Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 274)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

இப்படி யிவை யித்தனையும் ஸதாசார்ய ப்ரஸாதத்தாலே வர்த்திக்கும் போதைக்கு வஸ்தவ்ய மாசார்ய ஸந்நிதியும் பகவத் ஸந்நிதியும்; வக்தவ்ய மாசார்ய வைபவமும் ஸ்வநிகர்ஷமும்; ஜப்தவ்யம் குருபரம்பரையும் த்வயமும்; பரிக்ராஹ்யம் பூர்வாசார்யர்களுடைய வசநமு மநுஷ்டாநமும்; பரித்யாஜ்ய மவைஷ்ணவ ஸஹவாஸமு மபிமாநமும்; கர்த்தவ்ய மாசார்ய கைங்கர்யமும் பகவத் கைங்கர்யமும்.

ஆக தினசர்யோக்த மங்களாசாஸந அநுகூல ஸஹவாஸ ப்ரதிகூல ஸஹாவாஸ நிவ்ருத்திகளை விவரித்தார் கீழ்; (ஸதாசார்ய ப்ரஸாதத்தாலே வர்த்திக்கும்படி பண்ணிக் கொண்டு போரக்கடவன்) என்றத்தை விவரிக்கிறார் மேல் (இப்படி) என்று தொடங்கி.

– இதுவரை சூர்ணை 243ல் கூறப்பட்டதான தினசர்யையில் விளக்கப்பட்டதான மங்களாசாஸனத்துக்கு அநுகூலர்களாக உள்ளவர்களுடன் பழகுதல், ப்ரதிகூலரின் சேர்க்கையில் இருந்து பிரிதல் போன்றவற்றை விவரமாக அருளிச்செய்தார். அந்தச் சூர்ணையின் இறுதி வாக்கியமான “ஸதாசார்ய ப்ரஸாதத்தாலே வர்த்திக்கும்படி பண்ணிக் கொண்டு போரக்கடவன்” என்பதை அடுத்து விவரிக்கிறார்.

(இப்படி யிவை யித்தனையும் ஸதாசார்ய ப்ரஸாதத்தாலே வர்த்திக்கும் போதைக்கு) என்றது, கீழ்ச்சொன்ன ப்ரகாரத்திலே இந்த ஸ்வபாவ விசேஷங்களெல்லாம் ஸதாசார்யனுடைய ப்ரஸாதத்தாலே கொழுந்துவிட்டு வளர்ந்து வரும் போதைக் கென்றபடி. (வஸ்தவ்யம் ஆசார்ய ஸந்நிதியும் பகவத் ஸந்நிதியும்) அதாவது, இவனுக்கு வாஸஸ்தலம், ஹிதைஷியாய் உபதேசாதிகளாலே யிவற்றுக்கு உத்பாதகனான ஸ்வாசர்யனுடைய ஸந்நிதியும், அவன் காட்டிக் கொடுக்கக் கைக்கொண்டு அவனுகந்த விஷயமாய் தன் பக்கலிலே விசேஷ கடாக்ஷாதிகளைப் பண்ணிக் கொண்டு போரும் அர்ச்சாவதாரமான பகவான் ஸந்நிதியுமென்கை. இது ஸமுச்சயமுமன்று ஸம விகல்பமுமன்று, ஆசார்ய ஸந்நிதியே ப்ரதாநம். ததலாபத்தில் அர்ச்சாவதார ஸந்நிதி என்றபடி. ஆகையிறே ஆசார்ய ஸந்நிதியை முற்பட்ட வருளிச்செய்த்து. “மத்பக்தைஸ் ஸஹ ஸம்வாஸ: ததஸித்தௌ மயாபிவா” என்றிறே பகவதுக்தியும். இனி வக்தவ்யம் தொடங்கி மேலடைய ஸமுச்சயம். (வக்தவ்யம் ஆசார்ய வைபவமும் ஸ்வநிகர்ஷமும்) அதாவது, இவனுக்கு ஸர்வகாலமும் வாக்கால் சொல்லப்படுமது, துர்கதியே பற்றாசாகத் தன்னை அங்கீகரித்தருளின வாசார்யனுடைய தயா க்ஷாந்த்யாதி வைபவமும், எத்தனையேனும் தயாதிகுணபரிபூர்ணரு