Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 257)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
உகந்தருளின நிலங்களை யநுஸந்தித்தால் ஊணு முறக்கமு மின்றிக்கே இவருடைய யாத்ரையே நமக்கெல்லார்க்கும் யாத்ரையாக வேணும்.
– ஆக, மங்களாசாஸநத்தில் பெரியாழ்வார்க்குண்டான அநவரத நிஷ்ட்டையை தர்சிப்பித்தார் கீழ்; இனிமேல், இவருடைய யாத்ரையே நமக்கெல்லார்க்கும் யாத்ரையாக வேணுமென்று, (உகந்தருளின நிலங்களி லாதராதிசயமும் மங்களாசாஸநமும்) என்று முன்பு திநசர்யையி லுக்தமான மங்களாசாஸநத்தினுடைய அவச்ய கர்த்தவ்யதையை யருளிச்செய்கிறார் (உகந்தருளின நிலங்களை) என்று தொடங்கி.
– இதுவரை, திருப்பல்லாண்டு பாடுவதில் மட்டுமே பெரியாழ்வார் எப்போதும் நாட்டத்துடன் உள்ளதை அருளிச்செய்தார். இனி, இப்படியாக இவர் திருப்பல்லாண்டு பாடிய செயலே நம் அனைவருக்கும் எற்றது என்பதைக் காட்டுகிறார். சூர்ணை 243ல் – உகந்தருளின நிலங்களி லாதராதிசயமும் மங்களாசாஸநமும் – என்றுள்ள, அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய செயல்கள் குறித்துக் கூறப்பட்ட வாக்கியத்தில் உணர்த்தப்படும் மங்களாசாஸநம், எப்போதும் செய்யப்பட வேண்டியது என்று அருளிச்செய்கிறார்.
அதாவது அத்யந்த ஸுகுமாரனான ஸர்வேச்வரன் ஆச்ரித ஸுலபத்வார்த்தமாகத் தன்னை யமைத்துக் கொண்டு “தானுகந்தவூர்” என்னும்படி தானத்யாதரத்தைப் பண்ணி வர்த்திருக்கும் கோயில் திருமலை முதலான திவ்ய தேசங்களை யநுஸந்தித்தால், அபாய பஹுளமான தேசமாகையாலே இங்கெழுந்தருளி நிற்கிற நிலைக்கு ஏதேனுமொரு தீங்குகள்வரில் என்னாகக் கடவது என்னும் வயிறெரிச்சலாலே, ஆஹார நித்ரைகளிலு மந்வயமின்றிக்கே நிரதிசய ப்ரேமயுக்தரான விவ்வாழ்வாருடைய நிரந்தர மங்களாசாஸந யாத்ரையே சேஷபூதரான நமக்கெல் லார்க்கும் யாத்ரையாக வேணுமென்கை.
– மிகுந்த மென்மையான திருமேனியைக் கொண்ட ஸர்வேச்வரன், தன்னை அடைகின்றவர்களுக்குத் தான் எளிதாக அடையப்படும்விதமாகத் தன்னை அமைத்துக் கொள்கிறான். திருநெடுந்தாண்டகம் (6) – தான் உகந்த ஊர் - என்பதற்கு ஏற்ப, அவன் இவ்வாறு நிற்கின்ற திவ்யதேசங்களான திருவரங்கம், திருமலை போன்றவற்றை எண்ணிப் பார்த்தவுடன், “அபாயங்கள் பல உள்ள இந்த உலகத்தில் இப்படியாக இவன் எழுந்தருளியுள்ள நிலைக்கு ஏதேனும் தீமை நேரிட்டால் என்ன ஆகுமோ?”, என்று அச்சம் கொண்டு, உண்பதும் உறங்குவதும் செய்ய இயலாமல், அவனிடம் மிகுந்த காதல் கொண்டதன் காரணமாக, வயிறு கலங்கி பெரியாழ்வார் இருந்தார். இப்படியாக இருந்த இவருடைய திருப்பல்லாண்டு பாடுதல் என்னும் செய்கையே, அவனுடைய அடியார்களான நமக்கும் ஏற்ற செய்கையாக இருக்கவேண்டும்.