Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 264)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

இவர்களுக்கு உத்தேச்யரும் உபாயோபேயங்களும் பேதித்திருக்கும்.

இந்த ப்ராதிகூல்யத்தை உபபாதிக்கைக்காக இவர்களுடைய விப்ரதிபத்தி நிபந்தநமான வுத்தேச்யாதி பேதங்களை யருளிச்செய்கிறார் மேல் (இவர்களுக்கு) என்று தொடங்கி.

இவ்விதம் இவர்கள் மெய்யான ஞானத்திற்கு விரோதமான தன்மை கொண்டவர்கள் என்பதை விளக்குவதற்காக, இவர்களுக்கு (ப்ரதிகூலர்களுக்கு) வேண்டப்பட்டவர்கள் போன்ற பலவும் வெவ்வேறு விதமாக உள்ளதை அருளிச் செய்கிறார்.

(உத்தேச்யராகிறார்) ஆதரணீயர். அவர்களாகிறார் - இவ்விடத்தில் ஸ்வாபிமத ப்ரதரானவர்கள். (உபாயங்களாவன) - ஸ்வாபிமத புருஷார்த்த ஸாதநங்கள் . (உபேயங்களாவன) – ஸ்வாபிமத புருஷார்த்தங்கள். இவை (பேதித்திருக்கையாவது) – தத்தத்விப்ரதிபத்த்யநுகுணமாக வேறுபட்டிருக்கை.

(உத்தேச்யராகிறார்) – கடந்த சூர்ணையின் வ்யாக்யானத்தினுடைய இறுதியில் உரைக்கப்பட்ட ப்ரதிகூலர்களால் விரும்பப்படுபவர்கள். அவர்கள் விரும்பும் பலன்களை அளிப்பவர்கள் என்று கருத்து. (உபாயங்களாவன) - அவர்கள் விரும்பும் பலன்களை அளிக்கவல்ல சாதனங்கள். (உபேயங்களாவன) - அவர்கள் அடைய விரும்பும் பலன்கள். இவை அனைத்தும் அவரவர்களின் தன்மைகளுக்கு ஏற்ப வெவ்வேறாகக் காணப்படும்.