Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 259)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

அநுகூலராகிறார் ஜ்ஞான பக்தி வைராக்யங்கள் இட்டுமாறினாற்போலே வடிவிலே தொடை கொள்ளலாம்படியிருக்கும் பரமார்த்தர்.

இப்படி திநசர்யையி லுக்தமான மங்களாசாஸநத்தினுடைய ஸ்வரூப விருத்தத்வ சங்கையைப் பரிஹரித்த வநந்தரம், “அநுகூல ஸஹவாஸம்” என்றவிடத்திற் சொன்ன அநுகூலருடைய லக்ஷணத்தை யருளிச்செய்கிறார் (அநுகுலர்) என்று தொடங்கி.

– இப்படியாக அன்றாடம் கடைப்பிடிக்கவேண்டிய விதிகளை உரைப்பதான சூர்ணை 243-ல் கூறப்பட்ட மங்களாசாஸநம் என்பது ஆத்ம ஸ்வரூபத்திற்கு முரணானது அல்லவோ என்று எழுந்த சந்தேகத்தை விலக்கினார். தொடர்ந்து அதே சூர்ணையில் அருளிச் செய்யப்பட்ட “அநுகூல ஸஹவாஸம்” என்ற தொடரை எடுத்துக்கொண்டு, அநுகூலர் என்பவர்களின் தன்மை என்ன என்பதை அருளிச்செய்கிறார்.

– (அநுகூலராகிறார்) என்றது, ஜ்ஞாநாதி வர்த்தகராகையாலே ஸஹவாஸ யோக்யராகக் கீழ்ச் சொல்லப்பட்ட வநுகூலராகிறா ரென்றபடி. (ஜ்ஞாந பக்தி வைராக்யங்களாவன) தத்வயாதாத்ம்ய ஜ்ஞாநமும், பகவதேக விஷயையான பக்தியும், ததுபய கார்யமாய் வரும் பகவத் வ்யதிரிக்த விஷயவிரக்தியும்; இவைதான் வைஷ்ணவ அலங்காரங்களிறே. இவற்றையிட்டிறே ஸ்ரீவைஷ்ணவர்களுக் கேற்றஞ் சொல்லுவது. ஆகையிறே, நாதமுநிகளுடைய திவ்ய வைபவத்தை யருளிச்செய்கிற ஆளவந்தார் “அசிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்ய ராசயே, அகாத பகவத் பக்தி ஸிந்தவே” என்றருளிச்செய்தது. (இட்டுமாறினாப்போலே) என்றது, ஒரு பதார்த்தமிருந்த பாத்ரத்திலே பதார்த்தாந்தரத்தையிட்டு முன்பிருந்தத்தை மாற்றினா லதுவே யுள்ளதாய்த் தோற்றுமாப் போலே, இந்த ஜ்ஞாநாதிகள் மூன்றும் ஏகாச்ரயகதமா யிருக்கச்செய்தே, இவற்றி லோரொன்றையே பார்க்குமளவில் ஒன்றையிட்டு மற்றையவற்றை மாற்றினாப்போலே இதுவே யிவ்வாச்ரயத்திலுள்ளதென்று தோற்றும்படி யிருக்கை. (வடிவிலே தொடை கொள்ளலாம்படி யிருக்கையாவது) – இவர்கள் வடிவு கண்டபோதே இவற்றோ டிவர்களுக் குண்டான ஸம்பந்தம் க்ரஹிக்கலாம்படி யிருக்கை. த்யாஜ்யோபாதேய விவேக பூர்வகமான பரிமாற்றத்தாலே, ஜ்ஞாநம் வடிவிலே தொடை கொள்ளலாம்; “ஆஹ்லாத சீத நேத்ராம்பு:”, “காலுமெழா கண்ணநீரும் நில்லா” இத்யாதிப்படியே யிருக்கையாலே பக்தி வடிவிலே தொடை கொள்ளலாம்; இதர விஷயங்களைக் கடைக்கணியாம லிருக்கையாலே வைராக்யம் வடிவிலே தொடை கொள்ளலாம். அன்றிக்கே, ஜ்ஞாந பக்தி வைராக்யங்கள் மூன்றும் நவநவோந்மேஷ சாலிகளாய் வருகையாலே அபூர்வமான ஜ்ஞாநாதிகளையிட்டு பூர்வத்தி லவற்றை மாற்றினாப்போலே தங்கள் வடிவிலே யிவை காணலாம்படி யிருக்கும் பரமார்த்த ரென்னவுமாம். (பரமார்த்தர்) என்றது - ஸம்ஸாரத்தில் பொருந்தாமையாலும் பகவத்விஷயத்தைக் கிட்டப் பெறாமையாலும் இனியிதுக்கு மேலில்லை யென்னும்படியான ஆர்த்தியை யுடையவர்களென்கை.