மேறிட்டுப் பார்க்கில் அருவருக்கும்படி நின்ற அநாத்ம குண பூர்த்தியாகிற தன்னுடைய நிகர்ஷமுமாகிற விவையுமென்கை. ஸ்ரீமதுரகவியாழ்வார், “நன்மையால்” என்கிற பாட்டுத் தொடங்கி இவை யிரண்டையும் விசதமாக அருளிச் செய்தாரிறே. (ஜப்தவ்யம் குருபரம்பரையும் த்வயமும்) அதாவது, இவனுக்கு காலக்ஷேபத்துக்கும் போகத்துக்கு முறுப்பாக ரஹஸ்யமாக வநுஸந்தித்துக் கொண்டு போரப்படுமது, “ராமாநுஜாங்கிரி சரணோஸ்மி” இத்யாதிப்படியே ஸர்வேச்வரன் குளிர நோக்குகைக் குடலாய், “ஸசாசார்ய வம்ஸோஜ்ஞேய: ஆசார்யாணா மஸாவஸா விதி ஆபகவத்த:” என்கிறபடியே, ஸ்வாசார்யாதி பரமாசார்ய பகவத்பர்யந்தையான குருபரம்பரையும், அந்த குருபரம்பரா ப்ராப்தமாய் ஸ்வாசார்யன் தனக்குத் தஞ்சமாக உபதேசித்த த்வயமுமென்கை. இத்தால் குருபரம்பரா பூர்வகமான த்வயமே யிவனுக்கு ரஹஸ்யமாக வநுஸந்தித்துக் கொண்டு போரப்படுமதென்றபடி. பாஷ்யகாரர்க்கு காலக்ஷேப ப்ரகார மருளிச் செய்கிறவிடத்தில் “த்வய மர்த்தாநுஸந்தாநேந ஸஹ ஸதைவம் வக்தா” என்றிறே பெரியபெருமாளருளிச் செய்தது. (பரிக்ராஹ்யம் பூர்வாசார்யர்களுடைய வசநமும் அநுஷ்டாநமும்) அதாவது, தனக்கு ஜ்ஞாநாநுஷ்டாநங்கள் ஊற்றிருக்கைக் குறுப்பாகக் கண்டகண்ட விடங்களிலே யிவனால் பரிக்ரஹிக்கப்படுமது, நாதமுநிகள் முதலாக இவ்வருகுள்ள பூர்வாசார்யர்களுடைய ஜ்ஞாதவ்யார்த்த ப்ரகாசகமான திவ்ய வசநங்களும், அந்தவசநாநு ரூபமாக மறுவற்ற வநுஷ்டாநங்களு மென்கை. “ஸுவ்யாஹ்ருதாநி மஹதாம் ஸுக்ருதாநி ததஸ்த்த:, ஸஞ்சிந்வந் தீர ஆஸீத் ஸிலஹாரீஸிலம் யதா” என்னக்கடவதிறே. (பரித்யாஜ்யம் அவைஷ்ணவ ஸஹவாஸமும் அபிமாநமும்) அதாவது ஜ்ஞாநாநுஷ்டாந நாசகமென்னும் பயத்தாலே யிவனுக்கு ஸவாஸநமாக விடப்படுமது, வைஷ்ணவ லக்ஷணமில்லாதவர்களோட்டை ஸஹவாஸமும், அவர்கள் இவன் நம்முடையவன் என்று ஓரோரந்வயங்களாலே தன் திறத்தில் பண்ணுமபிமாநமுமென்கை. (கர்த்தவ்யம் ஆசார்யகைங்கர்யமும் பகவத் கைங்கர்யமும்) – அதாவது இவனுக்கு ஸ்வரூபாநுகூலமாகவே யெப்போதும் செய்யப்படுமது, மஹோபகாரகனான ஸ்வாசார்யன் விஷயத்தில் ப்ரேம பூர்வகமாகப் பண்ணும் கைங்கர்யமும், தந்நியோக பரதந்த்ரனாய்ப் பண்ணும் பகவத் கைங்கர்யமுமென்கை. ஆக, திநசர்யையிற் சொன்ன ஸ்வபாவ விசேஷங்களெல்லாம் (ஸதாசார்ய ப்ரஸாதத்தாலே வர்த்திக்கும்படி பண்ணிக் கொண்டு போருகையாவது), இப்படி யிருந்துள்ள வஸ்தவ்ய வக்தவ்ய ஜப்தவ்ய பரிக்ராஹ்ய பரித்யாஜ்ய கர்த்தவ்யங்களை யறிந்து இவற்றிலே நிஷ்டனாய்ப் போருகை யென்றதாய்த்து.

