Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 263)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
ப்ரதிகூலராகிறார் தேஹாத்மாபிமாநிகளும் ஸ்வதந்த்ரரும் அந்யசேஷபூதரும் உபாயாந்தர நிஷ்டரும் ஸ்வப்ரயோஜநபரரும்.
– ஆக, இப்படி ஸஹவாஸ விஷயமாக திநசர்யையிற் சொன்ன அநுகூலருடைய லக்ஷணத்தையும் தத்ஸஹவாஸ பலத்தையு மருளிச்செய்து, ததநந்தரம் ஸஹவாஸ நிவ்ருத்தி விஷயமாகச் சொன்ன ப்ரதிகூல ரின்னாரென்னுமிட மருளிச் செய்கிறார் மேல் (ப்ரதிகூலராகிறார்) என்று தொடங்கி.
இவ்விதம் சூர்ணை 243ல் கூறப்பட்ட தினசர்யையில் அருளிச்செய்த பழகுவதற்கு ஏற்றவர்களான அநுகூலர்களின் இலக்கணம் என்ன என்பதையும், அவர்களுடன் பழகுவதால் ஏற்படும் நன்மையையும் அருளிச்செய்தார். அடுத்து அதே சூர்ணையில் பழகக்கூடாதவர்கள் என்று கூறப்பட்ட ப்ரதிகூலர் என்பவர்கள் யார் என்பதை அருளிச்செய்கிறார்.
(ப்ரதிகூலராகிறார்) என்றது, ஜ்ஞாநாதி நாசகராகையாலே ஸஹவாஸ யோக்யரல்லராகக் கீழ்ச்சொன்ன ப்ரதிகூலராகிற ரென்றபடி. (தேஹாத்ம அபிமாநிகளாகிறார்) – இத்யாதி. (தேஹாத்ம அபிமாநிகளாகிறார்) காண்கிற தேஹத்துக் கவ்வருகு ஓராத்மா வுண்டென்றறியாதே தேஹத்திலே அஹம் புத்தியைப் பண்ணி அத்தையே யாத்மாவாக வபிமாநித்திருக்குமவர்கள். (ஸ்வதந்த்ரராகிறார்) - தேஹாதிரிக்தமான வாத்ம வஸ்துவை யறிந்திருக்கச்செய்தே அத்தைத் தனக்குரித்தாகவே நினைத்து ஒரு விஷயத்திலும் சேஷத்வத்துக்கிசையாதவர்கள். (அந்யசேஷபூதராகிறார்) - சேஷத்வத்தை யிசைந்திருக்கச்செய்தே அத்தை அப்ராப்த விஷயங்களிலே விநியோகித்திருக்குமவர்கள். (உபாயாந்தர நிஷ்டராகிறார்) - ப்ராப்த சேஷிவிஷய சேஷத்வத்தை யுடையராய்வைத்தே தத்ப்ராப்த்யுபாயம் தச்சரணாரவிந்த சரணாகதி என்றிருக்கை யன்றிக்கே, கர்மாத்யுபாயங்களைப் பற்றி நிற்கிறவர்கள். (ஸ்வப்ரயோஜந பரராகிறார்) - ப்ராப்தசேஷி சரண கமலங்களை யுபாயமாகப் பற்றியிறுக்கச் செய்தே தாங்கள் பற்றின பற்றை யுபாயமாக நினைத்தும், உபேயமான கைங்கர்யத்தை ஸ்வபோக்யமாக நினைத்துமிருக்கிறவர்கள். இப்படி யிருக்கிறவிவர்கள், ப்ரணவத்தில் த்ருதீயாக்ஷரத்தாலே ஆத்மாவினுடைய தேஹாதிரிக்ததையும், ப்ரதமாக்ஷரத்தில் சதுர்த்தியாலே - பகவச்சேஷத்வத்தையும், மத்யமாக்ஷரத்தாலே -ததநந்யார்ஹத்வத்தையும், மத்யம பதத்தாலே அநந்ய சரணத்வத்தையும், சரம பதத்தாலே - அநந்ய போக்யத்வத்தையும் தர்சித்திருக்க மதிகாரிக்கு ப்ரதிகூலரிறே.
