Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 261)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

ஆறு நீர் வரவணித்தானால் அதுக்கீடான அடையாளங்களுண்டாமாபோலே ப்ராப்தியணித்தானவாறே இந்த ஸ்வபாவ விசேஷங்கள் தன்னடையே விளையக் கடவதாயிருக்கும்.

ஏதத் ஸஹவாஸத்தால் இப்படி உறாவுதல் தீர்ந்துகிடக்குமளவோ வென்னில்; இவ்வளவு மன்று, இந்த ஸ்வபாவ விசேஷங்கள் ப்ராப்திக்கு முன்னே பூர்ணமாக விளைந்தறுமென்கிறார் (ஆறு நீர்) என்று தொடங்கி.

– ஒரு சிலருக்கு ஏற்படவுள்ள ஸ்வரூப நாசம் என்பது ஞானம், பக்தி மற்றும் வைராக்யம் ஆகிய மூன்றும் உள்ளவர்களின் தொடர்பு காரணமாக விலகிவிடுமோ என்னும் சந்தேகம் எழலாம். இதற்கு விடை அளிக்கிறார் – அவை விலகுவது மட்டும் அல்ல; இவை இயல்பாகவே இல்லாமல் உள்ளவர்கள், ஸர்வேச்வரனை அடைவதற்கு முன்பாகப் பரிபூர்ணமாக இவை நிறைந்துவிடும் என்கிறார்.

அதாவது வற்றிக் கிடக்கிற ஆறு நீர் வரத்து ஆஸந்நமானவாறே தத்ஸூசகமான மணல் பொசிகை முதலான அடையாளங்களுண்டாமாப்போலே, பகவத் ப்ராப்தி ஆஸந்நையானவாறே தத்ஸூசமாகவிந்த ஜ்ஞாநாதி ஸ்வபாவ விசேஷங்கள் ஸ்வயமேவ விளையக் கடவதாயிருக்குமென்கை.

வற்றிக் கிடக்கின்ற ஓர் ஆற்றில் நீர்வரத்து ஏற்படுவதற்கு முன்பாக, அந்த நீர் வரப்போவதற்கு அடையாளமாக, மண்ணானது ஈரப்பசையை அடைதல் போன்ற தன்மைகளைக் கொள்கிறது. இது போன்றே ஸர்வேச்வரனை சேதநன் அடையும் காலம் நெருங்க நெருங்க, அதற்கு அடையாளமாக ஞானம் போன்றவை தாமாகவே அவனை வந்தடைந்துவிடும் என்று கருத்து.