Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 265)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
தேஹாத்மாபிமானிகளுக்கு உத்தேச்யர் தேஹவர்த்தகரான மநுஷ்யர்கள், உபாயம் அர்த்தம், உபேயம் ஐஹிகபோகம்; ஸ்வதந்த்ரர்க்கு உத்தேச்யர் ஸ்வர்க்காதி போகப்ரதர், உபாயம் கர்மாநுஷ்டாநம், உபேயம் ஸ்வர்க்காதி போகம்; அந்யசேஷபூதர்க்கு உத்தேச்யர் ப்ரஹ்மருத்ராதிகள், உபாயம் தத்ஸமாச்ரயணம், உபேயம் தத்ஸாயுஜ்யம்; உபாயாந்தர நிஷ்டர்க்கு உத்தேச்யன் தேவதாந்தர்யாமியான ஸர்வேச்வரன், உபாயம் கர்ம ஜ்ஞாந பக்திகள், உபேயம் பகவதநுபவம்; ஸ்வப்ரயோஜநபரர்க்கு உத்தேச்யன் நெஞ்சினால் நினைப்பான் யவனென்கிறவன், உபாயம் ஸ்வகீய ஸ்விகாரம், உபேயம் ஸ்வார்த்த கைங்கர்யம்.
அது தன்னையடையே யுபபாதிக்கிறார் மேல் (தேஹாத்மாபிமாநிகளுக்கு) என்று தொடங்கி.
– கடந்த சூர்ணையில் கூறியதை விளக்குகிறார்.
– அதாவது, தேஹத்தையே தானாக வபிமாநித்திருக்குமவர்களுக் குத்தேச்யர், தாரக போஷக போக்ய பதார்த்தங்களையிட்டு தேஹத்தை நன்றாக வளர்த்துக் கொண்டு போரும் மநுஷ்யர்; அபிமத ஸித்திக்குபாயம், ஸுவர்ணாதியான தநம்; அபிமதமான உபேயம், இஹலோகத்திலுண்டான ஸ்த்ர் யந்ந பாநாதி விஷயாநுபவம். தேஹாதிரிக்தனாயிருப்பானொரு ஆத்மா உளன்; அவன்றான் ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வ போக்த்ருத்வ யுக்தனாயிருக்க மென்கிற மாத்ரத்தை சாஸ்த்ர முகத்தாலே யறிந்து, தங்களை ஸ்வதந்த்ரராக நினைத்திருக்குமவர்களுக் குத்தேச்யர், அநுஷ்டித்த ஸாதநத்துக் கநுகுணமாக ஸ்வர்காத் யாமுஷ்மிக போகங்களைக் கொடுக்கும் அக்நீந்த்ராதி தேவதைகள்; உபாயம் “ஜ்யோதிஷ்டோமேந ஸ்வர்க்காமோ யஜேத” இத்யாதிகளாலே சொல்லப்படுகிற பலாபிஸந்தி ஸஹிதமான யாகாதி கர்மாநுஷ்டாநம்; உபேயம், ஐஹிக போகாத் விலக்ஷணமான ஸ்வர்காத் யநுபவம்; ஜகத்து தைவாதீநமென்னுமத்தை சாஸ்த்ரங்களிற் கேட்கையாலே சேஷத்வத்தை யிசைந்து வைத்தே அத்தை பரதேவதா பர்யந்தமாகப் போகவறியாதே, ஆபாத ப்ரதீதி ஸித்தங்களிலே, ஒன்றைப் பற்றி நிற்குமந்ய சேஷபூதர்க் குத்தேச்யர் ஜகத் ஸர்காதி கர்த்ருதயா பரத்வ புத்த்யர்ஹரான ப்ரஹ்ம ருத்ராதிகள்; உபேயம் துராராதரானவர்கள் பக்கல் பண்ணும் துஷ்கர ஸமாச்ரயணம்; உபேயம் அவர்களோடு ஸமாநபோகனாகையாகிற ஸாயுஜ்யம்; “ஸாயுஜ்யமுபயோரத்ர போக்தவ்யஸ்யா விசிஷ்டதா, ஸார்ஷ்டிதாதத்ர போகஸ்ய தாரதம்ய