(ப்ரதிகூலராகிறார்) - ஞானம், பக்தி போன்றவற்றை அழிப்பவர்கள் என்பதால் பழகுவதற்கு ஏற்றவர்கள் அல்லர் என்று சூர்ணை 243ல் கூறப்பட்ட ப்ரதிகூலர்கள். (தேஹாத்ம அபிமாநிகளாகிறார்) – நாம் கண்களால் காணக் கூடியதான இந்தச் சரீரத்தைக் காட்டிலும் வேறுபட்டதான ஓர் ஆத்மா உண்டு என்பதை அறியாமல், இந்தச் சரீரமே ஆத்மா என்று எண்ணியுள்ளவர்கள். (ஸ்வதந்த்ரராகிறார்) – சரீரத்தைக் காட்டிலும் வேறுபட்ட ஓர் ஆத்மா உண்டு என்பதை அறிந்துள்ளபோதிலும், “இந்த ஆத்மா எனக்கே உரியது, அது மற்ற யாருக்கும் வசப்படுவதை ஏற்க இயலாது”, என்று இருப்பார்கள் (அந்யசேஷபூதராகிறார்) – ஆத்மாவானது ஒருவருக்கு அடிமைப்பட்டது என்று அறிந்துள்ளபோதிலும், அதனை ஸர்வேச்வரன் தவிர வேறு வஸ்துக்களுக்கு அடிமைப்பட்டது என்று எண்ணுபவர்கள். (உபாயாந்தர நிஷ்டராகிறார்) - “நம்மால் அடையத்தக்கவன் ஸர்வேச்வரன் மட்டுமே ஆவான், நாம் அவனுக்கு மட்டுமே அடிமை” என்று அறிந்துள்ளபோதிலும், அவனை அடைவதற்கு அவனுடைய திருவடிகளில் சரணாகதி செய்வது மட்டுமே என்று அறியாமல், கர்மம் போன்ற உபாயங்களில் ஈடுபட்டபடி உள்ளவர்கள். (ஸ்வப்ரயோஜந பரராகிறார்) – தங்களுடைய ஸ்வரூபத்திற்கு ஏற்ற எஜமானனாகிய ஸர்வேச்வரனின் திருவடிகளை மட்டுமே உபாயம் என்று உணர்ந்து, அதனையே சரணாகதி செய்தபோதிலும், தாங்கள் செய்த ப்ரபத்தி என்பதையே உபாயமாக நினைத்தும், புருஷார்த்தமாக உள்ள கைங்கர்யம் என்பது தங்களுக்கு இனிமையாக உள்ளது என்று எண்ணியும் உள்ளவர்கள். இப்படிப்பட்டவர்கள் – “ஓம்” என்னும் ப்ரணவத்தில் உள்ள மூன்றாவது எழுத்தான – “ம” என்பதன் மூலம் ஆத்மாவானது சரீரத்தைக் காட்டிலும் வேறானது என்பதையும், முதல் எழுத்தான “அ” என்பதில் ஏறிக் கழிந்த நான்காம் வேற்றுமை மூலம் ஆத்மா ஸர்வேச்வரனுக்கு அடிமைப்பட்டது என்பதையும், நடு எழுத்தான “உ” என்பதன் மூலம் ஆத்மா ஸர்வேச்வரனை மட்டுமே உபாயமாகக் கொண்டது என்பதையும், இறுதியாக உள்ள “நாராயணாய” என்ற பதம் மூலம் ஆத்மாவானது ஸர்வேச்வரனால் மட்டுமே இனிமையாக அனுபவிக்கத்தக்கது என்பதையும் அறிந்தவர்களான அதிகாரிகளுக்கு முரண்பட்டவர்கள் ஆவர்.