(அநுகூலராகிறார்) - அனைவரது ஞானம் போன்றவற்றை வளர்ப்பவர்கள் என்பதால் பழகுவதற்கு ஏற்றவவர்கள் என்று சூர்ணை 243-ல் கூறப்பட்ட அநுகூலர் ஆகிறார்கள். (ஜ்ஞாந பக்தி வைராக்யங்களாவன) - உண்மையான பொருளை உள்ளது உள்ளபடி அறியவல்ல ஞானமும், ஸர்வேச்வரனை மட்டுமே விஷயமாகக் கொண்ட பக்தியும், ஞானம் மற்றும் பக்தி ஆகியவற்றின் மூலம் ஏற்படுவதான ஸர்வேச்வரன் நீங்கலாக உள்ள மற்ற விஷயங்களின் மீது ஈடுபாடு இல்லாத தன்மையும் ஆகும். இவையே ஒரு ஸ்ரீவைஷ்ணவனுக்கு ஏற்ற அலங்காரங்களாக உள்ளன. இவை மூலம் மட்டுமே ஒரு ஸ்ரீவைஷ்ணவனுக்கு ஏற்றம் கூறப்படுகிறது அல்லவா? நாதமுனிகளின் திவ்யவைபவத்தை அருளிச்செய்தபோது ஆளவந்தார் ஸ்தோத்ரரத்னத்தில் (1) – அசிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்ய ராசயே, அகாத பகவத் பக்தி ஸிந்தவே - இப்படிப்பட்டது என்று மனதால் எண்ணி அளவிட இயலாததும், வியக்க வைப்பதும், எளிதாகக் கிட்டியதும் ஆகிய ஞானம் மற்றும் வைராக்யத்தின் குவியல் போன்று உள்ளவர்; ஆழ்ந்த பக்தியின் ஸமுத்திரமாகவே உள்ளவர் - என்று போற்றியது காண்க. (இட்டுமாறினாப்போலே) - ஒரு பொருள் இருந்த பாத்திரத்தில் வேறு ஒரு பொருளை வைத்துவிட்டு, இதுவரை இருந்து வந்த பொருளை மாற்றினாலும், முன்பு இருந்த பொருளே உள்ளதாகத் தோன்றுவது இயல்பாகும். இது போன்று ஞானம், பக்தி, வைராக்யம் ஆகிய மூன்றும் ஒரே ஜீவனில் உள்ளபோதிலும் இவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டுமே உள்ளதாகக் கண்டாலும், ஒன்றைத் தவிர்த்து மற்றொன்றைப் பார்ப்பதாகவே எண்ணுவது இயல்பாகிறது. (வடிவிலே தொடை கொள்ளலாம்படி யிருக்கையாவது) - இப்படிப்பட்டவர்களின் உருவத்தைப் பார்த்த உடனேயே இவர்களிடம் ஞானம், பக்தி வைராக்யம் உள்ளது என்று கூறும்படியாக உள்ளது. இவற்றைக் கைவிடவேண்டும், இவற்றைக் கைக்கொள்ளவேண்டும் என்று தெளிவாக அறிந்து, அதன்படி நடந்து கொள்வதால், அவர்களுடைய ஞானம் என்பது அவர்களின் உருவத்திலேயே உள்ளதை எளிதாக உணரலாம். ஆஹ்லாத சீத நேத்ராம்பு: - ஸர்வேச்வரனையே எப்போதும் எண்ணியபடி உள்ளதால் ஆனந்தக்கண்ணீர் பெருகியபடி உள்ளவன் - என்றும், பெரியாழ்வார் திருமொழி (3-3-5) - காலுமெழா கண்ணநீரும் நில்லா - என்றும் கூறுவதற்கு ஏற்ப பக்தி என்பதையும் இவர்களது உருவத்திலேயே காணலாம். மற்ற விஷயங்கள் எதனையும் இவர்கள் காணாமல் உள்ளதால், இவர்களது வைராக்யம் என்பதையும் இவர்களுடைய உருவத்தில் காணலாம். அல்லது வேறுவிதமாகவும் கூறலாம். இவர்களுக்கு உள்ள ஞானம், பக்தி மற்றும் வைராக்யம் ஆகிய மூன்றும் ஒவ்வொரு நொடியும் புதிதுபுதிதாகப் பெருகியபடி உள்ளது; ஆக புதிதாகப் பிறந்த ஞானம் போன்றவை மூலம் முன்பிருந்த ஞானத்தை மாற்றியமைத்தல் போன்றவற்றை இவர்களுடைய வடிவில் காணலாம். (பரமார்த்தர்) - ஸம்ஸாரத்தில் நிற்கின்ற நிலைமையை ஒவ்வொரு நொடியும் பொறுத்துக்கொள்ள இயலாமல், ஸர்வேச்வரனை விரைத்து கிட்ட முடியாமல் உள்ளதால், “இதற்கும் மேல் படவேண்டிய துன்பம் ஏதும் இல்லை” என்று கூறலாம்படியாக உள்ள துன்பம் பொருந்தியவர்கள் என்று கருத்து.