Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 269)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

ஸ்வப்ரயோஜநபரரெல்லாரையும் ப்ரதிகூலராக நினைக்கலாமோ வென்னில்?

ஸ்வப்ரயோஜநபரரை (ப்ரதிகூலர்) என்று அவிசேஷேண வருளிச் செய்தாரிறே; இந்த ஸ்வப்ரயோஜநபரதை அநுகூலாக்ரேஸரரான ஆழ்வார்கள் பக்கலிலும் தோற்றியிருக்கையாலே தந்நிபந்தநமான ப்ரதிகூல்யம் அவர்கள் பக்கல் வாராதபடி பரிஹரிக்கவேணுமென்று திருவுள்ளம் பற்றி, தத்விஷய சங்கையை யநுவதிக்கிறார் (ஸ்வப்ரயோஜந பரரெல்லாரையும்) என்று தொடங்கி.

– தன்னுடைய ஆனந்தத்தை விரும்பும் அனைவரையும் சூர்ணை 263ல் ப்ரதிகூலர் என்று உரைத்தார் அல்லவோ? ஆனால் அநுகூலர்களின் தலைவர்கள் என்றே போற்றப்படும் ஆழ்வார்களிடம், இது போன்று தங்களது ஆனந்தத்தை விரும்பியுள்ள தன்மை ஒரு சில இடங்களில் வெளிப்படுகிறது என்பதைக் காணலாம். இதன் காரணமாக அவர்கள் பக்கம் எந்தவிதமான விரோதமும் ஏற்பட்டுவிடாதபடி நீக்கவேண்டும் என்பதைத் தனது திருவுள்ளத்தில் பற்றினார். ஆகவே அது தொடர்பான ஒரு கேள்வியை இந்தச் சூர்ணையில் எழுப்பிக்கொண்டு, பின்வரும் சூர்ணைகளில் சமாதானம் உரைக்கிறார்.

“நமக்கே நலமாதலில்” என்றும், “நாம் கண்டுகந்து கூத்தாட ஞாலத்தூடே நடவாயே” என்றும், “கண்டு நானுன்னை யுகக்க” என்றும் இத்யாதி வசநங்களாலும், மடலெடுக்கை முதலான ப்ரவ்ருத்திகளாலும் ஆழ்வார்களுக்கு மிந்த ஸ்வப்ரயோஜந பரத்வ முண்டாகத் தோற்றாநின்றதிறே; ஆனபின்பு, ஸ்வப்ரயோஜநபர ரெல்லாரையும் ப்ரதிகூலரென்று சொல்லப் பார்க்கில் ஆழ்வார்களையு மப்படி நினைக்கவேண்டி வாராதோ வென்று சங்கைக் கபிப்ராயம்.

– பெரியதிருமொழி (9-3-9) - நமக்கே நலமாதலில் – என்றும், திருவாய்மொழி (6-9-2) – நாம் கண்டுகந்து கூத்தாட ஞாலத்தூடே நடவாயே - என்றும், பெரியாழ்வார் திருமொழி (2-7-9) – கண்டு நானுன்னை யுகக்க – என்றும் காணப்படும் வரிகள் மற்றும் திருமடல்கள் போன்ற பிரபந்தங்கள் ஆகியவற்றின் மூலம் ஆழ்வார்களும் தங்களுடைய ஆனந்தத்தை விரும்பும் தன்மை கொண்டவர்களாக உள்ளனர் என்றாகிறது அல்லவோ? அப்படி உள்ளபோது, தங்கள் பயனை விரும்பும் அனைவரையும் ப்ரதிகூலர் என்று உரைத்தால், ஆழ்வார்களையும் ப்ரதிகூலர்கள் என்று எண்ணும்படி அல்லவோ ஆகிறது? (இதற்கான விடையை அடுத்து அருளிச்செய்கிறார்)