Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 267)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

மூவருடையவும் கர்மமநுபவ விநாச்யம், நாலாமதிகாரிக்கு ப்ராயச்சித்த விநாச்யம்; அஞ்சாமதிகாரிக்குப் புருஷகார விநாச்யம்.

இவர்களுக்கு கர்மவிநாச ஹேதுபேதத்தால் வந்த விசேஷங்களை தர்சிப்பிக்கிறார் மேல் (மூவருடையவும்) என்று தொடங்கி.

இந்த ஐந்துவிதமான அதிகாரிகளுக்கு உள்ள கர்மவினைகள் அழிவதற்கான காரணங்களில் வேறுபாடுகள் உண்டு. அத்தகைய வேறுபாடுகள் என்ன என்பதைக் கூறுகிறார்.

– அதாவது, நிக்ரஹத்துக்கிலக்கான மூவருடையவும் அநாதிகாலார்ஜிதமான ஸதஸத் கர்மம், “அவச்ய மநுபோக்தவ்யம் க்ருதம் கர்ம சுபாசுபம் நாபுக்தம் க்ஷீயதே கர்ம கல்பகோடி சதைரபி” என்கிறபடியே – அவச்யம் தத்பலமுள்ளது அநுபவித்தாலன்றி நசியாமையாலே (அநுபவிநாச்யம்) என்கிறார். அநுக்ரஹத்துக் கிலக்காகச் சொன்ன விருவரிலும் வைத்துக்கொண்டு, உபாயாந்தர நிஷ்டனான நாலாமதிகாரிக்கு, கர்மஜ்ஞாநபக்திகளாகிற வுபாய விசேஷங்களிலொன்றை யநுஷ்டித்தால் அத்தை ப்ராயச்சித்த ஸ்தாநீயமாக்கி ஈச்வரன் ஸர்வகர்மங்களையும் கழிக்கையாலே, கர்மம் ப்ராயச்சித்த விநாச்யமென்கிறார். ப்ரபதந நிஷ்டனான அஞ்சாமதிகாரிக்கு, ஆச்ரயண வேளையிலே யநாதிகால க்ருதாபராதபீதனாய் அவற்றையடைய ஈச்வரன் பொறுக்கைக் குறுப்பாகப் பிராட்டியை புருஷகாரமாக முன்னிட்டாச்ரயிக்கையாலே அவளுக்காக விவனுடைய வபராதத்தை யெல்லா மவன் பொறுத்தங்கீகரித்து இவனுடைய அகில கர்மங்களையும் தள்ளிப் பொகடுகையாலே புருஷகார விநாச்யமென்கிறார்.

ஸர்வேச்வரனின் தண்டனைக்கு இலக்கான மூன்றுவிதமான அதிகாரிகளுடைய (சரீரமே ஆத்மா என்று உள்ளவர், தங்களைச் சுதந்திரமானவர் என்று எண்ணுபவர், மற்ற தேவதைகளுக்கு வசப்பட்டவர்) எல்லையற்ற காலமாகச் சேர்க்கப்பட்ட நல்வினைகள் மற்றும் தீவினைகள் ஆகிய இரண்டும், அவச்ய மநுபோக்தவ்யம் க்ருதம் கர்ம சுபாசுபம் நாபுக்தம் க்ஷீயதே கர்ம கல்பகோடி சதைரபி - முன்பு செய்யப்பட்ட பாவ புண்ணியங்கள் என்ற கர்மங்களின் பலன்களை அனுபவித்தே தீரவேண்டும்; நூறு கோடி கல்ப காலங்கள் ஆனாலும் கர்மங்கள் அனுபவிக்காமல் கழியாது - என்ற விதிப்படி, அவற்றின் பலன்களை அனுபவிக்காமல் கர்மங்கள் கழியாது என்பதால் “அனுபவித்தே கழியவேண்டும்” என்று அருளிச்செய்தார். ஸர்வேச்வரனின் அனுக்ரஹத்திற்கு இலக்கான இருவிதமான அதிகாரிகளில், கர்ம ஞான பக்தி உபாயங்களில் இழிகின்ற உபாயாந்தர நிஷ்டன் (மற்ற உபாயங்களில் ஈடுபட்டவன்) கர்மயோகம், ஞானயோகம் மற்றும் பக்தியோகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் நிலை நிற்கிறான்; அப்போது அதனையே அவனுடைய வினைகளுக்கான பிராயச்சித்தம் என்று கொண்டு, ஸர்வேச்வரன் அனைத்து கர்மங்களையும் போக்கிவிடுகிறான்; ஆகவே இப்படிப்பட்ட அதிகாரிக்கு கர்மங்கள் பிராயச்சித்தம் மூலம் அழிவதாக உரைத்தார். ப்ரபத்தியில் ஈடுபட்டு சரணாகதி செய்த ஒருவன் ஸர்வேச்வரனைப் பற்றும்போது எல்லையற்ற காலமாக தான் செய்தபடி உள்ள கர்மவினைகளை எண்ணி அச்சம் கொள்கிறான்; அவற்றைச் ஸர்வேச்வரன் பொறுத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக பெரியபிராட்டியைத் தனக்குப் புருஷகாரமாகக் (சிபாரிசு செய்பவளாக) கொள்கிறான்; இதனைக் கண்ணுற்ற ஸர்வேச்வரன் பெரியபிராட்டிக்காக, இவன் செய்த அபராதங்கள் அனைத்தையும் பொறுத்துக் கொள்கிறான்; இவனை ஏற்றுக்கொண்டு, இவனுடைய நல்வினை மற்றும் தீவினைகளைப் போக்குகிறான்; எனவே இந்த அதிகாரியின் கர்மங்கள் புருஷகாரத்தால் அழியும் என்றார்.