விஹீநதா” என்னக்கடவதிறே. ஆத்மஸ்வரூபம் பகவதநந்யார்ஹ சேஷமென்னுமித்தை வேதாந்த முகேந அறிந்து வைத்தே அபிமத லாபத்துக் கவன்றன்னையே யுபாயமாகப் பரிக்ரஹிக்க வறியாதே உப்பாயாந்தர நிஷ்டரானவர்களுக்கு உத்தேச்யன் அக்நீந்த்ராதி தேவதைகளுக் கந்தர்யாமியான வீச்வரன். இது கர்மயோகத்துக்கு ஸ்வரஸம்; ஜ்ஞாநயோக பக்தியோகங்களுக்கு அஸாதாரண விக்ரஹ விஷயத்வமுண்டேயாகிலும் அவை கர்மாநுஷ்ட்டாநம் தளமாக வெழுந்திருந்தவையாகையாலும், கர்மாராத்யனான வவனே ஸ்வாஸாதரண விக்ரஹ விசிஷ்டவேஷத்தை நமக்கு ப்ரகாசிப்பித்ததானென்னும் நினைவு நடக்கையாலும், தேவதாந்தர்யாமியே யுத்தேச்யனாகச் சொல்லுகிறதென்று கொள்ள வேணும். உபாயம், தனித்தனி மோக்ஷ ஸாதநதயா சாஸ்த்ர ஸித்தங்களான கர்ம ஜ்ஞாந பக்தி யோகங்கள்; இவை தனித்தனி யுபாயமாமிடத்தில் ஓரொன்றுக்கு மற்றை யவையிரண்டும் அங்கமாயிருக்கும். “ஜ்ஞாந பக்தியந்விதம் கர்ம ஜநகாதிஷு த்ருச்யதே, கர்ம பக்த்யந்விதம் ஜ்ஞாநம் ப்ராயேண பரதாதிஷு; கர்ம ஜ்ஞாநாந்விதா பக்தி: ப்ரஹ்லாத ப்ரமுகாச்ரய” என்னக்கடவதிறே. அன்றிக்கே (கர்மஜ்ஞாநபக்திகள்) என்கிற விடத்திலே, வேதாந்த மர்யாதையாலே கர்ம ஜ்ஞாநாநு க்ருஹீதையான பக்தியே யுபாயமாய், ததங்கதயா கர்மஜ்ஞாநங்களை யுபாயமென்று உபசரித்துச் சொல்லுகிறதாகவுமாம். உபேயம் “ஸோச்நுதே ஸர்வாந் காமாந் ஸஹப்ரஹ்மணா விபச்சிதா” இத்யாதி ச்ருதிகளாலும், “நிரஸ்தாதிசயாஹ்லாத ஸுகபாவைக லக்ஷணா பேஷஜம் பகவத் ப்ராப்திர் ஏகாந்தாத்யந்திகீ மதா” இத்யாதி ச்ருத் யுபப்ரும்ஹணங்களாலும் சொல்லப்படுகிற நிரதிசயாநந்தரூப பகவதநுபவம். இந்த ச்லோகத்தில் “பகவத் ப்ராப்தி:” என்கிறவிது பகவதநுபவமாகவிறே நம்மாசார்யர்கள் ஸ்வப்ரபந்தங்களிலே யருளிச்செய்தது. கர்மாத்யுபாயங்களில் துஷ்கரத்வ புத்தியாலே யவற்றை விட்டு ஸுகரத்வ புத்த்யா ப்ரபத்தியிலே யிழிந்த ஸ்வப்ரயோஜநபரர்க்கு உத்தேச்யன், “நெஞ்சினால் நினைப்பான் யவன்” என்கிறபடியே, ஆச்ரிதர் தங்கள் நெஞ்சாலே யாதொரு த்ரவ்யத்தைத் தனக்குத் திருமேனியாகக் கோலினார்கள், அத்தையே தனக்குத் திருமேனியாக வபிமாநித்து அதிலே அப்ராக்ருத விக்ரஹத்தில் பண்ணுமாதரத்தைப் பண்ணிக்கொண்டு அத்யந்த ஸுலபனாயிருக்கிற அர்ச்சாவதாரமான ஸர்வேச்வரன்; உபாயம், அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்டப்ராப்திக்கு மவனை யுபாயமாக நினைத்து தான் பற்றின பற்று; உபேயம், தனக்குகப்பாகப் பண்ணும் கைங்கர்யம்.
