Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 266)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
முதல் சொன்ன மூவரும் நிக்ரஹித்துக்கிலக்கு. மற்றை இருவரும் அநுக்ரஹத்துக்கிலக்கு.
ஆக, உத்தேச்யாதி பேதத்தாலே யிவர்களுக்குண்டான அந்யோந்ய விசேஷத்தை தர்சிப்பித்தார் கீழ்; இவர்களில் பகவத்விஷயத்தோடு ஒட்டற நின்ற மூவர்க்கும் பகவத்விஷயத்தையே பற்றி நின்ற இருவருக்குமுண்டான விசேஷத்தை தர்சிப்பிக்கிறார் மேல் (முதல் சொன்ன மூவரும்) என்று தொடங்கி.
– உத்தேச்யன், உபாயம் மற்றும் உபேயம் ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகள் காரணமாகப் பலவிதமான அதிகாரிகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளைக் கடந்த சூர்ணையில் அருளிச்செய்தார். மேலே கூறப்பட்ட ஐந்துவிதமான அதிகாரிகளில், பகவத் விஷயத்துடன் சிறிதும் ஸம்பந்தம் இல்லாமல் உள்ள மூவருக்கும் (தேஹமே ஆத்மா என்று உள்ளவர்கள், தன்னைச் சுதந்திரமானவர்கள் என்று எண்ணுபவர்கள், மற்ற தேவதைகளுக்கு வசப்பட்டவர்கள்), பகவத் விஷயத்தை மட்டுமே பற்றி நிற்கும் இருவருக்கும் (கர்மயோகம் போன்ற மற்ற உபாயங்களைக் கைக்கொள்பவர்கள், ப்ரபத்தி உபாயத்தில் ஈடுபட்டவர்கள்) இடையே உள்ள வேறுபாட்டை அடுத்து அருளிச் செய்கிறார்.
– அதாவது, தேஹாத்மாபிமாநமும் ஸ்வஸ்வாதந்த்ர்யமும் அந்யசேஷத்வமுமாகிற விவற்றுக்கு அவ்வருகொன் றறியாமையாலே, பகவதந்வயகந்த ரஹிதரான மூவரும், “க்ஷிபாமி” என்கிற பகவந் நிக்ரஹத்துக்குக்கு விஷயம்; ப்ரக்ருதே: பரமாய் பகவதநந்யார்ஹசேஷமான ஸ்வரூபத்தை யறிந்து பகவதநுபவ கைங்கர்யங்களைப் புருஷார்த்தமாகக் கொள்ளுகையாலே அநந்யப்ரயோஜநராய், கர்மஜ்ஞாநாதிகளான வுபாயாந்தரங்களிலும் ப்ரபதநத்திலும் நிஷ்டரான விருவரும் “ததாமி”, “மோக்ஷயிஷ்யாமி” என்கிற பகவதநுக்ரஹத்துக்கு விஷயமென்கை.
சரீரமே ஆத்மா என்ற எண்ணம், தாங்கள் யாருக்கும் வசப்பட்டவர் அல்லவர் என்பதால் சுதந்திரமானவர்கள் என்ற எண்ணம்; மற்ற தேவதைகளுக்கு அடிமைப்பட்டவர்கள் என்ற எண்ணம் ஆகிய மூன்றைத் தவிர வேறு எதனையும் அறியாமல் சிலர் இருப்பர். இப்படிப்பட்டவர்கள் ஸர்வேச்வரனுடன் எந்தவிதமான ஸம்பந்தமும் இல்லாதவர்கள் ஆவர். இப்படிப்பட்ட மூன்று பிரிவினரும், கீதை (16-19) –க்ஷிபாமி – தீய பிறவிகளில் தள்ளுகிறேன் - என்பதற்கு ஏற்ப, ஸர்வேச்வரனின் தண்டனைக்கு இலக்காக இருப்பார்கள். அறிவில்லாத ப்ரக்ருதியின் மாற்றத்தால் எற்படும் சரீரத்தைக் காட்டிலும் வேறுபட்டதும், ஸர்வேச்வரனுக்கு மட்டுமே வசப்பட்டதும் ஆகிய ஆத்மாவின் ஸ்வரூபத்தை இன்னது என்று உணர்ந்து, ஸர்வேச்வரனுடைய அனுபவம் மற்றும் கைங்கர்யம் ஆகியவற்றையே புருஷார்த்தமாகக் கொள்வதால், மற்ற எந்தப் பயனையும் கருதாமல் உள்ளவர்களாக கர்மம், ஞானம், பக்தி போன்ற மற்ற உபாயங்களிலும், ப்ரபத்தியிலும் ஈடுபட்டவர்களான இருவகை அதிகாரிகள் உள்ளனர். இவர்கள் கீதை (10-10) – ததாமி - பக்தியோகத்தை அளிக்கிறேன் - என்றும், கீதை (18-66) – மோக்ஷயிஷ்யாமி - மோக்ஷத்தை அளிக்கிறேன் - என்றும் கூறுவதற்கு ஏற்ப, ஸர்வேச்வரனின் அனுக்ரஹத்துக்கு இலக்காக உள்ளவர்கள் ஆவர்.