Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 260)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
ஒரு செய் நிரம்ப நீர் நின்றால் அசல் செய் பொசிந்து காட்டுமாபோலே இவையில்லாதார்க்கு மிவர்களோட்டை ஸம்பந்தத்தாலே உறாவுதல் தீரக் கடவதாயிருக்கும்.
இவர்களோட்டை ஸஹவாஸத்தால் ஸித்திக்கு மதேதென்ன வருளிச் செய்கிறார் மேல் (ஒரு செய்) என்று தொடங்கி.
– மேலே கூறப்பட்டவர்களின் ஸம்பந்தம் காரணமாகக் கிட்டுவது என்ன என்பதை அருளிச்செய்கிறார்
– அதாவது, ஒரு வயலிலே நிறைய நீர் நின்றால் நீரற்று உறாவிக் கிடக்கிற அசல் வயல் ததாஸத்தியால் வந்த பொசிவாலே வாட்டமற்றுக் கிடக்குமாப்போலே, ஜ்ஞாந பக்தி வைராக்யங்களாகிறவிவை யில்லாமையாலே ஸ்வரூபமுறாவிக் கிடக்கிறவர் களுக்கும் இவற்றால் பரிபூர்ணரான விவர்களோட்டை ஸஹவாஸ ரூப ஸம்பந்தத்தாலே இவற்றிலே சிறிதந்வயமுண்டாய் இவை நேராக வில்லாமையாலுண்டான வுறாவுதல் தீரக்கடவதாயிருக்கை.
ஒரு வயலில் நீர் நிரம்ப உள்ளது என்னும்போது, அதன் அருகில் உள்ள நீர் இன்றி இருக்கும் வயலுக்கு, முதல் வயலில் இருந்து நீர் கசிவதால் ஏற்படும் தொடர்பு காரணமாக நீரின்றி உள்ள வயலானது வாட்டம் அடையாமல் இருக்கும். இந்த இரண்டாவது வயல் போன்று ஒரு சிலர் ஞானம், பக்தி, வைராக்யம் ஆகிய ஏதும் இல்லாமல் தங்களுடைய ஸ்வரூபத்தை இழந்து இருக்கக்கூடும். இப்படிப்பட்டவர்கள் இவை பரிபூர்ணமாக உள்ளவர்களுடன் ஸம்பந்தம் ஏற்படுத்திக் கொள்வதன் மூலம், இந்த மூன்றிலும் சிறிதளவு சேர்க்கை ஏற்படுகிறது; இதன் மூலம் இவை இயல்பாக இல்லாத காரணத்தால் ஏற்படவல்ல ஸ்வரூபத்தின் அழிவு என்பது நீக்கப்படுகிறது.