Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 268)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

உபாயம் ஸ்வீகாரகாலத்தில் புருஷஸாபேக்ஷமுமாய் புருஷகாரஸாபேக்ஷமுமாய் இருக்கும்; கார்ய காலத்தில் உபய நிரபேக்ஷமாயிருக்கும்.

இப்படி புருஷகார ஸாபேக்ஷமென்னில் உபாயத்தினுடைய நைரபேக்ஷ்ய ஹாநி வாராதோ வென்கிற சங்கையிலே யருளிச்செய்கிறார் மேல் (உபாயம்) என்று தொடங்கி.

இவ்விதம் ஐந்தாவது விதமாக உள்ள அதிகாரிக்குப் புருஷகாரம் மூலமே கர்மங்கள் அழியும் என்றால், “உபாயமாக தானே உள்ள ஸர்வேச்வரன் மற்ற எந்த ஒரு உபாயத்தையும் எதிர்பார்க்கமாட்டான்” என்றுள்ள ஸித்தாந்தத்துக்குப் பங்கம் ஏற்படும் அல்லவோ என்ற சந்தேகத்திற்கான விடையை அருளிச்செய்கிறார்.

அதாவது ஸஹாயாந்தர ஸம்ஸர்காஸஹமான ஸித்தோபாயம், சரணவரண ரூப ஸ்வீகார காலத்தில் ஸ்வீகர்த்தாவான புருஷனையும், ஸ்வீகரிப்பிக்கும் புருஷனையும், ஸ்வீகரிப்பிக்கும் புருஷகாரத்தையும் அபேக்ஷித்திருக்கும்; ஸ்வீக்ருதனான தான் இவனுக் கநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட ப்ராப்தியைப் பண்ணுகையாகிற கார்யகாலத்தில், புருஷனும் புருஷகாரமுமாகிற வுபயத்தையு மபேக்ஷியாதே தானே செய்து தலைக்கட்டுமென்கை. கார்யகாலத்தில் ஸஹகாரி ஸாபேக்ஷத்வமுண்டாகுமிறே உபாயத்தினுடைய நைரபேக்ஷ்யத்துக்கு ஹாநிவருவதென்று கருத்து.

வேறு எந்த ஒரு உபாயத்தின் துணையையும் எதிர்பாராமல் உள்ள ஸர்வேச்வரன், தன்னை ஒருவன் உபாயமாகப் பற்றும் காலத்தில் ப்ரபத்தி செய்த புருஷனையும், அவனைத் தன்னிடம் கொண்டு சேர்த்த புருஷகாரத்தையும் எதிர்பார்த்தபடியே உள்ளான். ஸர்வேச்வரனையே தஞ்சம் என்று அடைந்த பின்னர், அந்த ப்ரபன்னனின் விருப்பங்களை நிறைவேற்றுதல், விரும்பாதவற்றை விலக்குதல் போன்றவற்றைச் செய்து கொடுக்கிறான்; இவ்விதம் செய்யும்போது அந்தப் புருஷனையும், புருஷகாரத்தையும் எதிர்பார்க்காமல், தானாகவே வலிய நின்று அந்தச் செயல்களை முடித்துக் கொடுக்கிறான். ப்ரபன்னன் ஒருவனின் செயல்களை முடித்துக் கொடுக்கும்போது மற்றொரு துணையை எதிர்பார்த்தால் அல்லவோ “ஸர்வேச்வரன் வேறு உபாயங்களை எதிர்பாராமல், தானே உபாயமாக உள்ளான்” என்ற விதிக்குப் பங்கம் ஏற்படும் என்று கருத்து.