Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 262)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

இவற்றைக் கொண்டு சரமசரீரமென்று தனக்குத்தானே யறுதியிடலாயிருக்கும்.

இவையிப்படி விளைந்து வரப்புக்கால் ப்ராப்தி அணித்தென்று தோற்றியிருக்குமோவென்ன வருளிச்செய்கிறார் (இவற்றைக்கொண்டு) என்று தொடங்கி.

ஞானம் போன்றவை ஒருவனுக்கு உண்டாகும்போது அவன் ஸர்வேச்வரனை அடைகின்ற காலம் நெருங்கிவிடுகிறது என்று எப்படிக் கூற இயலும் என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

– அதாவது, இப்படி மேன்மேலும் புதுக்கணித்து விளைந்து வருகிற ஜ்ஞாந பக்தி வைராக்யங்களைக் கொண்டு, “இனி நமக்கொரு சரீர பரிக்ரஹமில்லை, இது சரம சரீரம்” என்று தன் மநஸ்ஸுக்கே நிச்சயித்துக் கொள்ளலாயிருக்குமென்கை.

– இப்படியாகப் புதிதுபுதிதாக ஏற்படுகின்ற ஞானம், பக்தி மற்றும் வைராக்யம் ஆகியவை மூலம், “இனி நமக்கு அடுத்த சரீரம் (பிறவி) எடுக்கவேண்டிய அவசியம் இல்லை. இதுவே நமக்கு இறுதியான சரீரம்” என்று தனது மனமே நிச்சயம் செய்து கொள்ளலாம்படியாக ஆகிவிடும் – என்கிறார்.