்பதை ஆசார்யனின் வாக்கு மூலமும் அறியவேண்டும்.