– (தேஹாத்மாபிமானிகளுக்கு உத்தேச்யர் தேஹவர்த்தகரான மநுஷ்யர்கள், உபாயம் அர்த்தம், உபேயம் ஐஹிகபோகம்) - சரீரத்தையே ஆத்மா என்று எண்ணியபடி உள்ளவர்களால் விரும்பப்படுகிறவர்கள் யார் என்றால் சரீரத்திற்குத் தாரகமாக உள்ள சோறு, போஷகமாக உள்ள தண்ணீர், இன்பமாக உள்ள வெற்றிலை போன்றவற்றை எப்போதும் எண்ணியபடியே தங்கள் சரீரத்தை நன்றாக வளர்ந்துக் கொள்பவர்கள் ஆவர். இவர்கள் விரும்பும் பலன்களை அளிக்கவல்லது எதுவென்றால் தங்கம் போன்ற செல்வங்கள் ஆகும். இவர்கள் அடைய விரும்பும் பேறு என்னவென்றால் இந்த உலகில் உள்ள பெண்கள், சோறு, தண்ணீர் போன்றவையே ஆகும். – (ஸ்வதந்த்ரர்க்கு உத்தேச்யர் ஸ்வர்க்காதி போகப்ரதர், உபாயம் கர்மாநுஷ்டாநம், உபேயம் ஸ்வர்க்காதி போகம்) - இவர்கள் யார் என்றால், “சரீரத்தைக் காட்டிலும் வேறுபட்டதான ஆத்மா என்று ஒருவன் உள்ளான். அவன் அறிபவனாகவும் செயல்களைச் செய்தபடி உள்ளவனாகவும், அனைத்தையும் அநுபவிப்பனாகவும் உள்ளான்”, என்பதைச் சாஸ்த்ரங்களின் மூலம் தெளிவாக அறிந்துள்ளபோதிலும், தாங்கள் யாருக்கும் வசப்படாத ஸ்வதந்த்ரமானவர்கள் என்று எண்ணியிருப்பவர்கள் ஆவர். இவர்களுக்கு உத்தேச்யர் யார் என்றால் – செய்யப்பட்ட உபாயங்களுக்கு ஏற்ற பலன்களான ஸ்வர்க்கம் உள்ளிட்ட மேலுலக இன்பமான பயன்களை அளிக்கின்ற அக்னி, இந்திரன் போன்றவர்கள் ஆவர். இவர்களுக்கு ஏற்ற உபாயமாக உள்ளது எது என்றால், ஜ்யோதிஷ்டோமேந ஸ்வர்க்காமோ யஜேத - ஸ்வர்க்கத்தை விரும்பும் ஒருவன் ஜ்யோதிஷ்டோமம் போன்ற யாகங்களை இயற்றவேண்டும் - என்னும் வாக்கியங்களால் கூறப்படும் பலனை எண்ணியபடி கூடிய யாகம் போன்றவற்றை இயற்றுதலே ஆகும். இவர்களுக்கு உபேயம் எது என்றால் – இந்த உலகில் உள்ள இன்பங்களைக் காட்டிலும் வேறுபட்டதான ஸ்வர்க்கம் போன்றவற்றின் அனுபவம் ஆகும். – (அந்யசேஷபூதர்க்கு உத்தேச்யர் ப்ரஹ்மருத்ராதிகள், உபாயம் தத்ஸமாச்ரயணம், உபேயம் தத்ஸாயுஜ்யம்) - இந்த உலகமானது அனைத்து பலன்களையும் தேவர்களிடமிருந்தே பெறுகிறது என்பதை மட்டும் சாஸ்த்ரங்களிலிருந்து தெரிந்து கொண்டு, ஆத்மாவானது அப்படிப்பட்ட தேவர்களுக்கு அடிமைப்பட்டது என்று அறிகின்றனர். ஆயினும் அந்தத் தேவர்களின் அந்தராத்மாவாக உள்ள ஸர்வேச்வரனே, அந்தத் தேவர்கள் மூலம் தங்களுக்குப் பலன் கொடுக்கிறான் என்று அறிந்து கொள்ளாமல், அந்தத் தேவர்களையே தங்களுடைய தெய்வங்களாகக் கொள்பவர்கள் அந்யசேஷபூதர் ஆவர். இவர்களுக்கு உத்தேச்யர் யார் என்றால் – இந்த உலகைப் படைத்தல், அழித்தல் போன்ற செயல்களைச் செய்வதனால் அவர்களே பரம்பொருள் என்று பலராலும் தவறாக எண்ணத்தக்கவர்களாக உள்ள நான்முகன், சிவன் போன்றவர்கள் ஆவர். இவர்களுக்கு ஏற்ற உபாயம் எது என்றால் – எளிதாக ஆராதிக்க இயலாமல், மிகுந்த