Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 273)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

“ஊமையரோடு செவிடர் வார்த்தை”, “ கதமந்யதிச்சதி”

விஷயதோஷத்தால் வருமதன் துஸ்த்யஜத்வத்தில் ப்ரமாணங்காட்டுகிறார் மேல் (“ஊமையரோடு செவிடர் வார்த்தை”, “கதமந்யதிச்சதி”) என்று.

– ஸர்வேச்வரனின் மேன்மை என்ற குற்றத்தால் ஏற்படும் ஸ்வப்ரயோஜனம் என்பது கைவிடுவதற்கு மிகவும் அரியது என்பதற்கு ப்ரமாணங்கள் காட்டுகிறார்.

“மற்றிருந்தீர்கட்கு” என்று தொடங்கி “அத்தலையாலே பேறென் றறுதி யிட்டால் அவன் வருமளவு க்ரமப்ராப்தி பார்த்தாறியிருக்க வேணுங்காண், நீ இங்ஙனே பதறலாகாது காண்” என்ற தாய்மாரைக் குறித்து, “இவ்விஷயத்தில் ப்ராவண்ய மின்றிக்கே என்னுடைய நிலைக்கு வேறாயிருந்த வுங்களுக்கு எனக் கோடுகிற தசையறியப்போகாது, அவன் அவன் என்று வாய்புலற்றும்படி ஸ்ரீய:பதி விஷயமான ப்ராவண்யத்தை மறுபாடுருவ வுடையேனாய், இப்படி யவனை யொழியச் செல்லாமை யுண்டானா லவனிருந்த விடத்தே சென்று கிட்டுகை ப்ராப்தமாயிருக்க, அதுக்குக் கால் நடைதாராதபடி யிருக்கிற வெனக்கு. நானவனோடே சென்று சேராமைக் குறுப்பாக நீங்கள் சொல்லும் வார்த்தை கேட்கைக்குப் பரிகரமில்லாத செவிடரோடே சொல்லுகைக்குப் பரிகரமில்லாத ஊமைகள் வார்த்தை சொன்னாப்போலே யிருப்பதொன்று” என்று ஆண்டாளருளிச் செய்கையாலும்; – “தவாம்ருத ஸ்யந்திநி” என்று தொடங்கி – “வகுத்த சேஷியான தேவரீருடைய தேனே மலரும் திருவடித்தாமரைகலிள் போக்யதையிலே யழுந்தின நெஞ்சு மற்றொரு க்ஷுத்ர விஷயத்தை விரும்பும்படி யெங்ஙனே! மதுவே ஜீவநமான வண்டு மது பரிபூர்ணமான தாமரைப்பூவானது நில்லாநிற்கச்செய்தே, அதன் சுவடறிந்த தான், கிட்டுகை யரிதாய் கிட்டினாலும் நாக்கு நினைக்கப் போராததா யிருக்கிற முள்ளிப்பூவிற் சென்று படியாத மாத்ரமன்றிக்கே அத்தைக் கடாக்ஷிப்பதும் செய்யாதிறே” என்று ஆளவந்தாரருளிச் செய்கையாலும்; விக்ரஹ வைலக்ஷண்யங் கண்டு பகவத் விஷயத்தில் ப்ரவணரானவர்களை மீட்க வரிதென்று தோற்றுகையாலே, விஷய தோஷத்தால் வருமது துஸ்த்யஜ மென்னுமிடம் ஸித்தமிறே.

– நாச்சியார் திருமொழி (12-1) – மற்றிருந்தீர்கட்கு - என்ற பாசுரத்தைக் காண்பிக்கிறார். அதாவது தாய்மார்கள் ஸர்வேச்வரனை எண்ணியபடி உருகும் இவளிடம், “ஸர்வேச்வரன் மூலம் மட்டுமே நமக்கு பேறு கிட்டும் என்ற நீ உறுதியாக நம்புபவளாக இருந்தால், அவன் வரும்வரை நீ காத்திருக்கவேண்டும். இவ்விதம் பதற்றம் அடைதல்கூடாது”, என்றனர். இதனைக் கேட்ட அவள், “ஸர்வேச்வரன் விஷயத்தில் எனக்கு இருகின்ற அளவிற்கு ஆசையில்லாமல், என்னுடைய நிலையில் இருந்து மாறுபட்ட நிலையில் இருக்கும் உங்களால், என்னுடைய நிலையைச் சரியாக அறிய இயலாது. ‘அவன் அவன்’ என்று எப்போதும் பிதற்றியபடி, பெரியபிராட்டியின் நாயகனான ஸர்வேச்வரன் மீது உள்ள ஈடுபாட்டை நான் மாற்ற இயலாமல் பரிபூர்ணமாகக் கொண்டவளாக உள்ளேன்; இப்படி அவனை விட்டு வாழ இயலாத நிலை ஏற்பட்ட பின்னர், அவன் உள்ள இடத்திற்குச் செல்வதே எனக்கு ஏற்புடையதாகும்; ஆனால் அந்தச் செயலைச் செய்வதற்கான சக்தி இன்றி நான் உள்ளேன்; இப்படியாக உள்ள என்னிடம், நான் அவனைச் சென்று அடையாமல் இருக்கும்படியான சொற்களை நீங்கள் உரைக்கிறீர்களே! இந்தச் சொற்கள் அனைத்தும் கேட்கும் சக்தி இல்லாத செவிடர்களின் காதுகளில், பேசும் திறன் அற்ற ஊமைகள் உரைத்த சொற்கள் போன்றே எனக்கு உள்ளது”, என்றாள். – அடுத்து ஸ்தோத்ரரத்னம் (27) – தவாம்ருத ஸ்யந்திநி – என்பதை ப்ரமாணம் காட்டுகிறார். இங்கு ஆளவந்தார், “எனது ஆத்மாவின் ஸ்வரூபத்திற்கு ஏற்றபடி உள்ள ஸ்வாமியான உன்னுடைய தேன் பெருகும் திருடித்தாமரைகளில் மட்டுமே எனது நெஞ்சம் ஆழ்ந்து நிற்கிறது. இப்படி உள்ளபோது இந்த நெஞ்சம் எவ்விதம் மற்ற தாழ்ந்த விஷயங்களை விரும்பும்? தேனை மட்டுமே பருகி வாழ்கின்ற வண்டானது, தேன் நிறைந்ததான தாமரைமலர் ஒன்று எட்டாத ஆழத்தில் உள்ளபோதிலும், அந்தத் தேனின் சுவையை அறிந்துள்ளதால் அதனையே எட்ட நினைக்கும்; இப்படி அல்லாமல் தேன் இல்லாமல் உள்ள முள்ளிப்பூவில் மொய்க்காமல் செல்வதோடு மட்டும் அல்லாமல், அதனைத் திரும்பிக் கூடப் பார்க்காது அன்றோ?”, என்று அருளிச்செய்தார். இதன் மூலம் ஸர்வேச்வரனின் திருமேனி எழில் மற்றும் மேன்மையை உணர்ந்து, அவற்றில் ஈடுபட்டவர்களை மீட்பது மிகவும் அரிது என்பதால் “ஸர்வேச்வரனின் விஷயம் மூலம் ஏற்படும் இனிமை என்ற குற்றத்தால் வரும் ஸ்வப்ரயோஜனம்” என்பதை விட இயலாது என்று கருத்து.