“இப்படி யிவை யித்தனையும் ஸதாசார்ய ப்ரஸாதத்தாலே வர்த்திக்கும் போதைக்கு” என்பது என்ன? இதுவரை கூறப்பட்டதான அநுகூலர் நட்பு போன்ற நேரத்தில் – என்று பொருள். “வஸ்தவ்யம் ஆசார்ய ஸந்நிதியும் பகவத் ஸந்நிதியும்” என்பது என்ன? இப்படிப்பட்ட ஒருவன் வசிப்பதற்கு ஏற்ப இடம் எதுவென்றால் - இவனுடைய நன்மையை மட்டுமே எண்ணுபவராய், உபதேசம் போன்றவற்றால் இவனுக்கு அநுகூலர்களின் நட்பு போன்றவற்றை ஏற்படுத்தித் தருபவராய் உள்ள ஆசார்யனின் இருப்பிடமும்; ஆசார்யன் மூலம் உணர்த்தப்பட்டு இவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டதும், அந்த ஆசார்யனுக்கு ஏற்றதாக உள்ளதும், தன்னிடம் பலவிதமான விசேஷமான கடாக்ஷங்கள் செய்தபடி உள்ளதும் ஆகிய அர்ச்சாவதாரமான ஸர்வேச்வரன் உள்ள இடமும் ஆகும். இப்படியாக ஆசார்யன் உள்ள இடம், ஸர்வேச்வரன் உள்ள இடம் ஆகிய இரண்டையும் ஒன்றாக உரைத்தது என்பது - அவை இரண்டும் சமமானது என்ற பொருளில் அல்ல, அவை ஒரே பெருமை கொண்ட இடங்கள் என்ற பொருளில் அல்ல; ஆசார்யனின் இடமே முக்கியமானது, அது கிட்டாவிடில் அர்ச்சாவதார ஸ்தலம் ஏற்புடையது என்று கொள்ளவேண்டும். இதனால்தான் பகவத் சாஸ்த்ரம் – “மத்பக்தைஸ் ஸஹ ஸம்வாஸ: ததஸித்தௌ மயாபிவா - எனது அடியார்களுடன் கூடி வாழவேண்டும்; அது கிட்டவில்லை என்றால் என்னுடன் கூடி வாழவேண்டும் – என்று ஆசார்யனின் இடத்தை முதலில் உரைத்தது. தொடர்ந்து வரும் வாக்கியங்கள் அனைத்தும், இரண்டு இடங்களும் ஒத்த மேன்மை கொண்டவை என்பதைக் கூறுவதாகவே உள்ளன. (வக்தவ்யம் ஆசார்ய வைபவமும் ஸ்வநிகர்ஷமும்) - இவன் தனது காலம் முழுவதும் தன்னுடைய வாயால் எதனைக் கூறியபடி இருக்கவேண்டும் என்றால், தனது தாழ்ந்த நிலையைக் கண்ணுற்றவுடன் தன்னை அங்கீகரித்து ஏற்றுக் கொண்ட ஆசார்யனின் தயை மற்றும் பொறுமை போன்ற வைபவங்கள்; எத்தனை பொறுமையும் தயையும் நிறைந்துள்ள பெரியவர்கள் கூடக் காண்பதற்கு வெறுக்கும்படியாக தீய குணங்களால் நிறைந்துள்ள தன்னுடைய தாழ்ந்த நிலை ஆகிய இரண்டையுமே ஆகும். இந்த இரண்டையே மதுரகவியாழ்வார் கண்ணிநுண்சிறுத்தாம்பில் (14) – நன்மையால் – என்பதில் அருளிச்செய்தார். – (ஜப்தவ்யம் குருபரம்பரையும் த்வயமும்) - இப்படிப்பட்டவன் தனது பொழுதைப் போக்குவதற்கும்; அனுபவத்திற்குத் தனிமையில் உள்ளபோது எண்ணியபடி இருக்கவேண்டியது குறித்து உரைக்கிறார். ஸ்ரீவரதராஜஸ்தவம் (102) - ராமாநுஜாங்கிரி சரணோஸ்மி – ராமாநுஜரின் திருவடிகளை நான் உபாயம் என்று பற்றியுள்ளேன் - என்று கூறுவதற்கு ஏற்ப ஸர்வேச்வரன் நன்றாகக் கடாக்ஷம் செய்வதற்குக் காரணமாக உள்ளதும்; ஸசாசார்ய வம்ஸோஜ்ஞேய: ஆசார்யாணா மஸாவஸா விதி ஆபகவத்த: - ஆசார்ய பரம்பரையில் தனது ஆசார்யன் தொடக்கமாக ஸர்வேச்வரன் முடிய உள்ள ஒவ்வொரு ஆசார்யனையும் யார் என்று