சிரமத்துடன் ஆராதிக்க வேண்டியவர்களான இந்தத் தேவர்கள் விஷயத்தில் செய்யும் ஆராதனம் ஆகும். இவர்களுக்கு ஏற்ற உபேயம் எதுவென்றால் - தேவர்களுக்கு ஒத்த இன்பத்தை அடைவதான ஸாயுஜ்யம் ஆகும். ஸாயுஜ்யமுபயோரத்ர போக்தவ்யஸ்யா விசிஷ்டதா, ஸார்ஷ்டிதாதத்ர போகஸ்ய தாரதம்ய விஹீநதா - மோக்ஷத்தில் ஜீவன் மற்றும் ஸர்வேச்வரன் ஆகிய இருவராலும் அனுபவிக்கப்படும் பொருள்கள் சமமாக உள்ளதே ஸாயுஜ்யம் எனப்படும்; அனுபவிக்கப்படும் பொருள்களை அனுபவிக்கும்போது ஏற்றத்தாழ்வு இன்றி இருப்பதே ஸார்ஷ்டிதா எனப்படும் – என்றது காண்க. – (உபாயாந்தர நிஷ்டர்க்கு உத்தேச்யன் தேவதாந்தர்யாமியான ஸர்வேச்வரன், உபாயம் கர்ம ஜ்ஞாந பக்திகள், உபேயம் பகவதநுபவம்) - ஆத்மஸ்வரூபம் என்பது ஸர்வேச்வரனுக்கு மட்டுமே வசப்பட்டது என்பதை வேதாந்தங்கள் மூலம் அறிந்துள்ள போதிலும், தாங்கள் விரும்பும் பலனைப் பெறுவதற்கு அவனைப் பற்றவேண்டும் என்று அறியாமல், கர்மயோகம் போன்ற மற்ற உபாயங்களைப் பற்றுபவர்கள் உபாயாந்தர நிஷடர்கள் ஆவர். அவர்களுக்கு உத்தேச்யர் யார் என்றால் – அக்னி, இந்திரன் போன்ற அனைத்து தேவர்களுக்கும் அந்தர்யாமியாக உள்ள ஸர்வேச்வரனே ஆவான். இத்தகைய நிலை கர்மயோகத்தைக் கைக்கொண்டவர்களுக்குப் பொருந்தும். ஆனால் ஞானம் மற்றும் பக்தி யோகங்களைக் கைக்கொண்டவர்களுக்கு இது பொருந்தாதே என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார். ஞானயோகம் மற்றும் பக்தியோகம் ஆகியவற்றிலும் ஸர்வேச்வரனின் திருமேனியே உபாஸிக்கத்தக்கது என்றுள்ளது; இப்படியாக உள்ள இவை இரண்டும் கர்மயோகத்தின் அடிப்படையில்தான் உள்ளன; ஆகவே கர்மங்கள் மூலம் ஆராதிக்கப்படும் ஸர்வேச்வரனே, தனக்கான விக்ரஹத்துடன் கூடிய தன்மையை நமக்கு வெளிப்படுத்தினான் என்ற எண்ணம், ஞானம் மற்றும் பக்தியோகங்களில் ஈடுபட்டவர்களுக்கு எழுவது இயல்பே ஆகும். எனவே இப்படிப்பட்டவர்களுக்கும், தேவர்களின் அந்தர்யாமியான ஸர்வேச்வரனே உத்தேச்யன் என்றே கொள்ளவேண்டும். இவர்களுக்கான உபாயம் எவை என்றால் – சாஸ்த்ரங்களில் தனித்தனியே உரைக்கப்படும் கர்மயோகம், ஞானயோகம் மற்றும் பக்தியோகம் ஆகியவையே ஆகும். இவை தனித்தனியே உபாயங்களாக நிற்கும்போது மற்ற இரண்டும் அதன் அங்கங்களாகின்றன; கர்மயோகத்திற்கு மற்ற இரண்டும் அங்கங்கள் என்பது போன்று கொள்க. ஜ்ஞாந பக்தியந்விதம் கர்ம ஜநகாதிஷு த்ருச்யதே, கர்ம பக்த்யந்விதம் ஜ்ஞாநம் ப்ராயேண பரதாதிஷு; கர்ம ஜ்ஞாநாந்விதா பக்தி: ப்ரஹ்லாத ப்ரமுகாச்ரய – ஞானம் மற்றும் பக்தி ஆகியவற்றுடன் கூடிய கர்மயோகமே ஜனகர் போன்றவர்களிடம் காணப்படுகிறது; கர்மம் மற்றும் பக்தி ஆகியவற்றுடன் கூடிய ஞானயோகமே ஜடபரதன் போன்றவர்களிடம் காணப்படுகிறது; கர்மம் மற்றும் ஞானம் ஆகியவற்றுடன் கூடிய பக்தியோகமே ப்ரஹ்லாதன் போன்றவர்களிடம் காணப்படுகிறது – என்றது காண்க. அல்லது “கர்மஜ்ஞாநபக்திகள்” என்று சூர்ணையில் உள்ளதற்கு வேறுவிதமாகவும் பொருள் உரைக்கலாம். அதாவது வேதாந்தங்களில் கூறப்பட்டது போன்று கர்மம் மற்றும் ஞானம் ஆகியவை மூலம் ஏற்படுகின்ற பக்தியோகம் என்பதே இவர்களுக்கு உபாயமாக உள்ளது; இதற்கு அங்கமாக உள்ள கர்மம் மற்றும் ஞானம் ஆகிய இரண்டும் இங்கு அமுக்கியமாக உரைக்கப்பட்டன எனலாம். இவர்களுக்கான உபேயம் எது என்றால் ஸர்வேச்வரனுடைய அனுபவமே ஆகும். இதனை மேலும் விவரிக்கிறார். தைத்திரீய உபநிஷத் - ஸோச்நுதே ஸர்வாந் காமாந் ஸஹப்ரஹ்மணா விபச்சிதா – அனைத்து திருக்கல்யாண குணங்களையும் பரமாத்மாவுடன் அனுபவிக்கிறான் - என்றுள்ள ச்ருதி வரிகள்; ஸ்ரீவிஷ்ணுபுராணம் (6-5-59) - நிரஸ்தாதிசயாஹ்லாத ஸுகபாவைக லக்ஷணா பேஷஜம் பகவத் ப்ராப்திர் ஏகாந்தாத்யந்திகீ மதா – தனக்கு மேல் ஏதும் இல்லாத ஆனந்தத்தையே ஸ்வரூபமாக உடையதாகவும், சுகமாக உள்ளதையே வடிவமாகக் கொண்டதாகவும், துன்பங்கள் ஏதும் அற்றதாகவும், என்றும் உள்ளதாகவும் இருக்கும் பரமாத்மாவை அடைதலே ஸம்ஸாரம் என்ற நோய்க்கு மருந்து - எனப்படும் வரிகள் – இப்படியாக உள்ள ச்ருதி மற்றும் புராணங்களால் விவரிக்கப்படும் எல்லையற்ற ஆனந்தம் என்பதையே வடிவாக உடைய ஸர்வேச்வரனை அனுபவிப்பதே இவர்களுடைய உபேயமாக உள்ளது. மேலே கூறப்பட்ட ஸ்ரீவிஷ்ணுபுராண ச்லோகத்தில் உள்ள “பகவத் ப்ராப்தி:” என்ற பதத்திற்கு “ஸர்வேச்வரனுடைய அனுபவம்” என்றே நம்முடைய பூர்வர்கள் தங்களுடைய க்ரந்தங்களில் அருளிச்செய்தனர் அல்லவோ? ஸ்வப்ரயோஜநபரர்க்கு உத்தேச்யன் நெஞ்சினால் நினைப்பான் யவனென்கிறவன், உபாயம் ஸ்வகீய ஸ்விகாரம், உபேயம் ஸ்வார்த்த கைங்கர்யம் - கர்மயோகம் போன்ற மூன்றும் கைக்கொள்வதற்கு மிகவும் கடினம் என்று உணர்ந்து, அவற்றைக் கைவிட்டு, செய்வதற்கு மிகவும் சுலபம் என்று அறிந்ததால், ப்ரபத்தி உபாயத்தில் ஈடுபட்டவர்களே ஸ்வப்ரயோஜநபரர் ஆவர். இவர்கள் திருவாய்மொழி (3-6-9) - நெஞ்சினால் நினைப்பான் யவன் – என்பதற்கு ஏற்றபடி உள்ளவர்கள் ஆவர். இவர்களுக்கு ஏற்ற உத்தேச்யன் யார் என்றால் – தங்களுடைய மனதால் எந்த ஒரு வஸ்துவைத் தனது திருமேனியாக எண்ணி ஆராதிக்கிறார்களோ, அந்த வஸ்துவையே தனக்குத் திருமேனியாகக் கொண்டு, அந்த விக்ரஹத்தையே தனக்கு ஏற்றதாக ஆதரம் செய்து, ஆராதிக்க மிகவும் சுலபமாக உள்ள அர்ச்சாவதார ஸர்வேச்வரன் ஆவான். இவர்களுக்கான உபாயம் எது என்றால் - தங்களுக்கு விருப்பம் அல்லாதவற்றை நீக்கியும், விருப்பம் உள்ளதை அடையும்படியும் செய்விக்கின்ற உபாயம் என்று தாங்கள் எண்ணி அடைந்த பற்றுதலே ஆகும். இவர்களுக்கான உபேயம் எது என்றால் – தங்களுடைய உகப்புக்காகச் செய்யப்படும் கைங்கர்யமே ஆகும்.