அறிந்து கொள்ளவேண்டும் - என்பதற்கு ஏற்ப தனது ஆசார்யன் தொடங்கி பரமாசார்யனான ஸர்வேச்வரன் முடிய உள்ள குரு பரம்பரையும், அந்தக் குருபரம்பரையில் தொடர்ந்து வந்த தனது ஆசார்யன் தனக்குத் தஞ்சம் என்று உபதேசித்ததும் ஆகிய த்வய மந்த்ரமே ஆகும். இதன் மூலம் ஆசார்ய பரம்பரை மூலமாக உபதேசம் செய்யப்பட்ட த்வய மந்த்ரமே இவன் தனியாக அமர்ந்து த்யானித்தபடி இருப்பதற்கு ஏற்றது என்று கருத்து. ஸ்ரீபாஷ்யகாரருக்கு பொழுது போக்கும் விதத்தை பெரியபெருமாள் அருளிச்செய்தபோது சரணாகதி கத்யத்தில் – த்வய மர்த்தாநுஸந்தாநேந ஸஹ ஸதைவம் வக்தா – த்வய மந்த்ரத்தை அதன் பொருளுடன் எப்போதும் எண்ணியபடியே வாழ்வீராக – என்று உரைத்தான். (பரிக்ராஹ்யம் பூர்வாசார்யர்களுடைய வசநமும் அநுஷ்டாநமும்) – தனக்கு வேண்டிய ஞானம் மற்றும் அநுஷ்டானம் ஆகிய இரண்டின் மீதும் எப்போதும் பற்றுதல் இருப்பதற்காக இவன் செய்யவேண்டியது என்ன? அனைத்து இடங்களிலும் இவன் கைக்கொள்ள வேண்டியது என்னவென்றால், நாதமுனிகள் தொடக்கமாக உள்ள பூர்வாசார்யர்களின், அறியப்படவேண்டிய பொருள்களை நன்கு விளக்குகின்ற திவ்யமான சொற்கள் மற்றும் அந்தச் சொற்களைப் பின்பற்றி உள்ளதான நேர்மையான நடத்தை போன்றவை ஆகும். இதனை லக்ஷ்மீ தந்த்ரம் – ஸுவ்யாஹ்ருதாநி மஹதாம் ஸுக்ருதாநி ததஸ்த்த:, ஸஞ்சிந்வந் தீர ஆஸீத் ஸிலஹாரீஸிலம் யதா - நெற்களஞ்சியத்தில் உள்ள உதிரியான நெல்லை, அந்த நெல்லை மட்டுமே தனக்கு உணவாக நம்பியுள்ளவன் எவ்விதம் சேகரிப்பானோ, அது போன்று அறிவுள்ள ஒருவன் சிறந்தவர்களின் தோஷம் இல்லாத சொற்களையும், ஒழுக்கத்தையும் ஆங்காங்கு சேகரித்தபடி இருத்தல் வேண்டும் – என்றது காண்க. – (பரித்யாஜ்யம் அவைஷ்ணவ ஸஹவாஸமும் அபிமாநமும்) - நமது ஞானம் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை அழித்துவிடும் என்ற அச்சம் காரணமாக ஒருவன் விடவேண்டியது என்னவென்றால் - வைஷ்ணவ லக்ஷணம் என்பது சிறிதும் இல்லாதவர்களின் நட்பு, அவர்கள் இவனிடம் “இவன் நம்மவன்” என்று ஒவ்வொரு செயலிலும் காட்டும் அன்பு போன்றவை ஆகும். (கர்த்தவ்யம் ஆசார்யகைங்கர்யமும் பகவத் கைங்கர்யமும்) - சேதனன் தனது ஸ்வரூபத்திற்கு நன்மை அளிப்பதற்கு ஏற்றபடி எப்போதும் செய்யவேண்டியது என்னவென்றால் – தனக்கு மிகவும் பெரிய உபகாரம் செய்த தனது ஆசார்யன் விஷயத்தில் ப்ரேமை ஏற்பட்டு, அதன் காரணமாகச் செய்யும் கைங்கர்யம்; அந்த ஆசார்யனின் கட்டளைக்கு ஏற்றபடி ஸர்வேச்வரனுக்குச் செய்யும் கைங்கர்யம் என்பதாகும். ஆகவே சூர்ணை 243-ல் கூறப்பட்ட சேதனனின் ஸ்வபாவம் குறித்த விஷயங்கள் அனைத்தும் – கீழே கூறப்பட்டதான வசிக்கும் இடம், ஜபிக்கப்படுவது, ஏற்கப்படுவது, தள்ளப்படுவது, செய்யப்படுவது என்பவற்றை அறிந்து, அவற்றில் எப்போதும் நிலையாக நிற்பதே ஆகும்.